‘ஆஸ்திக சங்கம்’ - சுயமரியாதைக்கு எதிர்பிரசாரம் (குடி அரசு - தலையங்கம் - 17.03.1929)

Rate this item
(0 votes)

சமீப காலத்தில் சென்னையில் ஆஸ்திக சங்கம் என்பதாக ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாய் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. இதன் தத்துவம் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர்பிரசாரம் செய்வது என்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இச்சங்கத் தலைவர்களும் சூத்திரதாரர்களும் யார் என்று பார்ப்போமானால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு உபயோகப் படுத்தப்பட்டு வரும் காங்கிரசின் பேரால் வயிறு வளர்த்து வந்த நபர்களே யாவார்கள்.

எனவே பிழைப்புக்கு ஆபத்து வந்த ஒரு கூட்டம் தானாகவே ஒன்று சேர நேர்ந்தது ஒரு அதிசயமல்ல, ஆனாலும் அப்படிச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அனுகூலமாக புத்திசாலித்தனமாய் ஒரு வழி கண்டுபிடிக்காமல் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போல சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர்ப்பிரசாரம் செய்ய ஒரு சங்கம் ஏற்படுத்துவதாகவும், அதற்கு ‘ஆஸ்திக சங்கம்’ என்று பெயர் வைத்துக் கொண்டதாகவும் வெளிப்படுத்திக் கொண்டது ஒன்றே போதுமானது இவர்களது முட்டாள்தனத்தை விளக்குவதற்கு. சுயமரியாதை சங்கத்தில் எந்த பாகத்தை அல்லது எந்த கொள்கையை இவர்கள் எதிர்க்கப் போகின்றார்கள் என்று கேட்கின்றோம்.

 

இவர்கள் காங்கிரசின் புரட்டு வெளிப்பட்டு விட்டதால் வேறு வழி கண்டுபிடிக்க வேண்டிய நிமித்தம் சுயமரியாதை இயக்கத்தை “நாஸ்திகம்” என்று சொல்லிக் கொண்டு தாங்கள் அதற்கு எதிர்ப்பிரசாரம் செய்யப் போவதாக சொல்லிக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள். இவர்களின் யோக்கியதையைப் பற்றி மற்றொரு சமயம் யோசிப்போம்.

பொதுவாக, தங்கள் கடவுளைப் பற்றி சுயமரியாதை இயக்கம் என்ன சொல்லுகின்றது என்று பார்த்தால், கடவுளை வணங்க தரகன் வேண்டாம், வணக்கத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டாம் என்று தான் இப்போது சொல்லுகிறது; முதலாவது இதை எதிர்க்க மகமதிய ஷாபி சாயபுக்கும் கிருஸ்தவக் குழந்தைகளுக்கும் அங்கு வேலையே கிடையாது. அவர்களுக்கு தரகர்களும் இல்லை. பூசாரியும் இல்லை. அன்றியும் உருவக் கடவுளே இல்லை. மற்றபடி ஜெயவேலு என்பவரோ தீண்டாதவர் என்று ஒதுக்கித் தள்ளப்பட்டவர். அவருக்கு கோவிலுக்குள் இடமே இல்லை என்று தள்ளி விட்டார்கள். எனவே, அவருக்கு பூசைக்கு சிலவைப் பற்றியும் பூசாரியைப் பற்றியும் கவலையே இல்லை. திரு.கல்யாணசுந்தர முதலியாரோ கோவிலில் சாமி கிடையாது என்பவர். அது மாத்திரம் அல்ல. தான் கோவிலுக்குப் போகும் வழக்கமே இல்லை என்று சொல்லுபவர். அவருக்கும் செலவும் தரகனும் தேவையில்லை.

 

ஒரு சமயம் சுயமரியாதை இயக்கம் சாமியே இல்லை என்று சொல்லுகின்றது என்று யாராவது சொல்ல வருவார்களானால் எங்கு எப்போது யாரால் சொல்லப்பட்டிருக்கின்றது என்று யாராவது சொல்லக் கூடுமா? அந்த விசாரணையே அறிவுக்குப் பொருத்தமற்றது என்றும், அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்றும், ஒருவன் தன் சொந்த அறிவைக் கொண்டு ஒழுக்கமாக நடந்து கொள்ள முடியாமல் போகுமானால் அவனை பயப்படுத்தி ஒழுக்கத்தில் திருப்புவதற்கு சாமியோ, பூதமோ, எதை வேண்டுமானாலும் கற்பித்துக் கொள்ளுவதில் கவலையில்லை யென்றும், ஆனால் அதுவும் அப்படிக் கற்பித்துக் கொண்ட பிறகும் மனிதன் ஒழுக்கமாக நடக்க முடியவில்லையானால் அதற்கு மேல் என்ன சமாதானம் சொல்லுகின்றீர்கள் என்றுதான் கேட்கின்றதே ஒழிய வேறு என்ன கேட்கின்றது?

 

மேலும் கடவுளைப் பற்றி வீண் கவலைப் படாதீர்கள் என்றுதான் சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்றது. ஏனென்றால், அது வெகு காலமாகவே முடிவடைய முடியாத விவகாரத்திற்கு இடமான விஷயம். அநேகர் அநேகவிதமாய் சொல்லி இருக்கின்றார்கள், எழுதி இருக்கின்றார்கள், சொல்லியும், எழுதியும் வருகின்றார்கள். உதாரணமாக ஒருவர் கடவுள் என்பதாக வேறு ஒன்று இல்லை, தானே தான் கடவுள் என்று சொல்லி இருக்கின்றார். ஒருவர் அது ஒரு ஜோதி என்றார். மற்றும் ஒருவர் அது ஒரு சக்தி என்றார். மற்றும் ஒருவர் அது ஒரு தத்துவம் என்றார். மற்றும் ஒருவர் அது இயற்கைத் தோற்றம் என்றார். ஒருவர் கண்ணுக்கும் மனதிற்கும் எட்டாதது என்றார். ஒருவர் வேதங்களும் அறியப்படாதது என்றார். ஒருவர் அது ஒரு மயக்கம் என்றார். ஒருவர் அது ஒரு உணர்ச்சி என்றார். ஒருவர் அது நம்பிக்கை என்றார். ஒருவர் ஒரே கடவுள் என்றார். ஒருவர் பல கடவுள் என்றார். ஒருவர் மனித உருக்கொண்டவர் என்றார். ஒருவர் உருவமே இல்லாதவர் என்றார். ஒருவர் சிவனே கடவுள் என்றார். ஒருவர் விஷ்ணுவே கடவுள் என்றார். ஒருவர் அதை அறிந்தவர்கள் யாரப்பா என்றார். ஒருவர் நம்பினால் தான் உண்டு நம்பாவிட்டால் இல்லை என்றார். ஒருவர் சூனியத்தில் முடிந்தது என்றார். ஒருவர் அன்பு என்றார். ஒருவர் அறிவு என்றார். இப்படி பலவாறாக சொன்ன இவர்கள் எல்லோரும் பெரியோர்கள் தானே தவிர வேறு சாதாரணமான ஆஸ்திகப் பிரசாரகர்களின் யோக்கியதை மாத்திரம் உடையவர்களல்ல என்று மதிக்கப்படுகின்றார்கள். ஆதலாலேயே நாம் அதைப்பற்றிய கவலை எடுத்துக் கொள்ளவில்லையே ஒழிய வேறில்லை.

 

மற்றபடி சுயமரியாதை இயக்கம் சமயத்தை குறை கூறி இருக்கின்றது என்று சொல்வதாயிருந்தால் எந்தச் சமயத்தை என்று கேட்கின்றோம்.

 

இந்து சமயத்தை என்றால் ஆம் கண்டிப்பாக ஆம் என்றே சொல்லுவோம். ஏன் என்றால் அப்படி ஒரு சமயமே இல்லை. அந்த வார்த்தையே பொருளற்றது. அதற்கு ஏதாவது கொள்கைகள் இருக்குமானால் அது பார்ப்பன ஆதிக்கத்திற்காக கற்பிக்கப்பட்டது. அதை நாம் கண்டிப்பாய் ஒப்புக் கொள்ள முடியவே முடியாது. இந்து சமயம் என்பதை ஒழித்தால் ஒழிய மக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியாது.

ஏனெனில் இந்து மதத்திற்கு வேதம் ஆதாரமாம். அதை எல்லோரும் கேட்கவோ, படிக்கவோ, பார்க்கவோ கூடாதாம். ஆனால் அந்தப் படிக்கவோ, பார்க்கவோ, கேட்கவோ கூடாத ஒன்றை நம்புகின்றவனும் ஒப்புக் கொள்ளுகின்றவனுந்தான் இந்துவாம். முதலாவது இந்தக் கொள்கையை ஒப்புக் கொண்டு எவர்கள் தன்னை இந்து சமயக்காரனென்றும் இந்து சமயத்தைக் காக்க ஆஸ்திகப் பிரசாரம் செய்பவனென்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்களே அவர்கள் எல்லோரையும் ஒன்றா முட்டாள்கள் என்றோ, அயோக்கியர்களென்றோ தான் நாம் சொல்லித் தீர வேண்டியவர்களா யிருப்பதற்கு வருந்துகின்றோம்.

தவிர, இந்து சமயக்காரர்கள் என்பவர்களுக்கு தர்ம சாஸ்திரங்களாயும் வேதங்களின் சாரமாயும் (கொள்கைகளாய்) விளங்குவது மனுதர்ம சாஸ்திரமும், பராசர ஸ்மிருதியும் புராணங்களுமேயாகும். உலகத்தில் கடுகளவு சுயமரியாதை உணர்ச்சியும் பார்ப்பனக் கலப்பற்ற சுத்த ரத்தமும் ஓடுகின்ற மனிதன் இவற்றை ஒப்புக் கொள்ளக்கூடும் என்று எதிர்பார்ப்பது மடமையேயாகும்.

 

அப்படி வேறு யார் ஒப்புக் கொள்ளுவதானாலும் நாம் கண்டிப்பாய் அவ்வுணர்ச்சிகளை ஒழிக்கவே உயிர்விட நிச்சயத்திருக்கின்றோம். இதில் சிறிதளவாவது ராஜியோ ரகசியமோ ஒன்றும் கிடையாது என்றே சொல்லுவோம்.

மற்றபடி சைவ சமயத்தையோ, வைணவ சமயத்தையோ நாம் தாக்குவதாக சொல்வதானால், வேதத்தையும் சாஸ்திரத்தையும், புராணங்களையும் தள்ளி விட்டால் சைவத்திற்கும் வைணவத்திற்கும் இடம் எங்கே என்று கேட்கின்றோம். முதலாவது இந்து மதத்தைச் சேர்ந்த அறிவாளிகள் கற்றவர்கள் என்னும் பெரியோர்களாலேயே இழித்துக் கூறப்பட்ட புராணங்களை மாத்திரம் தள்ளி விட்டாலே சைவனுக்கும், வைணவனுக்கும் இடம் எங்கே? அவர்களுக்கு தெய்வங்கள் எங்கே? வைணவத்திலும், சைவத்திலும் உள்ள சமயாச்சாரிகள் எல்லோரும் பாடி இருக்கின்ற பாட்டுகள் பெரிதும் புராணங்களை திருப்பியும் விளக்கியும் சொன்னதோடு கடவுள் கண்ணையும், மூக்கையும், குறிகளையும் வர்ணித்து சொன்னதல்லாமல் வேறு என்ன அதிசயத்தை அற்புதத்தை சொல்லிப் பயன் உண்டாக்கினார்கள் என்று கேட்கின்றோம்.

ஒரு சமயம் சமயாச்சாரிகளை வைகின்றார்கள் என்று சொல்வதானால் சுயமரியாதை இயக்கத்தார் எந்த சமயாச்சாரியை வைகின்றார்கள். முதலாவது அனேக சமயாச்சாரிகளைப் பற்றி அவரவர்கள் கதைப்படி அவரவர்கள் இருந்திருக்க முடியாதென்றே சுயமரியாதை இயக்கத்தார் கருதுகின்றார்கள். 3 வயதில் ஒருவருக்கு கடவுள், கிண்ணியில் பால் கொண்டு வந்து ஊட்டியதையும், அதைக் குடித்த குழந்தை பாடினதையும் போன்ற கதைகளை ஒருக்காலமும் சுயமரியாதை இயக்கத்தார் ஒப்புக் கொள்ள முடியாது. முடிந்தாலும் அந்தக் கதை இப்போது எந்தக் காரியத்திற்கும் மக்களுக்குத் தேவையில்லை. அன்றியும் அதை நம்புவதால் எவ்வித பலனும் உண்டாகப் போவதில்லை என்று சொல்லுகின்றார்கள். அன்றியும் அப்படிப்பட்ட சமயாச்சாரிகள் மீது சுயமரியாதைக்காரருக்கு யாதொரு குரோதமும் இல்லை. ஆனால் அவர் செய்ததாகவும், சொன்னதாகவும் சொல்லும் அநேக விஷயங்கள் ஒழுக்கம் என்று சொல்லப்படுவதற்கு விரோதமாகவும், நீதிக்கு விரோதமாகவும் ஒரு சமூக மக்கள் சுயமரியாதைக்கு ஈனமாகவும் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்கவே மாட்டார்கள். அன்றியும் அதற்கு சுயமரியாதை இயக்கத்தார் காரணஸ்தர்கள் அல்ல. அவர்களைக் கற்பித்து அவர்கள் மீது இம்மாதிரி ஆபாசங்களை ஏற்றின சமயவெறியர்களே பொறுப்பாளிகளாவார்கள்.

 

மற்றும் ஒரு சமயம் சுயமரியாதை இயக்கத்தார் கலைகளை அழிக்கப் பார்க்கின்றார்கள் என்று சொல்ல வருவார்களானால் எந்தக் கலைகளை அழிக்கின்றார்கள் என்று கேட்கின்றோம்.

உதாரணமாக திரு.கல்யாணசுந்தர முதலியாரைப் பற்றியே கேவலமான முறையில். அவரது ஒழுக்கத்தையும், நாணயத்தையும் கண்டித்து இழித்துக் கூறி “கம்பரைவிட” மேலான கற்பனைகளை அமைத்து இலக்கிய, இலக்கணங்களுக்கு ஆதாரமாகவும், மேற்கோளாகவும் கருதும் படியாக அவ்வளவு அற்புதமாய் ஒரு வித்துவான் பாடியிருப்பார்களானால் கலையில் கவலையுள்ள திரு. முதலியார் அதனை பிரசங்கம் செய்வாரா அல்லது அச்சுப் போட்டு விற்பாரா அல்லது குறைந்தபக்ஷம் அக்கலையைப் பற்றினவையாலும் சங்கடப்படாமல் அதை இருக்க வேண்டுமென்று சொல்லுவாரா என்று கேட்கின்றோம்.

அதுபோலவே ஒரு நல்ல ஓவியக்காரன் திரு. முதலியார் மனம் புண்படத்தக்க முறையில் திரு.முதலியாரைப் பற்றியே ஒரு அருமையான ஓவியம் எழுதிக் கொண்டு வந்தால் அந்த ஓவியத்தைக் காப்பாற்ற திரு.முதலியார் ஆசைப்படுவாரா என்று கேட்கின்றோம்.

தவிரவும் அந்தக் கலையும், ஓவியமும் படிக்கும் பார்க்கும் மக்கள் 100-க்கு 99 பேருக்கு மேலாக கலை அறிவும் ஓவிய அறிவும் சிறிதும் இல்லாமல் படித்தபடியும் பார்த்தபடியும் அப்படியே நம்பி நடவடிக்கையில் கொண்டுவருவதாயிருந்தால் அவர்களிடம் கூட அக்கதையின் யோக்கியதையை எடுத்துச் சொல்ல வேண்டாமா என்று கேட்கின்றோம். உதாரணமாக திரு.முதலியார் ராமாயணக் கதையைப் படிக்கின்றார், பிரசங்கம் செய்கின்றார், ராமாயணத்தில் வரும் கதாநாயகர்களைப் பற்றி அதில் கற்பிக்கப்பட்டி ருக்கிறபடியே கருதி விருப்பும் வெறுப்பும் கொள்கிறார். இதைப் பற்றி திரு.முதலியாரை ஒரு அறிவாளி கேள்வி கேட்கும்போது, அது நடந்த சங்கதியல்ல; அது ஒரு கலை என்று சொல்லி மழுப்புகிறார்.

ஆனால், பாமர மக்களிடம் நின்று கொண்டு பேசும் போது, “என் ஆண்டவன் ராமன்” “என் தெய்வம் சீதை” “அயோக்கிய ராக்கதன் ராவணன்” என்று கண்ணில் தாரை தாரையாய் நீர் வடிக்கிறார். எனவே, திரு. முதலியார் ராமாயணத்தைக் கலையாகக் கண்டாரா கற்பனை கதையாகக் கண்டாரா கடவுள் நெறியாகக் கண்டாரா என்று கேட்கின்றோம். அது போலவே பெரிய புராணத்தைப் பற்றிப் பேசும்போது அறிஞர்களிடத்தில் அது ஒரு சையன்ஸ் என்பதும், அது ஒரு சீர்திருத்தக் கொள்கை என்பதும், அது ஒரு கலை என்பதும், இடைச் செருகு என்பதும், அகச்சான்று புறச்சான்று இல்லை என்பதும், பாமர மக்களிடம் புராணப் பிரசங்கம் செய்யும்போது “என் அப்பன்,” “எனது குருநாதன்” உடனே அங்கு சிவபெருமான் ரிஷபாரூடராய் வந்து காக்ஷியளித்தார் என்பதும், தவடை தவடையாய்ப் போட்டுக் கொண்டு கண்ணீர் வடிப்பதும், இரு கையையும் கூப்பிக் கண்களை மூடிக்கொண்டு வாயில் முணுமுணுப்பதும் பார்க்கின்றோம். எனவே இங்கு திரு.முதலியார் பெரிய புராணத்தை கலையாகக் கண்டாரா? கற்பனைக் கதையாகக் கண்டாரா? கடவுள் நெறி உணர்த்த வந்த பெரியார் வாக்காக கண் டாரா அல்லது வயிற்றுப் பிழைப்பிற்கு இதை ஒரு ஆஸ்பதமாகக் கண்டாரா என்று கேட்கின்றோம்.

கடைசியாக, திரு. முதலியாருக்கோ அல்லது அவரது ஆஸ்திக குழாங்களுக்கோ உண்மையில் கடவுளிடத்திலாவது, கடவுள் நெறியிடத்திலாவது, கடவுள் ஒழுக்கத்திலாவது, கடுகளவு நம்பிக்கையோ பக்தியோ இருக்கின்றதா என்றும், தங்கள் தங்கள் சொந்தத்திலாவது குறைந்த அளவு நாணயமோ, ஒழுக்கமோ இருக்கின்றதா என்றும், அவ்வாஸ்திகக் குழாங்களைக் கேட்பதற்கு முன்னால் அவ்வாஸ்திகக் குழாம் யாரை ஏய்க்க இவ் வேடம் பூண்டார்களோ அவர்களைக் கேட்கின்றோம்.

இவ்வாஸ்திகப் பிரசாரம் தவிர இச்சூழ்ச்சியும் சுயமரியாதை இயக்கத்தை அழிக்கவேண்டும் என்கின்ற சூழ்ச்சியும் இவர்களுக்கு உண்மையிலேயே ஆஸ்திகத்தில் அன்பு கொண்டு செய்ய வேண்டியதாயிற்றா அல்லது அக்குழாத்தின் வயிற்றுப் பிழைப்பில் சுயமரியாதை இயக்கம் மண்போட்டு விட்ட வயிற்றெரிச்சலாலும், பார்ப்பனர்கள் அந்தத் தேர்தலுக்கு இதை ஒரு ஆயுதமாக உபயோகித்துக் கொள்ளலாம் எனக் கருதி, கூலி கொடுத்து இக்குழாங்களை உசுப்படுத்தி விட்டதினாலும் செய்ய வேண்டியதாயிற்றா என்று பொது ஜனங்களைக் கேட்கின்றோம்.

தவிர, இக்கூட்டத்தினர்களின் கூச்சலைக் கண்டு ஜஸ்டிஸ் கட்சி யாரிலும் சிலருக்குத் தங்களுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டுக் கிடைக்காமல் போகுமோ என்கின்ற பயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது. அதைப் பற்றி நமக்குச் சிறிதும் கவலையில்லை. நமது இயக்கம் யாருக்கும் ஓட்டு வாங்கிக் கொடுப்பதற்கு அல்ல, எல்லோருக்கும் மானமும் அறிவும் உண்டாக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதில் ஆரம்பிக்கப்பட்டது. சென்ற தேர்தல் தோல்விபோல் இன்னம் 2, 3 தோல்வி கிடைத்தால் கட்டாயம் மானமும் அறிவும் வந்துவிடும் என்றே நினைக்கின்றோம். ஆதலால், நாம் தோல்வியையே வரவேற்கின்றோம். எங்கு வெற்றி தோல்வி ஏற்பட்டாலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு சிறப்பாக சென்னையில் நல்ல கண்ணியமான தோல்வி ஏற்படுமானால் அது சுயமரியாதை இயக்கத்திற்கு மாத்திரமல்ல, ஜஸ்டிஸ் கட்சிக்கு கூட நன்மையைப் பயப்பதாகும். வெளியிடங்களிலும் இரண்டொரு இடங்களில் தோல்வியே விரும்புகின்றோம். ஏனெனில் தோல்விதான் புத்தி கற்பிக்கிறது, வெற்றி ஆணவத்தையும் மயக்கத்தையுமே கற்பிக்கின்றது.

ஜஸ்டிஸ் கட்சியின் வெற்றி தோல்விக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. உதாரணமாக இன்றைய நிலையில் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த அக்கட்சியின் மூளை என்னும் திருவாளர் ஏ.ராமசாமி முதலியாரும் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த திரு. ஆர்.கே. ஷண்முகமும் ஒரு பகுதிக்கு நிற்பார்களானால் திரு.ஷண்முகம் செட்டியாருக்குத்தான் நமக்கு ஓட்டு இருந்தால் கொடுப்போம். அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த அதன் காரியதரிசியும் அக்கட்சிக்காக தள்ளாத வயதில் யாதொரு பிரதிபலனும் கோராமல் உழைக்கும் திவான்பகதூர் டி.வரதராஜுலு நாயுடு அவர்களும், சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த திரு.திருகூட சுந்தரமும் ஒரு தொகுதிக்கு நிற்பார்களானால் நமக்கு ஓட்டு இருந்தால் திருகூட சுந்தரத்திற்குத் தான் கொடுப்போம்.

அரசியல் அபிப்பிராயமே நமது இயக்கத்திற்கு முக்கியமானதல்ல என்பதை பொது ஜனங்கள் நன்றாய் உணர வேண்டும். அவர்கள் யாராயிருந்தாலும் சரி- குணங்குடி கொண்டால் உயிர்க்குயிர்தான் - என்ன குணம் சுயமரியாதை உணர்ச்சிக் குணம். ஆகையால் ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டு இல்லாமல் போகும் என்கின்ற காரணத்திற்காக சுயமரியாதை இயக்கம் ஒரு மயிர்க்கால் அளவுகூட தனது உறுதியை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதை ஆஸ்திகப் பூச்சாண்டிகளும் அவர்களுக்குப் பணம் கொடுத்து வேலை செய்பவர்களும் அவர்களைக் கண்டு நடுங்குபவர்களும் கண்டிப்பாய் உணர வேண்டுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 17.03.1929)

 
Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.