மூன்றாவது நாடார் வாலிபர் மகாநாடு குடி அரசு - சொற்பொழிவு - 12.05.1929)

Rate this item
(0 votes)

நாடு மட்டும் தூங்குகிறது? வாலிபர்கள் கவலை எடுக்காததினால்தான். நாம் இதுகாறும் பாடுபட்டும் பிரயோஜனமில்லாமல் முன்னிருந்த நிலையில்தான் இருக்கின்றோம். எப்படி மற்ற நாட்டு வாலிபர்கள் தத்தம் நாடு முன்னேற உயிர்விட்டுக்கூட உழைத்தார்களோ அதுபோல் நமது வாலிபர்களும் உழைக்க முன் வரவேண்டும்.

 

சுயமரியாதை உணர்ச்சியை வாயளவில் மறுக்கின்றார்களே தவிர சுயமரியாதைக் கொள்கைகளையும் திட்டத்தையும் எல்லோரும் ஒப்புக் கொள்கின்றார்கள். சுயமரியாதை உணர்ச்சி தப்பிதமானது என்று சொல்லுகின்றவர்கள் எவரும் இதுவரை நமது கொள்கைகளில் இன்ன இடத்தில் இன்ன பிசகு இருக்கிறது என்று சொல்ல யாரும் முன்வரவில்லை. அவர்கள் இவ்வளவு வேகம் கூடாது, சுமாராயிருக்க வேண்டுமென்கிறார்களே ஒழிய அடியோடு தப்பு என்று கூறுபவர்கள் கிடையாது. ஆனால், சில சுயநலவாதிகள் எலக்ஷன் சமயத்தில், ‘சுயமரியாதை இயக்கம் உலகத்தையே பாழ்படுத்தப் போகிறது,’ ‘நாஸ்திக பிரசாரம் செய்கின்றது’ என்று கூறி விஷமப் பிரசாரம் செய்கின்றனர். இதைப் பற்றி கண்ணியமாய் அபிப்பிராயப் பேதப்படுபவர்கட்கு நாம் சமாதானம் சொல்லலாம். மற்றவர்கட்கு நாம் நியாயம் சொல்ல வேண்டியதில்லை. அவர்களைச் சமாதானப்படுத்த முடியாது. நாம் ஒற்றுமையுடனும், விடா முயற்சியுடனும் பாடுபடுவதுதான் அவர்கட்குத் தக்க பதில் ஆகும்.

 

சுயமரியாதை இயக்கமானது நம் நாட்டிற்கும் உலகத்திற்கும் புதிதல்ல. முக்கியமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறவர்கட்கும் அடிமைப்படுத்தப் பட்டவர்கட்கும் தாழ்த்தப்பட்டவர்கட்கும் சுயமரியாதை இயக்கந் தவிர வேறு இயக்கம் கிடையாது. ஒவ்வொரு நாடும் சுயமரியாதைக் கிளர்ச்சினால்தான் முன்னுக்கு வந்திருக்கின்றன. சுயமரியாதை உணர்ச்சியே சமயம், சமூகம், ஆத்மார்த்தம், அரசியல், பொருளாதாரம் ஆகிய எல்லாத் துறைக்கும் மார்க்கமாகும்.

ஐரோப்பா தேசத்திலே, ஆத்மார்த்த சம்பந்தமாக அடிமைப்பட்டு அஞ்ஞானத்தில் மூழ்கியிருந்த மக்கள் மார்ட்டின் லூத்தர் போன்ற பெரியார்களின் சுயமரியாதைக் கிளர்ச்சியினால்தான் கண்விழித்து எழுந்து இப்போது உலகத்திலே தலைசிறந்து விளங்குகின்றனர். காட்டுமிராண்டிகளாக இருந்த அவர்கள் இப்போது முன்னேற்றப் போட்டியில் முன்னணியிலிருக்கின்றனர். அவர்கள் மத சம்பந்தமான மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்த பிறகே சயன்ஸ் முறைகளைக் கண்டுபிடித்து முன்னேறி வருகிறார்கள். நம் புரோகிதக் கொடுமையைவிட அவர்கள் புரோகிதர்களால் பட்ட கொடுமையும் பழக்கக் கட்டுகளுக்கு கட்டுப்பட்ட அடிமைத்தனமும் இப்போது பறந்து போய் விட்டன. அதுபோலவே ருஷியா முதலிய இடங்களில் பொருளாதார விஷயத்தில் சுயமரியாதை உணர்ச்சி உண்டானதினால்தான் அவர்கள் பொது உடைமை இயக்கம் தோற்றுவித்தனர். நமது அரசாங்கம் அவ்வியக்கத்தை (போல்ஸ்விக் மசோதா) நமது நாட்டில் பரவ விடாமல் செய்ய சட்டம் செய்ய முயலுகின்றார்கள்.

 

மேலும் துருக்கியில் சமுதாய சுயமரியாதை உணர்ச்சி உண்டானதினால் வெள்ளைக்காரர்கள்கூட பயப்படுகின்ற முறையில் அவர்கள் முன்னேறி வருகின்றார்கள். அயர்லாந்துக்காரர்களுக்கு அரசியல் சுயமரியாதை உணர்ச்சி உண்டான பிறகுதான் அவர்கள் விடுதலை பெற்றார்கள். ஜப்பான், சைனா முதலிய நாடுகள் முன்னுக்கு வந்திருக்கின்றன.

சமுதாயம், அரசியல், பொருளாதாரம், ஆத்மார்த்தம், அறிவு ஆகிய எல்லா விஷயத்திலும் நாம் சுயமரியாதை அற்று இருக்கின்றோம் என்பதில் சந்தேகமில்லை. பொருளாதார விஷயத்தில் சுயமரியாதை அற்ற தன்மைக்கு நற்சாட்சி வேண்டுமானால் கூலிகள் வெளிநாடுகட்குச் செல்லுவதே போதும். அதாவது ஒவ்வொரு வாரமும் பதினாயிரக்கணக்கான நமது சகோதரர்கள் மோரிசு, நேட்டால், தென் ஆப்பிரிகா ஆகிய இடங்களுக்குப் பிள்ளைகுட்டி பெண்டுகளுடன் சென்று மானங்கெட்டுச் சாகிறார்கள். ஆத்மார்த்த விஷயத்தில் சுயமரியாதையற்ற தன்மைக்குச் சாட்சி வேண்டுமானால் மோக்ஷத்திற்கென்று பார்ப்பான் காலில் விழுந்து அவன் காலைக் கழுவின தண்ணீரைப் “பாத தீர்த்தம்” என்று பருகுவதினாலேயே விளங்கும்.

அரசியல் சுயமரியாதை அற்றத் தன்மைக்கு ஆதாரம் வேண்டுமானால், நமது அரசியல் பிரதிநிதிகளாக பார்ப்பனர்கள் இருந்து கொண்டு சில வயிற்றுப் பிழைப்புக் கூலிகள் நம்மை ஏமாற்றி வருவதே போதுமானது சமூக விஷயத்தில் நமக்குச் சுயமரியாதை இல்லை என்பதற்கு நாம் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் அழைக்கப்படுவதும், கோயில், தெருவு, குளம், பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் நமக்குச் சமவுரிமை இல்லாததே போதுமானதாகும். ஆகவே, நமக்கு எந்தத் துறையிலும் சுயமரியாதை இல்லை. ஆதலால் இவைகளில் சுயமரியாதை அடைய ஓர் இயக்கம் அவசியமா? இல்லையா? என நீங்களே யோசியுங்கள்.

 

சுயமரியாதை வேண்டும் என்ற அளவில் ஒருவருக்கும் சந்தேகம் இல்லை, அதை என்றும் எல்லோரும் விரும்புகின்றார்கள் என்பதும் எனக்கு தெரியும். அதனால்தான் எனக்கு எவ்வளவோ எதிர்ப்புகள் இருந்தும், இந்த இயக்கத்திலேயே பிராணனை விடவேண்டும். (கை தட்டுதல்) என்ற எண்ணத்துடன் தான் இடைவிடாமல் உழைக்க முன்வந்தேன். அதற்கு உங்களைப் போல பல வாலிபர்கள் உயிர்விடவும் தயாராயிருப்பதாகவும் எனக்கு நன்றாகத் தெரியும். என்னைவிட அவர்கட்கு நன்றாக இந்த உணர்ச்சி பிடித்து விட்டது. ஆதலால் நான் வாலிபர்கட்கு இதைப் பற்றி ஒன்றும் அதிகமாகக் கூற வேண்டியதொன்றுமில்லை. ஒற்றுமையாக இருங்கள். பதட்டம் கூடாது, நமது எதிரிகள் மீது ஆத்திரப்படாதீர்கள்! என்றுதான் நான் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.

சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி பலர் பலவிதமாகச் சொன்னாலும், நாடார் குலத்திலேயே சில எதிர்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. எப்படி இருக்க முடியும்? என்பது எனக்கு விளங்கவில்லை. இன்றைய மகாநாட்டில் காலையில் நாடார் பிரமுகர்களும் மற்றவர்களும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையெல்லாம் தீர்மானமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதாவது அறிவுக்கும் இயற்கைக்கும் நியாயத்திற்கும் ஒத்தவற்றைத்தான் ஒப்புக் கொள்ளுவது என்று தீர்மானித்திருக்கிறார்கள். நான் சொல்லுவதில் செய்வதில் ஏதாகிலும் ஒரு சிறிய விஷயமாவது அறிவிற்கும் இயற்கைக்கும் நியாயத்திற்கும் விரோதமாயிருக்கிறது என்று எடுத்துக் காட்டினால் நான் தூக்குப் போட்டுச் சாகத் தயாராயிருக்கிறேன். சுயமரியாதை இயக்கமானது அறிவு, ஆராய்ச்சி, இயற்கை, நியாயம் ஆகியவைகளையே அடிப்படையாகக் கொண்டது. எனவே, அறிவு, ஆராய்ச்சி இயற்கை தத்துவத்திற்கு இடம் கொடுத்தால் வேறு மூடபழக்கங்கட்கு தானாகவே இடம் இல்லாமல் போய்விடும்.

 

அடுத்த படியாக நாடார் மகாநாட்டில் நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் இடையூறாக இருக்கும்படியானதை நீக்க பெண்கட்கு ஆண்களைப் போல் சமவுரிமை கொடுக்க வேண்டுமெனத் தீர்மானித்திருக்கிறார்கள். இது சுயமரியாதை இயக்கத்தின் ஜீவாதாரமான கொள்கையாகும். செங்கற்பட்டு மகாநாட்டுப் பெண்கள் சம்பந்தமான தீர்மானம் இதுதான். புருஷன் தாசி வீட்டுக்கு போவது குற்றமில்லையானால் ஸ்திரீகள் ஆசைநாயகன் வீட்டுக்குப் போவது குற்றமில்லை. புருஷன் பல பெண்களை மணந்தால் ஸ்தீரீகள் பல புருஷர்களை மணப்பது குற்றமில்லை என்பதுதான் சமவுரிமை என்பதில் அடங்கியது. எனவே நாடார் மகாநாட்டுத் தீர்மானங்கள் சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கட்குச் சற்றும் இளைத்தவையல்ல வென்றே சொல்லுவேன்.

மற்றும் சுயமரியாதை இயக்கம் கடவுளை மதத்தைப் புராணங்களைப் பழக்க வழக்கங்களை குற்றம் சொல்லுகிறது என்று சொல்லுகிறார்கள். ஆனால் அவைகளை எந்த அளவில் குற்றம் கூறுகிறது என்று யோசிக்க வேண்டும். யாராவது இன்றுவரை நான் கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், புராணத்தைப் பற்றியும் எழுதி வருவதைப் பற்றியாவது பேசி வருவதைப் பற்றியாவது குறிப்பிட்டு எடுத்துக் காட்டி சமாதானம் சொல்ல முன்வந்திருக்கிறார்களா? அல்லது இனியாவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன். எனக்குத் தெரிந்தவரை யாரும் இதுவரை எடுத்துக்காட்டக் காணோம். கடவுள் இருக்கின்றது அல்லது இல்லை என்று வாதிடுவது அர்த்தமற்றதாகும். அன்றியும் அது சுலபமான விவகாரமல்ல. இருக்கிறது என்று நிரூபிப்பதைவிட இல்லை என்று நிரூபிப்பவர்களுக்கு கஷ்டம் அதிகம்.

சகோதரர்களே! இதுவரை நம்மைப் பற்றி குற்றம் கூறுகின்றவர்களை ஒன்று கேட்கின்றேன். அதாவது ‘நான் கடவுள் இல்லை என்று சொல்லுவதாக நினைத்துக் கொண்டு கஷ்டப்படுகின்ற சிகாமணிகளே! கடவுள் என்றால் என்ன? நீங்கள் எதைக் கடவுள் என்கிறீர்கள்? அதற்கு நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் குணமும், தன்மையும் என்ன? என்பதை முதலில் சொல்லுங்கள். பிறகுநான் அப்படிப்பட்ட கடவுள் உண்டா? இல்லையா? என்பதைப் பற்றியும், அதற்கும் உங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? என்பதைப் பற்றியும், அதனால் உங்களுக்கு என்ன பயன் உண்டாகும் என்பதைப் பற்றியும் சொல்லுகிறேன்” என்பதுதான்.

 

சகோதரர்களே! என்னை நாஸ்திகன் என்று சொல்லுகின்ற சில “ஆஸ்திகக்” குடுக்கைகளைப் பற்றி எனக்கு நன்றாய்த் தெரியும். இவர்களில் கடவுளுக்கு அர்த்தம் சொன்ன ஒருவர் சமுத்திரந்தான் கடவுள், ஆறுதான் கடவுள், மலைதான் கடவுள், மரம் தான் கடவுள், புஷ்பம்தான் கடவுள், துளிகள்தான் கடவுள் என்று கூறுகிறார். அப்படியானால் நான் இந்த மாதிரிக் கடவுள் இல்லை என்று சொன்னால் மரம் வளராதா? மலை மண்ணாய் விடுமா? ஆறு மேடாய் விடுமா? புஷ்பம் வாசனை இருக்காதா? இந்தக் கடவுளைக் காப்பாற்ற வக்கீல் வேண்டுமா? ஆஸ்தீகச் சங்கம் வேண்டுமா? 63 நாயனார் அவதாரம் வேண்டுமா? என்று கேட்கின்றேன்.

சைவப் பெரியார் கூட்டத்திலுங்கூட மனித வாழ்க்கைக்கும் ஒழுக்கத்திற்கும் கடவுள் உணர்ச்சி வேண்டுவதுதான் என்று தீர்மானித்தார்களேயன்றி, கடவுள் உண்டு இல்லை என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஆதாரமும் தைரியமும் உண்டாகவில்லையே. ஒழுக்கத்திற்கு வேறு சாதனம் இருந்தால் கடவுள் உணர்ச்சி எதற்காக? என்றால் இவர்கள் என்ன பதில் சொல்லுவார்கள். பணம் திருடக் கூடாததற்கு கடவுள் பேரைச் சொல்லி ஒழுக்கம் உண்டாக்கி இருப்பதைவிட, போலீசுக்காரனை வைத்து இருப்பதாலும் திருடினவனைத் தண்டிப்பதாலும் திருட்டுக் குறைந்திருக்கின்றது என்பதை ஒப்புக் கொள்கின்றீர்களா? இல்லையா என்று கேட்கிறேன்.

நமது நாட்டில் ஒழுக்க ஈனத்திற்கு காரணம் அர்த்தமற்ற முறையில் கடவுளைக் கட்டிக் கொண்டழுவதுதான். உண்மைக் கடவுள் ஒழுக்கம் மற்ற ஜீவன்களை இம்சைபடுத்தக்கூடாது என்பதுதான் என்று உணர்வானானால் நாட்டில் ஒழுக்கமும் அன்பும் இரக்கமும் எவ்வளவு தாண்டவமாடுமென்பதை நினைத்துப் பாருங்கள். குழந்தைப் பருவத்தில் அக்குழந்தை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத காலத்தில் பெற்றோர்கள் அதைக் காப்பாற்றுவதற்காக வெளியில் போகாமல் இருக்கச் செய்வதற்காக அதற்குச் சற்று பயம் கொடுக்க வேண்டி பூச்சாண்டி இருக்கிறது என்று சொல்வதுபோல் கடவுள் உணர்ச்சியும் வேண்டும் என்றால், நான் அடியோடு கூடாது என்று சொல்லப் போவதில்லை. ஆனால் அது 6 வயதாகிய பின் நாம் அதைப் பள்ளிக்கூடத்திற்குப் போகச் சொன்னால் அது பூச்சாண்டி பிடித்துக் கொள்ளுவான், நான் வெளியில் போகமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு அழுதால் நாம் என்ன சமாதானம் சொல்லுவோம்? தலையைப் பார்த்து இரண்டு குட்டு வைத்து கையைப் பிடித்து இழுத்து, பூச்சாண்டி இல்லை, ஒன்றும் இல்லை என்று சொல்லி வெளியில் தள்ளிவிட மாட்டோமா? என்பதை நினைத்துப் பாருங்கள்.

 

அதுபோலவே ஒரு காலத்தில் மக்களைப் பயப்படுத்த பொய் மிரட்டிலும் பயமும் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் அறிவு வளர்ச்சி பெற்றபின் கடவுள் பயத்தை நீக்கி உண்மையும் ஒழுக்கமும் ஆகிய தத்துவங்களைச் சொல்லிக் காட்ட வேண்டாமா? என்று கேட்கிறேன். அன்றியும் கடவுள் பக்தியும், கடவுள் தன்மை அறிந்த ஞானமும் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு திரியும் ஆயிரத்தில் ஒருவன்கூட யோக்கியனாகவும், ஒழுக்கமுள்ளவனாகவும் இருப்பதை நான் பார்க்கவேயில்லை.

உதாரணமாக மடாதிபதிகளையும், ஆஸ்தீக பிரசாரகர்களையும், சைவப் பண்டிதர்களையும், வைணவ பாகவதர்களையும் சற்று ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவர்களிடம் இதுவரை கடவுள் பெயரால் கணக்கற்ற ஒழுக்கவீனங்கள் இருப்பது கண்கூடு. ஒவ்வொரு துறைகளிலும் அவர்களது கூடா ஒழுக்கம் சொல்லித் தீராது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. தவிர எது செய்தாலும் கடவுள் செயல் என நினைப்பதினால் ஒருவனுடைய சொந்த முயற்சி குன்றி சோம்பேறியாவதற்கு இடமுண்டாய் விடுகின்றது. தன் முயற்சி உடைய உலகம் தான் முன்னேற்றமடையும். முயற்சி இல்லாத காரணத்தினாலேயே நம் தேசம் இந்நிலையிலிருக்கிறது.

குறிப்பாக நமது நாடு மிகவும் கேவல நிலையிலிருக்கின்றது. பொறுப்பற்ற வீணர்கள் வீண் வார்த்தையாடவே சுயமரியாதை இயக்கத்தை தூஷிக்கின்றனரே அன்றி நாட்டின் முன்னேற்றத்திற்கோ அறிவின் முன்னேற்றத்திற்கோ ஒழுக்கத்தின் முன்னேற்றத்திற்கோ இதுவரை ஒரு சிறு காரியமும் செய்தவர்களல்லர். ஒரு சிறு தியாகமும் செய்தவர்களல்லர், தவிர பூசைக்காகக் கடவுளுக்கு காசு செலவு செய்யாதவர்கள் எல்லாம் நாஸ்திகர் என்று சிலரால் சொல்லப்படுகின்றது. அப்படியானால் மகமதியர்கள் எல்லாம் நாஸ்திகர்களா? அவர்களைக் கடவுள் காப்பாற்றவில்லையா?

கடவுளுக்குக் காசு செலவு செய்யும் பூசை எதற்கு? அதற்கு வயிறு, பெண்டு, பிள்ளை, கல்யாணம், சாந்திமுகூர்த்தம் முதலியவைகள் உண்டா? அவசியமா? அவசியம் என்பீர்களானால் அப்படிப்பட்ட சாமி நமக்கு கண்டிப்பாக வேண்டாமென்பதோடு அப்படிப்பட்ட சாமி இருக்க முடியாது என்றும் இருந்தாலும் நாம் அதைக் காப்பாற்ற முடியாது என்றுமே சொல்லுகின்றோம். ஏனெனில், இப்படிப்பட்ட தேவையும் சுயநலமும் உள்ள சாமிகள் நமக்கு என்ன நன்மைகளைச் செய்துவிட முடியும்? இவ்வளவு பணச்செலவில் பூசையும் உற்சவமும் பெற்ற கடவுள்கள் இதுவரை நமது மக்களில் 100-க்கு 6 பேரைக்கூட படிக்க வைக்கவில்லையே. கிறிஸ்துவர்களும் வெள்ளைக்காரர்களும் கடவுள் பூசைக்கு தேங்காய் பழம் உற்சவம் செய்யாமல் எவ்வளவு தர்மம் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?

நமது நாட்டில் உள்ள பிரசவ ஆஸ்பத்திரியும் க்ஷயரோக ஆஸ்பத்திரியும், குஷ்டரோக ஆஸ்பத்திரியும், கண் ஆஸ்பத்திரியும், கைத்தொழில் பள்ளிக்கூடமும், சர்வகலாசாலையும், அநாதை ஆஸ்ரமமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சாப்பாடு, கல்வி, கைத்தொழிற் கற்பிக்கும் ஆஸ்ரமங்களும் இவை போன்ற சிறந்த வகைகளெல்லாம் அவர்களுடையவையாகவே இருக்கின்றன. நாம் அவர்களை வைது கொண்டும், பழித்துக் கொண்டும் அவற்றின் பலன்களை மாத்திரம் அனுபவித்துக் கொண்டே வருகின்றோம் ஆனால், நாம் அதைவிட அதிகமான பொருள்களைச் சாமி பூசைக்குச் செலவழித்துவிட்டு அந்தச் சாமிகளால் ஒரு பலனும் அடையாமல் நாமும் மூடர்களாயிருக்கின்றோம். அந்தச் சாமிகளும் கல்லுபோல் அசையாமல் அதே இடத்தில் இருந்து கொண்டு ஒரு நற்பலனும் உண்டாக்காமல் இருக்கிறது. தவிர, நாம் புராணங்களையும் மத ஆதாரங்களையும் குற்றம் சொல்லுகின்றோமாம்.

நாம் மனிதனின் ஒழுக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் அறிவுப் பொருத்தத்திற்கும் உதவி செய்யக் கூடிய எந்தப் புராணங்களையும் வேண்டாமென்று சொல்லவில்லை.

நமது நாட்டையும், அறிவு வளர்ச்சியையும், ஒழுக்கத்தையும் பாழ்படுத்தியது நமது புராணங்களும், அவற்றைப் பிரசங்கம் செய்வதையும் அச்சுப் போட்டு விற்பதையும் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட பண்டிதர்களும் புஸ்தகக் கடைக்காரர்களுமே ஆவார்கள்.

(குறிப்பு: 30.04.1929 பிறையாற்றில் (பொறையாற்றில்) நடைபெற்ற நாடார் வாலிபர்களின் 3 -ஆவது மாநாடு தலைமையுரை.

குடி அரசு - சொற்பொழிவு - 12.05.1929)

Read 38 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.