திரு.V.ராமசாமி முதலியாரின் அறிக்கை (குடி அரசு- குறிப்புரை - 11.11.1928)

Rate this item
(0 votes)

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப் பற்றி நாம் பத்திரிகைகளுக்கு அனுப்பிய சேதிக்கும் சென்ற வாரக் ‘குடி அரசு’ ‘திராவிடன்’ கட்டுரைகளுக்கும் திரு.V. இராமசாமி முதலியாரவர்கள் பதில் அளித்திருப்பதாவது.

“நான் தனித்தொகுதி சம்மந்தமாக வெளியிட்ட அறிக்கையைப் பற்றி எனது மதிப்பிற்குரிய நண்பரும் தலைவருமான திரு. ராமசாமி நாயக்கரின் அபிப்பிராயத்தை நான் படித்துப் பார்த்தேன்.

 

நான் வெளிப்படுத்திய அபிப்பிராயம் என் சொந்த அபிப்பிராயம் என்று நான் அசோசியேட் பிரஸ் நிரூபரிடம் சொல்லியிருந்தும் அதை அது வெளிப்படுத்தாததற்கு காரணம் இன்னது என்பது எனக்கு தெரியவில்லை.

தற்கால நிலைமையில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய இரண்டு சமூகங்களுக்கும் உள்ள பலமான மனக்கசப்பானது தனித்தொகுதி ஏற்படுத்துவதன் பயனாய் ஒரு அளவுக்கு பாதுகாப்பளிக்கக் கூடியதாகவும் சமநிலைமை உண்டாக்கத் தக்கதாகவும் இருக்குமென்று சொல்லியிருந்தேன்.

 

ஆனாலும் இந்த சமயத்தில் அதை வற்புறுத்துவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமானதல்ல என்று நம்புகின்றேன். ஏனெனில் மேல் கண்ட தனித்தொகுதித் தேர்தல் முறை ஏற்பட்டால் இனி ஏற்படப் போகும் பார்ப்பனர்கள் எவ்வளவு அடையக் கூடுமோ அதை விடவும் அவர்கள் எத்தனை ஸ்தானங்களுக்கு உரியவர்களோ அந்த ஸ்தானங்களை விட அதிகமாகவும் அடைந்து விடக்கூடுமென பயப்படுகின்றேன்.

இந்த காரணங்களாலேயே நாம் தனித்தொகுதித் தேர்தல் முறை கேட்பதானது பார்ப்பனர்களுக்குக்கூட அனுகூலமானதும் ஆசையுள்ளதுமாக இருக்குமென்றே நான் கருதுகிறேன்.

நான் பம்பாய் மாகாணத்தின் நிலைமையை நன்கு தெரிந்த பிறகுதான் இதைச் சொல்ல முன்வந்தேன் என்பதை எனது நண்பர்கள் அறிய வேண்டும்.

இந்தமாதிரி நான் சொல்வதற்கு எனக்கு தைரியமேற்பட்டதற்கு காரணம் என்னவென்றால் திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கர் செய்து வருகின்ற அபாரமான வேலையின் பயனாய் ஏற்படப் போகும் பலனில் எனக்கு ஏற்பட்ட உறுதியான நம்பிக்கையேதான்.

எப்படியிருந்த போதிலும் நான் எனது தலைவர்களுடைய அபிப்பிராயப்படி நடக்க எப்போதும் தயாராயிருக்கிறேன். மற்றபடி உத்தியோக சம்மந்தமாக வகுப்புவாரி பிரதிநிதித்துவ விஷயத்தில் என்னுடைய அபிப்பிராயங்கள் எல்லாருக்கும் தெரிந்ததாகும். அதிலிருந்து நான் ஒரு சிறிதும் மாற்றமடையவில்லை.

பம்பாயைப் பொருத்த வரையில் நான் கவலைப்படுவது நல்ல விஷயங்களை சரியான படி எடுத்துச் சொல்லாததால் கெட்டுப் போய் விடுகிறதே என்பது தான்.”

என்பதாக தமது பதிலில் தெரிவித்திருக்கின்றார். இதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை பின்னால் வெளிப்படுத்தலாம் என்பதாக எண்ணியுள்ளோம்.

(குடி அரசு- குறிப்புரை - 11.11.1928)

 
Read 31 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.