இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மகாநாடு குடி அரசு - சொற்பொழிவு - 17.02.1929)

Rate this item
(0 votes)

வெகுகாலமாகவே தீண்டாமை என்பது நியாயமானதல்ல என்பதை எடுத்துக் காட்டி அக்கிரமமானதென்பதையும் விளக்கிப் போராடி வந்திருக் கின்றோம். ஆயினும் இத்தொல்லை காரியத்தில் நீங்கியதாய்த் தெரிய வில்லை. எங்கு நிர்ப்பந்தமிருக்கின்றதோ, அங்கு கொஞ்சம் நீங்கியிருக்கின் றது. அதாவது உதை கொடுக்குமிடத்தில் தீண்டாமை நீங்குகிறது (நகைப்பு). மனிதத் தன்மையினாலும் ஜீவகாருண்யத்தை முன்னிட்டும் இத்தீமையை ஒழிக்க வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது இத்தீண்டாமை பலமாய் உட்கார்ந்து கொள்வதைக் காண்கிறோம். (நகைப்பு). இத்தகைய தீண்டாமை என்னும் தீமைக்கு யாதொரு ஆதாரமும் கிடையாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு நாம் ஒரு சிறிதும் யாரையும்விட இளைத்தவர்களல்ல.

நம் நாட்டில் தீண்டாமைக்கு இடம் கொடுத்துக் கொண்டிருப்பது ஒரு வகையில் சாமியும் மதமும் தான் என்று சொல்லவேண்டும். “சொல்லுவ தெல்லாம் நியாயம் தான், கடவுள் அல்லவா அப்படி படைத்துவிட்டார்,. அதற்கு என்ன செய்வது?” என்று சிலர் கடவுள் மீது பழியைச் சுமத்து கின்றனர். மற்றும் சிலர், “என்ன செய்வது? மதம் இதற்கு இடம் கொடுக்க வில்லையே?” என்று மதத்தின் மீது பழிபோடுகின்றார்கள். ஆதலால் இத்தீண்டாமையைத் தைரியமான போராட்டத்தினால் தான் ஒழிக்கக் கூடிய தாயிருக்கின்றது. “கடவுள் எங்கும் நிறைந்த சர்வசக்தியுள்ளவர், பட்ச பாதக மற்றவர்” என்று சொல்லிக் கொண்டு “கடவுள் தான் தீண்டாதவர்கள் என்ற கொடுமைக்குட்படும் மக்களுக்கு ஆதார”மென்பது எவ்வளவு கேவல மானது. அநேகமாக அவர்தான் இந்த தீண்டாமையைப் படைத்தவர் என்றும் சொல்லப்படுகின்றது. அது உண்மையாயின் அத்தகைய கடவுளை எப்படியாவது ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும். (கர கோஷம்) இந்த அநியாயமான சங்கதி அவருக்குத் தெரியாதென்றால் அதற்காக அவரை இன்னும் சீக்கிரமாய் ஒழிக்க வேண்டும். (கரகோஷம்) அவரால் இத்தகைய அநீதியை விலக்கவோ அல்லது அக்கிரமம் செய்பவர்களை அடக்கவோ முடியாதென்றால் அவருக்கு எந்த உலகத்திலும் இருக்க வேண்டிய வேலையே இல்லை. ஒழிக்க வேண்டியது தான் நியாயம் (நகைப்பு)

 

கடவுளை முட்டாளும் அயோக்கியனும் சக்தியற்றவனும் என்று கேவலப்படுத்துவதற்கு என்ன மாறுபாஷையோ அதுதான் கடவுள் படைப்பினால் தீண்டாமையிலிருந்து வருகின்றதென்று சொல்லப்படுவ தென்பதே எனது அபிப்பிராயம். கடவுள் பேரில் பழிபோட்டுவிட்டு தப்ப முயலுபவர்களின் செய்கை மிகக் கேவலமானது. அவர்களையும் எவ்வளவு சீக்கிரத்தில் ஒழிக்கின்றோமோ அவ்வளவு நன்மையுண்டு. அது போலத் தான் மதத்தின் மீதும் பழிசுமத்துவதும், எந்த மதத்தை எந்தக் கடவுள் அல்லது யார் நேரில் வந்து சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், எந்தச் சமயாச்சாரி எவ்வளவு அற்புதங்கள் செய்திருந்தாலும் தீண்டாமை என்னும் கொடு மைக்கு இடம் கொடுத்துக் கொண்டுள்ள மதத்தை உடனே ஒழிக்க வேண்டும்.

 

கடவுளும் மதமும் இத்தீண்டாமை விலக்கப்படுவதற்கு இடம் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுவதற்கு ஏதாவது ஆதாரங்களிருந்தால் அவை யார் சொன்னாலும், எப்படிப்பட்டதானாலும் அவற்றை நெருப்பைப் போட்டுப் பொசுக்க வேண்டும். (கரகோஷம்) காரியத்தில் உறுதியாய் நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாக பேசுவதான அயோக்கியத் தனத்தினால் ஒரு போதும் நாடு முன்னேற முடியாது. புண் கண்ணில் பட்டால் அதை உடனே தொலைக்க மருந்து முதலியன போட்டுச் சிகிச்சை செய்யவில்லையா? ஆனால் அது வலிக்கக் கூடாது. எரியக்கூடாது என்று மூடி வைத்துக் கொண்டு வாய்ச் சமாதானம் சொல்வது புழுத்துச் சாவதற்கு வழிதான்.

 

தீண்டாமை விலக்கு என்பது பிறருக்காகச் செய்யப்படும் பரோப காரமான செய்கை எனக்கருதுவது அறிவீனம். அதுமனிதத் தன்மையை நிலைநாட்ட, சுயமரியாதையைக் காக்க நாட்டின் விடுதலைக்கு அவசியமான தென்று கருத வேண்டும்.(கரகோஷம்) நம்மைப் பொருத்த மட்டில் நமக்குக் கீழாகக் கருதப்படும் மக்களை நாம் கொடுமைப்படுத்துகின்றோம். இதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். நமக்கு மேலாகக் கருதப்படும் ஒரு இனத்தார் நம்மைக் கொடுமைப்படுத்துகின்றனர். பஞ்சமர்கள் எனப்படுபவர்களுக் கிருக்கும் பழியைவிட நம்மிடத்திலிருக்கும் பழியை முதலில் ஒழிக்க முயல வேண்டும். அப்பொழுது அது தானாய் மறையும்.

 

பெண்களையும் ஒரு தீண்டாத சமூகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. (நகைப்பு) தீண்டாமைவிலக்கு என்பது நமது கடமையான காரியம். நாம் அது நன்மையை உத்தேசித்த காரியம் என்பதை உணர்வதில்லை. குருட்டுத் தனமாக அவர்கள் சொன்னார்கள், அதில் எழுதியிருக்கிறது என்பதை நம்பிக்கொண்டு அறிவைப் பொருத்தமட்டில் தீண்டாமைக்கு ஏதாவது ஆதாரமுண்டாவென்று ஆராய்ந்து முடிவு செய்யாமல் இன்னும் மூடப் பழக்கங்களை பின்பற்றுவதைவிட கேவலச் செய்கை வேறு ஒன்றுமே இல்லை. தீண்டாமை என்பது அறிவைப் பொருத்தும் ஆதாரங்களைப் பொருத்துமிருக்கவில்லை. ஆனால், முட்டாள்தனத்தையும், ஆணவத்தையும் அயோக்கியத்தனத்தையும் பொருத்துத்தானிருக்கிறது (கரகோஷம்) மலத்தைத் தொட்டால் கழுவினால்போதும். மனிதனைத் தொட்டால் குளிக்கவேண்டும் என்பது சுகாதாரத்தின் பெயரிலா? அல்லது ஆணவத்தை முன்னிட்டா என்றுதான் கேட்கிறேன். (பெருத்த கரகோஷம்)

சுயநலத்தை உத்தேசித்தோ அல்லது முட்டாள்தனத்தை உத்தேசித்தோ இந்த அயோக் கியத்தனத்தை வைத்துக் கொண்டிருப்பது மிகக் கேவலமானது. அவர் அப்படிச் சொன்னார்; இவர் இப்படிச் சொன்னார்; அதற்கு ஆதாரங்க ளிருக்கின்றனவென்றால் இன்னமும் அவற்றிற்கு இடம் கொடுக்கலாமா என்று தான் கேட்கிறேன்? நந்தனை நாயன்மார்களுள் ஒருவராக்கி பாணனை திருப்பாணாழ்வாராக்கிய புராணத்தை நம்பினால் நந்தன் அண்ணன் தம்பி பேரப்பிள்ளை முதலானவர்களை ஏன் அவர்களைப் பார்க்க கோவிலில் போக விட்டு, கும்பிடுவதற்கு அனுமதிக்காமல் கொடுமை செய்யவேண்டும்? அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் ஒருவரெனக் கருதப்படும் ஒருவர் தன் குலத்தவரை கோவிலிலும் வரக் கூடாதென்று தடுத்து 63 குழவிக் கற்களை வைத்துப் பொங்கலும், புளியோதரையும் சாப்பிடுவதற்கென்று நாயன்மார்கள் பெயரையும் நந்தன் பெயரையும் ஆழ்வார்கள் பெயரையும் சொல்லிக் கொண்டு திரிவது எவ்வளவு கேவலமானது? (கரகோஷம்)

 

தவிர அவர்கள் அருகில் வந்தால் நாற்றமடிக்கின்றது என்பதற்கு யார் ஜவாப்தாரி? குளிக்க இடமில்லை; ரஸ்தாவில் வரக்கூடாது; பொதுக்கிணறு, குளத்திற்கு வரக்கூடாது; வண்ணான் இல்லை; அம்பட்டனில்லை என்றால் இத்தகைய அநியாயங்களுடன் நாற்ற மடிக்காமல் மற்றபடி மணக்குமா என்றுதான் கேட்கிறேன். ‘சங்கராச்சாரி’யை 15 நாட்களுக்கு ஒரு ரூமில் போட்டு மூடிவைத்து குளிக்காமலிருக்கச் செய்து பாருங்கள்! பிறகு நாற்றமெ டுக்கிறதா? மணக்கிறதாவென்று தெரியும் (நகைப்பும் கரகோஷமும்) “சுவாமி” யையும் பத்து நாள் தண்ணீர் கொட்டி, அபிஷேகம் செய்து கழுவாதிருந்தால் அதுவும்தான் நாற்றமெடுத்துக்கொள்ளும் (நகைப்பு)

பின்னும், அவர்கள் சாராயம், கள் முதலியவற்றைக் குடிக்கின்றனர்; மாம்சம் தின்னுகின்றனர் என்றும் சொல்லப்படுகின்றது. சாராயம் யார் குடிப்பதில்லை? மாம்சம் யார் தின்பதில்லை? உற்பத்தியாகும் சாராயம், கள் முதலிய எல்லாவற்றையும் அவர்கள்தானா குடித்துவிடுகின்றார்கள்? (நகைப்பு) குடித்துவிட்டுத் தெருவில் உருளுபவர்கள் மூக்கில் கள் ஒழுகக் கோவிலுக்குப் போகலாம். பிற மதஸ்த்தரான கிறிஸ்தவர்களும் முஸ்லீம் களும் பாதிவழி போகலாம். ஆனால் இந்துக்கள் எனப்படும் அவர்கள் மட்டும் கோபுரத்துக்கு வெளியில் நிற்க வேண்டும். இத்தகையக் கொடுமை யைவிட நமது சமயத்தில் வேறு என்ன இருக்கிறது. விடிய விடியத் தெருவில் பன்றியும் கோழியும் என்ன தின்கின்றதென்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் (நகைப்பு) அவற்றைத் தின்பவர்களுக்குத் தீண்டாமை இல்லை. ஆனால் பச்சைப்புல்லையும் பருத்திக் கொட்டையும் தின்னும் மாட்டைத் தின்பவர்களுக்குத்தானா தீண்டாமை?

நியாயத்திற்கும் அறிவுக்கும் பொருந்துவதாயிருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டுமேயன்றி முட்டாள் தனமான அர்த்தமற்ற விஷயங்கள் எவற்றையும் எதன் பெயராலும் ஒரு போதும் ஒப்புக் கொள்ளக்கூடாது! கேளுங்கள்! கடவுள் பெயராலோ மதத் தின் பெயராலோ பழி போட்டுச் செய்யப்படும் அக்கிரமங்களை மற்ற நாடு களில் அலட்சியம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள் அறிவுக்கும் நியாயத்திற்கும் பொருத்தமற்ற தீண்டாமை என்னும் தீமையை அடியோடு ஒழிப்பதில் நீங்கள் எதற்கும் பின் வாங்க மாட்டீர்களென்று நம்புகிறேன். (கரகோஷம்).

(குறிப்பு : சென்னை பச்சையப்பன் அரங்கில் 9, 10.02.1929 இரு நாளில் நடைபெற்ற இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மாநாட்டில் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை* முன்மொழிந்து ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 17.02.1929)

* தீண்டாமை விலக்குத் தீர்மானம்

“மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும் ஜீவகாருண் யத்தை முன்னிட்டும் தேசமுன்னேற்றத்தைப் பொறுத்தும், நம் நாட்டின் பெரும்பகுதியினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை உடனே விலக்க வேண்டுமென்று இம்மகாநாட்டார் அபிப்பிராயப் படுவதால் சமுதாய ஊழியர்களும் தேசபக்தர்களும் சங்கங்களை ஸ்தாபித்து தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில் வெற்றி பெறும் பொருட்டு பொது ஜனங்களிடை இடைவிடாத பிரசாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றனர்.”

 
Read 40 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.