திரு. ராஜகோபாலாச்சாரியாரின் பஞ்ச நிவாரணப் புரட்டு. குடி அரசு - கட்டுரை - 10.03.1929

Rate this item
(0 votes)

சேலம் ஜில்லா திருச்செங்கோட்டிற்கு பக்கத்தில் புதுப்பாளையம் என்கின்ற கிராமத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் கதரின் பெயரால் ஒரு ஆசிரமம் வைத்துக் கொண்டு மதுவிலக்கு பிரசாரம் செய்வதாகவும், பஞ்ச நிவாரண வேலை செய்வதாகவும் அங்குள்ள ஏழை மக்களுக்கு கூலி கொடுப்பதாகவும் தானியம் கொடுப்பதாகவும் அடிக்கடி பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் திரு.காந்தியை விட்டு தன்னை விளம்பரம் செய்யச் செய்தும் இதன் பலனாய் திரு.காந்தி சிபார்சின் மீது வெளி இடங்களிலேயிருந்து பணம் வரும்படியாகச் செய்து கொண்டும் சூழ்ச்சிகள் செய்து பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்.

இந்த சூழ்ச்சியும் ஆர்ப்பாட்டமும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் சேலம் ஜில்லா மக்கள் பூராவையுமே ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்கள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் வைத்தே செய்து வருகின்றார்கள்.

 இவர் சென்ற தேர்தலின்போதும் இதே மாதிரி மதுவிலக்கின் பெயரால் செய்த பிரசாரங்களும் அவற்றின் மூலம் திரு.சி.வி.வெங்கிட்டரமணய்யங்கார் போன்ற பல பார்ப்பனர்களுக்கு வாங்கிக் கொடுத்த ஓட்டுகளும் மற்றும் திரு.காந்தியைவிட்டு திரு. ராஜகோபாலாச்சாரியார் சொல்லுகின்ற நபர்களுக்கே ஓட்டு கொடுங்கள் என்று எழுதச் செய்த சூழ்ச்சியும் மக்கள் அறிந்ததேயாகும். ஆனால் அந்த தேர்தல் நடந்த பிறகு அச்சூழ்ச்சிகளால் ஓட்டுப் பெற்ற சுயராஜ்ஜியக் கட்சியாரோ அல்லது காங்கிரசுக்காரரோ அல்லது சுதந்திரக் கட்சியரோ செய்த வேலை என்ன என்று கேட்கின்றோம்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து பெரிய பூசாரி ஆய்விடுவதைப் போல், திரு.காந்தியைக் கொண்டு பணம் வசூலிப்பதும், அப்பணத்தைக் கொண்டும் மாதம் 50, 100, 150, 200 என்பதாக பார்ப்பனர்களுக்குச் சம்பளம் கொடுத்து பல பார்ப்பனர்களை வளர்ப்பதும், பார்ப்பனரல்லாதாரில் ஏதாவது ஒன்று இரண்டு பேர்களை அதுவும் முட்டாள்களாகத் தேடிப் பிடித்து அவர்களை வைத்துக் கொண்டு பார்ப்பனரல்லாதார்களையும் தான் சேர்த்துக் கொண்டிருப்பதாக பொது ஜனங்களை ஏமாற்றுவதும் ஆகிய இந்த பித்தலாட்ட காரியத்தினாலேயே பார்ப்பனரல்லாதாரை நிரந்தரமாய் ஏமாற்றலாம் என்று கருதியிருக்கின்றார்.

 

ஆதியில் இந்த ஆச்சிரமம் பெரிதும் பஞ்சமர்கள் என்பவர்களையே பிரதானமாகக் காட்டி ஏற்படுத்தியதாகும். அந்தப் பெயராலேயே பொது ஜனங்களிடம் பணமும் வசூலிக்கப்பட்டது. எனவே அப்பேர்ப்பட்ட ஒரு ஆச்சிரமத்தில் தீண்டாதார் என்பவர்கள் எத்தனை பேர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றார் என்பதும், பார்ப்பனரல்லாதார் என்பவரிடமிருந்தே கொடுக்கப்பட்ட பூமியால் பார்ப்பன ரல்லாதாரிடமிருந்தே வசூலிக்கப்பட்ட பணத்தில் நடைபெறும் ஆச்சிரமமான புதுப்பாளையம் ஆச்சிரமம் என்பதில் இப்போது இருக்கும் பார்ப்பனர் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் எவ்வளவு? பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு ஆள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் மாதச் சம்பளம் எவ்வளவு? ஆகிய இவைகளைக் கவனித்தால் ஆச்சிரமப் புரட்டும் ஆச்சாரியாரின் பஞ்ச நிவாரணப் புரட்டும் தீண்டாமை விலக்குப் புரட்டும் கதர்த் தொண்டு புரட்டும் தானாகவே ஒரு மூடனுக்குக் கூட விளங்கிவிடும்.

 

நிற்க, இச்சூக்ஷிகள் நடக்கும் இவ்வாச் சிரமத்திற்காக திரு.காந்தியின் சிபார்சை கேட்டுக் கொண்டு வடநாட்டிலும் தென்னாட்டிலும் சில பைத்தியக்காரர்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பதைப் பற்றியோ அவைகளை பொது நலத்தின் பெயரால் சில பார்ப்பனர்களை தின்று கொழுக்கச் செய்யும் சிரமங்களைப் பற்றியோ நமக்குச் சிறிதும் கவலை இல்லை. ஆனால் இந்த புரட்டுகளும் யோக்கியப் பொறுப்பற்ற காரியங்களும் சமீபத்தில் வரப்போகும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சியை ஒழிப்பதற்கு என்று செய்யப்படும் சூக்ஷிசி என்பதை அறியாமல் எங்கு பார்ப்பனரல்லாத மக்கள் ஏமாந்து போய் பார்ப்பனர்களுக்கும் அவர் களது கூலிகளுக்கும் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்து பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே தீங்கு விளைவித்துக் கொள்ளுவார்களோ என்கின்ற விஷயத் தில்தான் நாம் கவலைப்படுவதோடு பொது மக்களையும் உஷாராயிருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

குடி அரசு - கட்டுரை - 10.03.1929

 
Read 25 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.