பிரம்மஞான சங்கம் (குடி அரசு - கட்டுரை - 23.06.1929)

Rate this item
(0 votes)

தியசாபிகல் சொசைட்டி என்பதாகவும் பிரம்மஞான சங்கம் என்பதாக ஒரு சங்கம் நமது நாட்டில் பார்ப்பனீய மதத்தையும் ஆதாரங்களையும் அஸ்திவாரமாகக் கொண்டு 30 - 40 வருஷ காலமாக இந்தியாவில் செல்வாக்குப் பெற்று வரும் விஷயம் யாவருக்கும் தெரிந்ததாகும்.

பார்ப்பன மதத்தையும் ஆதாரங்களையும் அஸ்திவாரமாகக் கொண்டு வேறு எவ்விதக் கொள்கையுடன் ஏற்படுத்தும் சங்கமோ, இயக்கமோ ஆனாலும் பார்ப்பனர்கள் அதை எவ்விதத்திலும் ஆதரித்தே தீருவார்கள். ஏனெனில் பார்ப்பன மதத்திற்கு மற்றொரு ஆதரவும் உபகரணமும் கிடைத்தது என்கின்ற எண்ணத்தோடு அதை வரவேற்பார்கள். அவர்கள் மதத்திற்கும் ஆதாரத்திற்கும் ஆட்சேபணையோ மறுப்போ கொண்டதான ஏதாவதொன்றைச் சொல்லி விட்டோமேயானால், அது எவ்வளவு நன்மையும் உயர்ந்த தத்துவத்தையும் கொண்டதானாலும் அவற்றை எப்பாடுபட்டாவது ஒழித்துவிட முயற்சி செய்ய வேண்டியது பார்ப்பனர்கள் கடமையும் வழிவழிச் செய்கையுமாகும்.

 

உதாரணமாக, புத்த மதம், சமண மதம் போன்ற ஒழுக்கமும் ஜீவகாருண்யமும் முதன்மையாகக் கொண்ட பிரத்தியட்ச அறிவு மதங்கள் எல்லாம் நமது நாட்டில் இருக்கின்ற இடம் தெரியாமல் போனதும், கொலையும், கள்ளும், பொய்யும், புளுகும், ஜீவஹிம்சையும், மூட நம்பிக்கையும், முட்டாள் தனமும் கொண்ட மதங்கள் எல்லாம் தலைவிரித்து ஆடுவதுமே போதுமான உதராணமாகும். இவற்றுள் மேற்கண்ட பிரம்மஞான சங்கம் என்னும் மதமும் ஒன்றாகும்.

சாதாரணமாக பிரம்மஞான சங்கத்திற்கு வேதம், கீதை, புராணம் இவைகளில் உள்ள தேவர்கள், ரிஷிகள், மகாத்மாக்கள் முதலியவர்கள் எல்லாம் முக்கிய ஆதாரமாகும். அதோடு அவதாரம், மறுபிறப்பு, மகாத்மாக்கள் அவர்களுடன் சம்பாஷித்தல் ஆகியவைகளும் முக்கியக் கொள்கையும் தினப்படி அனுபவமுமாகும். இந்த இருபதாவது நூற்றாண்டில் அதுவும் சயன்ஸ் என்னும் விஞ்ஞானத் தத்துவம் இவ்வளவு தூரம் முற்போக்கடைந்திருக்கும் இக்காலத்தில் சாதாரண மனிதர்கள், அதிலும் ஒழுக்கம் - உண்மை ஆகியவைகளில் சராசரி மக்கள் நிலைக்கு எவ்விதத்திலும் உயர்வு இல்லாதவர்கள் (உதாரணமாக வக்கீல் முதலியவர்கள்) இந்தக் கொள்கைகளை அனுபவிப்பதாகச் சொல்லிக் கொண்டு, அவற்றை மக்களுக்குள் பரப்புவதையும், பார்ப்பனர்களில் பெரிய பெரிய படிப்பாளிகள் என்று சொல்லத் தக்கவர்கள் எல்லாம் இவற்றை நம்புவதாக வேஷம் போட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்கின்ற ஒருவன் இதன் ரகசியம் என்னவாயிருக்குமென்று யோசித்தால், குருட்டு நம்பிக்கைகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் எவ்வளவு கீழான மக்கள் பரப்புவதானாலும் பிரசாரம் செய்வதானாலும், அதனால் எப்படியும் தங்களுக்கு லாபந்தானே என்கின்ற ஒரே கருத்தால்தானே அல்லாமல் வேறல்ல என்பது நன்றாய் புலப்படும்.

 

இதன் பலனாக பார்ப்பன மதக்காரர்கள் அல்லாமல், அநேக கிறிஸ்தவர்களும் மகம்மதியர்களும் மற்றும் பலரும் அப்பார்ப்பன மதத்தை ஒப்புக் கொண்டு அதை ஆதரிக்க முடிந்ததேயொழிய இதனால் பார்ப்பனர்களுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடவில்லை. மேலும், இந்தச் சங்கம் இவ்வளவோடு நிற்காமல் ஒரு புதிய அவதாரத்தை உற்பத்தி செய்ய ஆசைப்பட்டு பல நாளாக முன் ஜாக்கிரதையுடன் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு திடீரென்று ஒரு பார்ப்பனரை கடவுள் அவதாரமாகவும், லோக குருவாகவும், ஒரு பார்ப்பனியை மேரி அவதாரமாகவும் ஆக்கி வெளிப்படுத்தி விட்டார்கள்.

அந்த அவதாரத்தையும், லோக குருவையும் பார்ப்பன வகுப்பில் இருந்தே பொறுக்கி எடுத்து ஏற்படுத்தி விட்டதால் எந்தப் பார்ப்பனரும் (“சங்கராச்சாரி” போல் மதித்து) அதை எதிர்க்காமல் ஒப்புக் கொண்டு வருகிறார்கள். ஆனால், அவற்றை வேறு ஒரு பார்ப்பனரல்லாத வகுப்பில் இருந்து வெளிப்படுத்தி இருந்தால் இந்நேரம் அச்சங்கமே பறந்து போயிருக்கும்.

 

அன்றியும், அந்த “லோக குருவின்” கொள்கைகள் அநேகம் நமது கொள்கையை யொட்டி யதும் பெரிதும் நாமறிந்தவரை குற்றம் சொல்லத் தகாததாகவும் காணப் படுகின்றது என்பதோடு பிரம்மஞான சங்கத்தின் முக்கிய கொள்கைகளைக் கூட ஒரு ஆட்டம் ஆட்டி விட்டது. ஆனாலும் அந்த அவதார லோக குருவுக்கு பகலில் கண் தெரியாமல் வண்டியில் இடித்து மோதிக் காயம் ஏற்பட்டும், அநேகப் பார்ப்பனர்கள் வாய்மூடிக் கொண்டுதான் இன்னமும் அவர் லோககுரு என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட லோககுருவுக்கு இப்போது ஆபத்து வந்துவிட்டது. ஆனால் அந்த ஆபத்து பார்ப்பனர்களாலல்ல. மற்று யாரால் என்றால் பார்ப்பனரல்லாத ஒரு பார்ஸி கனவானால். அவரும் இந்தச் சங்க பிரதானிகளில் முக்கியஸ்தராய் இருந்து தினமும் ரிஷிகளுடனும் மகாத்மாக்களுடனும் பேசிக் கொண்டிருந்தவர்.

ஆனாலும் இந்த பார்ப்பனர்களின் புரட்டுக்களைக் கண்டு இதிலிருந்து பிரிந்து போய் இந்த லோக குருவையும், கன்னிமேரியையும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார். பார்ப்பனர்கள் மறுத்தாலொழிய மற்றும் யார் மறுத்தாலும் மறுப்பில் வெற்றி பெற முடியாது. ஏனெனில் ஏதாவது ஒரு பார்ப்பனன் அவர்கள் காலில் விழுந்து அவரைச் சங்கராச்சாரியைப் போல் விளம்பரப் படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.

என்றாலும், இனி அந்தப் புரட்டுகள் பலிப்பது என்பது சற்று சந்தேகந்தான், ஏனெனில், ஜனங்களுக்கும் விழிப்பு ஏற்பட்டு விட்டதுடன் கோட்டைக்குள்ளாகவே பிரிவினை ஏற்பட்டு விட்டது. அதாவது, திரு.பி.பி. வாடியா என்பவர் எதிர்ப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றார். மற்றபடி வேதங்களுக்கும் கடவுள்களுக்கும் குருமார்களுக்கும் இப்போது ஆபத்துக்கள் வந்ததுபோல் விகிதாசாரம் பிரம்மஞான சங்கத்திற்கும் வந்திருப்பதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இத்தனை காலம் பொறுத்து வந்ததே என்பதுதான் அதிசயப்படத் தக்கதாகும்.

(குடி அரசு - கட்டுரை - 23.06.1929)

Read 49 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.