மலையாளமும் மாளவியாவும். (குடி அரசு - தலையங்கம் - 12.05.1929)

Rate this item
(0 votes)

தென்னாட்டு பார்ப்பனர்கள் அரசியலிலாவது மத இயலிலாவது சமுதாய இயலிலாவது தங்களுடைய புரட்டுகள் எல்லாம் வெளியாய் விடுவதின் மூலம் செலவழிந்து விட்டால் வடநாட்டிலிருந்து யாராவது ஒருவரைக் கொண்டு வந்து பித்தலாட்டப் பிரசாரம் செய்வது வழக்கம். அது மாத்திரமல்லாமல் தாங்களாக தனித்து வெளியில் புறப்பட்டு பிரசாரம் செய்ய முடியாத பட்சத்திலும் வெளிநாட்டிலிருந்து யாரையாவது பிடித்து வந்து, அவர்கள் மதிப்பின் மறைவில் மேடை மேலேறிப் பேச இடம் சம்பாதித்துக் கொள்வதும் வழக்கம்.

இதுவும் சமீபகாலம் வரை பாமர மக்கள் முழு மோசமாயிருந்த காலம் வரையில்தான் செல்லாய்க் கொண்டு வந்தது. இப்போது அடியோடு இவர்கள் யோக்கியதை வெளியாய் விட்டதால் சிறிது கூட செலாவணி ஆவதற்கில்லாமல் செல்லுமிடங்களிலெல்லாம் சாயம் வெளுத்துப் போய் உண்மை நிறம் வெளியாய்க் கொண்டு வருகின்றது. அதாவது சென்ற வருஷத்திற்கு முன் திரு.காந்தியைக் கூட்டிக் கொண்டு வந்து அவரைத் தங்களிஷ்டப்படி ஆட்டி வைத்து ஊர் ஊராய் திரிந்ததில் இவர்கள் சாயம் வெளுத்ததல்லாமல், அவர் சாயமும் வெளுத்து “என் ராமன் வேறே; என் வருணாச்சிரமம் வேறே” என்று சொல்லி கொண்டு தப்பித்துப் போகப் பட்டபாடு வெகு பாடாய்ப் போய்விட்டதும்; பிறகு திரு பஜாஜ் அவர்களை தருவித்து அவர்களுடன் திரிந்ததில் உள்ள யோக்கியதையும் போய் அவர் தலையில் கைவைத்துக் கொண்டு திரும்பியதும், திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் தாங்கள் தனித்து போக முடியாமல் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாண சுந்தரம், முத்துரங்கம், ஓ.கந்தசாமி, பாவலர், ஜயவேலு, ஷாபிமுகமது, பஷீர் அகம்மது முதலிய நபர்களை கூட்டிக் கொண்டு வெளியில் போவதும், அங்கும் இப்போது எந்த ஊருக்கு போனாலும் எவ்வளவு பயந்து ஒடுங்கி அடக்கமாகப் பேசினாலும் இவர்களைப் பேசவொட்டாமல் திருப்பி அனுப்பிக்கப்படுவதும் பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்களது கூலிப் பத்திரிகைகளும் எவ்வளவுதான் மறைத்தாலும் தாராளமாய் வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றது.

 இந்த இரண்டு மூன்று வாரமாய் திரு.சீனிவாசய்யங்கார் கம்பெனி செல்லுமிடங்கள் பலவற்றில் கூட்டம் போட முடியாமல் திரும்புவதும், கூட்டம் கலைக்கப்பட்டு வருவதும் அவர் கூடச் செல்பவர்களுக்கு நடக்கும் மரியாதைகளும் சேலம், திருச்சி, கோயமுத்தூர் முதலிய ஊர்களில் நடந்த சம்பவங்களே போதுமானது. இவ்வளவும் போதாமல் இந்த வருஷத்திற்கு திரு பண்டிட் மாளவியா அவர்களைத் தருவித்து, கடவுளுக்கும் கோயிலுக்கும் மதத்திற்கும் ராமாயணத்திற்கும் ஆபத்து வந்து விட்டதென்று சொல்லி பிரசாரம் செய்யச் செய்ததில் அவர் சென்றவிடங்களிலெல்லாம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டுத் திணற வைத்து கடைசியாகக் கூட்டம் கலைந்து வீட்டுக்குத் திரும்பும் படியாகி விட்டது.
 பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் பண்டிதரைப் பிடித்து அவர் தலையில் வருணாசிரமத்தையும் கோவிலையும் மதத்தையும் இராமனையும் இராமாயணத்தையும் தூக்கி வைத்து எவ்வளவோ விளம்பரம் செய்தும் ஒரு காசுக்குக் கூட விற்க முடியாமல் போனதோடு திரு.மாளவியாவுக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த யோக்கியதையும் அடியோடு கவிழ்ந்து விட்டதென்றே சொல்லலாம்.

உதாரணமாக கோட்டயத்தில் நடந்த கோவில் பிரவேச மகாநாட்டில் தலைமை வகித்துப் பேசிய விவரமும் அங்கு நடந்த விவரமும் அடுத்த பக்கத்தில் தெரியலாம். ஆனால் அந்த விஷயங்களைப் பார்ப்பனப் பத்திரிகைகள் எவ்வளவோ மறைத்தும் சிறிதாவது வெளியாக வேண்டியதாய் விட்டது.

 அதாவது 11 -  இந்து பத்திரிகை வேண்டுமென்றே அயோக்கியத்தனமாய் அடியோடு மறைத்துவிட்டு “உணர்ச்சியுள்ள வாதங்கள் நடந்தன” என்று மாத்திரம் எழுதி இருக்கிறது.

10 -  “சுயராஜ்ஜியா”வில் “மாளவியாஜி பேசும்போது ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் கூட்டத்தார் பலமாக ஆnக்ஷபணை செய்தார்கள். சரமாரியான கேள்விகள் பல பக்கங்களிலிருந்து புறப்பட்டன” என்றும், “கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் கலகமும் பரபரப்பும் உண்டாயிற்று” என்றும் எழுதி பலர் மேடைக்கு வந்து கண்டித்துப் பேசியதையும் எழுதி இருக்கின்றது.

12-ந் தேதி “மித்திர”னில் திரு.மாளவியா பேசின கான்பரன்சில் திரு.மாளவியாவை கண்டித்து ஒரு தீர்மானம் செய்திருப்பதாகவும், பிரீ பிரசின் பேரால் போடப்பட்டிருக்கிறது. ஆனால் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இன்னவையென்று ஒரு பத்திரிகையாவது எழுதவில்லை என்றாலும், திரு.மாளவியா அவர் பிறந்தது முதல் இதுவரை இதுபோல் ஒரு கஷ்டத்தையும் அவமானத்தையும் அடைந்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம்.

திரு.மாளவியா 'ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம். எனக்கு சாஸ்திரம் தெரியும்' என்று சொன்னவுடன் ஒருவர் எழுந்து ஒரு கிருஸ்தவனையோ முகமதியனையோ இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்று கேட்டவுடன், மாளவியாஜி அதற்கு சாஸ்திரம் பார்த்துதான் சொல்ல வேண்டுமென்று தலைகுனிந்து சொன்னதானது அவரைத் தருவித்தவர் கண்களில் ஜலம் ததும்பும்படி செய்தது.

மறுபடியும் ஒரு கேள்விக்கு அதாவது உமது இந்து யுனிவர்சிட்டி காலேஜில் ஈழவர்களை சேர்த்துக் கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு மாளவியாஜீ “நீங்கள் புலையர்களைச் சேர்த்து கொள்ளுவீர்களா?” என்று கேட்டதும் கூட்டமே ஆம் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னதும், மாளவியாஜியை மூர்ச்சையடையச் செய்துவிட்டது. எனவே மாளவியா நல்ல பாடம் கற்றுக் கொண்டார் என்று சொல்லத்தான் வேண்டும். இதற்கு நேர் எதிரியாகச் சுயமரியாதை கொள்கைகள் அங்கு தாண்டவமாடியதும், அவைகள் ஒரே அடியாய் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அப்போது ஏற்பட்ட உற்சாகமும் அங்கு சமீபத்தில் இருந்து பார்த்தவர்கள்தான் அறியக்கூடும்.

(குடி அரசு - தலையங்கம் - 12.05.1929)

Read 31 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.