நமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள். குடிஅரசு தலையங்கம் - 12.2.1944

Rate this item
(0 votes)

 இந்நாட்டுத் தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நாம் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள ஏதாவது சாதனமிருக்கிறதா என்று பார்ப்போம்.

 நாம் எப்படித் தெரிந்து கொள்ளுவது?

 பள்ளியில் படிக்கும்போது ஏதாவது தெரிந்து கொள்ளலாமா என்றால் அங்கு தமிழர்களைப்பற்றி ஒரு சேதியும் கிடையாது. எவ்விதப் பாடப் புத்தகமும் கிடையாது. அரிவரிபால பாடம் படிக்கும்போதும் அய்யர் - பிராமணர் போன்ற வார்த்தைகள் தான் காணப்படுகின்றனவே அன்றித் தமிழர் திராவிடர் என்கின்ற வார்த்தைகளுக்கு அங்கிடமோ அவகாசமோ கிடையவே கிடையாது.

 மேல் வகுப்புக்கு வந்து அங்கு ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்றாலோ அதற்கும் இடம் இல்லை. தமிழ்நாட்டுக்கு சரித்திரமே இல்லை. இந்து தேச சரித்திரம் என்பதை எடுத்துக் கொண்டால், இராமாயண பாரதமும், அசோகன் மவுரியன் ஆட்சியும், மு°லிம் வெள்ளையர் ஆட்சியும்தான் விளக்கப்படுமே ஒழிய, சேர, சோழ, பாண்டியரைப்பற்றியோ திராவிடர் தமிழ் என்கின்ற ஆட்சியைப் பற்றியோ காண்பது மிகவும் அருமையேயாகும். அவைகள் எந்த வகுப்புக்கும் பாடமாக இல்லை. அப்படி ஏதாவது எங்காவது காண முடிந்தாலும் அது பெரும் பித்தலாட்டமும், மோசடியுமாகத் தான் காணப்படலாமே தவிர யோக்கியமாய், சரித்திர - ஆதாரமுறையாய் காண்பதற்கு இடமே இல்லை.

 ஆகவே, நமது பிள்ளைகள் நம்மைப்பற்றித் தெரிந்து கொள்ள இடமும் இல்லை, வசதியும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 இன்றும் சொல்லுகிறோம் தமிழன் ஆரியருக்கு முன் என்ன சமயத்தவனாய் இருந்தான், அவன் கடவுள் எப்படிப்பட்டது, அவனது வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது என்பன போன்ற முதலியவைகளைக் காட்ட சரியான சரித்திர ஆதாரம் ஒன்றும் காணப்படுவதில்லை.

 “தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருந் தார்கள்”  என்பதற்கே ஏராளமான ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, பள்ளிக்கூடத் திலோ, சரித்திரங்களிலோ, நம்மைப்பற்றி தெரிந்து கொள்ள ஆதாரங்கள் இல்லை என்பதோடு தமிழ் நூல்கள் என்பவைகளிலாவது தனித் தமிழர் நிலை எப்படி இருந்தது என்றும், அனுபவ பூர்வமான அவர்களது வாழ்க்கை எப்படி இருந்ததென்றும் தெரிந்து கொள்ளப் போதிய ஆதாரங்களும் கிடையாது.

 இன்று நம் கண்முன்  காணப்படும் தமிழர் வாழ்க்கை என்பதெல்லாம் ஆரியரைப் பார்த்து அதுபோல் வேஷம் போட்டுக் கொண்டு, அவர்களது சாதனங்களை ஏற்றுக் கொண்டு அவர்களைப் பின்பற்றுவது என்பதல்லாமல், வேறு ஒன்றும் காண்பதற்கு இல்லை. ஆரியர் கடவுள்கள், அவை சம்மந்தமான ஆரியர் கதைகள் அவர்களது ஆகமங்கள், அவர்கள் சா°திரங்கள், அவர்களது நீதி நூல்கள் ஆகியவைகளே நம் பண்டிதர்கள் கற்றுக் கொண்டு நமக்குப் போதிக்கப்படுவனவாக இருக்கின்றன.

 இவைகளை மாற்றித் தமிழர்களுக்கு என்று மற்ற நாட்டரையும் மற்ற இனத்தாரையும் போல் ஏதாவது பாடங்கள், சரித்திரங்கள் முதலியவை கண்டுபிடித்து, அல்லது உண்டாக்கி நம் பிள்ளைகளுக்குப் பாடமாக கீழ் வகுப்பில் இருந்தே படிப்பிக்கப்பட்டால் ஒழிய எப்படி அவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்பதையோ சிந்தித்துப் பாருங்கள்.

அந்தப்படி இல்லாததாலேயே நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள நம் பண்டிதர்களே வழிகாட்டிகளாய் இருந்து கொண்டு அவர்களது உச்சிக் குடிமியையும் சாம்பல் மண்பூச்சுகளையும், அவர்கள் பாராயணம் செய்யும் பூராணக் கதைகளையும் நாம் பின்பற்றித் கடைந்து எடுத்து முட்டாள்களாக ஆக நேர்ந்ததோடு ஆரியருக்கும், ஆரியத்துக்கும் மீளா அடிமைகளாக ஆகி இருக்கும்படி நேர்ந்திருக்கிறது.

 தமிழர்களின் படிப்புக்கு கீழ் வகுப்புகளிலாகட்டும் இராமாயண பாரதக் கதைகள் ஏன் சேர்க்கப்பட வேண்டும். அதுவும் தேச சரித்திரத்தில் ஏன் சேர்க்கப்பட வேண்டும்?

 பஞ்ச காவியங்கள்விட இராமாயண, பாரதம் எப்படி சரித்திர சம்மந்தமான கதைகளாகும்.

 பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ள தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, பாரதக் கதைகள் சரித்திரத்திலும், வசன பாடத்திலும் சேர்க்கச் சம்மதித்து இருப்பார்களா? பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் தமிழ்ச் செல்வர்கள் இக்குறைகளை எடுத்துக் காட்டுவதற்கு ஆக நம்மீது பாய்கின்றார்களே தவிர, புராண இதிகாசங்கள், அதுவும் தமிழர்களுக்கு சம்மந்தமில்லாததும், தமிழர்களுக்கு இழிவைத் தரக் கூடியதும், தமிழர் முற்போக்கைத் தடுக்கக் கூடியதும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததுமான விஷயங்கள் கொண்ட புராண இதிகாசங்கள் சமய ஆதாரங்கள் போலவும், புண்ணிய சரித்திரங்கள் போலவும், தேச சரித்திரங்கள் போலவும் நம் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

இவ்விஷயத்தில் இனியாவது தமிழ்ப் பண்டிதர்கள் தமிழ் உபாத்தியாயர்கள் உண்மைத் தமிழ்ப் பெற்றோர்கள் ஒன்றுகூடி மாநாடு கூட்டி இம்மாதிரி விஷயங்கள் பள்ளிப் படிப்பில் நுழையாமல் இருக்கும்படி செய்யக் கூடாதா என்று கேட்கின்றோம்.

 தமிழிலே, தமிழ் மொழி இலக்கியத்திலே, தமிழர்நல் வாழ்விலே, தமிழர் தன்மானத்திலே, தமிழர் தனி ஆட்சியிலே கவலையாயுள்ள நம் செல்வங்களுக்கு இந்தக் காரியமெல்லாம் முக்கிய கடமை அல்லவா என்றும் கேட்கிறோம்.

 தலைமுடி எடுத்துக் கொண்டு, காவடி தூக்கி ஆடி, பழனிக்கும், திருச்செந்தூருக்கும் சென்று வந்துவிட்டால் தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாய் விட்டது என்று அருத்தமா? பட்டம், பதவி, நிர்வாகப் பெருமை பெற்றுவிட்டால் தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாய் விட்டது என்று அருத்தமா?

 நிலை குலைந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி உணர்ச்சி ஊட்டி அவர்களுக்குத் தன்மான உணர்வும் விடுதலை உணர்வும் ஊட்ட வேண்டாமா? தமிழ் மக்களை அவர்கள் படித்தவர்களானாலும், பண்டிதர்களானாலும், மந்திரி, கவர்னர், வைசிராய், நிர்வாக சபை மெம்பர் ஆனாலும் பகுத்தறிவு விஷயத்தால் மரக்கட்டையாக்கி விட்டுத் தமிழரல்லாதவர்கள் அடிமைப்படுத்திச் சுரண்டி கொள்ளை கொள்வதைத் தடுக்க வேண்டாமா?

தமிழ் மக்களின் நலத்தில் கவலை உள்ளவர்கள் எது? எதற்கு என்று தான் அழுவது. தமிழர்க்கு தொண்டாற்றுவது என்றால் என்னதான் அருத்தம்.

 ஆகவே, பள்ளிகளில் உள்ள சுத்தத் தமிழ் ஆசிரியர்களை இனியாவது இப்படிப்பட்டப் புத்தகங்களைப் பாடமாக வைக்காமல் இருக்கக் கேட்டுக் கொள்வதோடு, பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ளவர்கள் இனியாவது இவ்விஷயங்களைக் கவனித்து புத்தகங்களை அனுமதிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம். நமக்கு சுதந்திரம் வந்த இலாக்காக்களின் கதியே இப்படி இருக்குமானால் இத்தமிழர்கள் எந்த முகத்தைக் கொண்டு எல்லா இலாக்காக்களிலும் முழுச் சுதந்திரம் கேட்க முடியும் என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 12.2.1944

   நூல் : கல்வி பற்றிய சிந்தனைகள் 

ஆசிரியர் : தந்தை பெரியார்

 

Read 47 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.