யோகப்புரட்டு குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.04.1932

Rate this item
(0 votes)

மூச்சடிக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீர திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு "தெய்வீகத்தன்மை" யாதொன்றுமில்லை யென்பதே நமது அபிப்பிராய மாகும். ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை முதலியவை களைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ " தெய்வீகத்தன்மை” இருப்ப தாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமூகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.

இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித் தால் விளங்கும். "ஹட யோகம்" என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி யென்பவர் சென்னை , கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய் விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமையைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார். இதற்குக் காரணம் விஷம் உண்டவுடன் 'ஹட யோகம் ' பண்ணுவதற்குக் கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றது. ஆனால், அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.

யோகத்தில் தெய்வத் தன்மை உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று

மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களையெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வசக்தியென்றும் சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமூகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டு கிறோம். ஆகையால் இனியேனும் இது போன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.04.1932

 
Read 24 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.