யாகத்தின் ரகசியம் - ஓர் சம்பாஷணை (குடி அரசு - உரையாடல் - 21.10.1928)

Rate this item
(0 votes)

சங்கரன் : ஏது நண்பனே, இன்று அவசரமாய்ச் செல்கின்றாய். வயிறு பசித்து விட்டதோ?

கிருஷ்ணன் : அப்படியில்லை. நாளைய தினம் எங்கள் கிராமத்தில் ஓர் யாகம் நடக்கப் போகிறது; இன்று மாலையிலேயே ஆரம்பம், அதற்காகப் போகிறேன்.

 

சங்கரன் : யாகம் என்றால் எனக்குப் புரியவில்லை. அதை எப்படிச் செய்வார்கள்?

 

கிருஷ்ணன் : அதை எல்லாம் உனக்குச் சொல்வது கூடாது, அந்தரங்கமானது; அது எங்கள் பரம்பரை பரம்பரை வழக்கமாயுள்ளது; யாகம் செய்தால் ஊர் செழிக்கும். பிராமணர்களுக்குச் செல்வம் வளரும்.

 

சங்கரன் : நண்ப, எவ்வளவு அந்தரங்கமானாலும் பலர் சேர்ந்து செய்தால் எப்படியும் வெளிவந்து தானே தீரும். அன்றியும் நீ சொல்வதைப் பார்த்தால் நல்ல காரியமாகத் தானே தெரிகிறது. அதை நான் தெரியும்படி சொல்ல வேண்டுகிறேன்.

கிருஷ்ணன் : ஏது என்னைச் சீக்கிரம் போக விடமாட்டாய் போலிருக்கிறது. எனக்கு முக்கிய நண்பனாதலால் சுருக்கமாகக் கூறுகிறேன். மற்றவர்களிடம் சொல்லாதே.

சங்கரன் : அப்படியே

கிருஷ்ணன் : எங்களூர் சிவன் கோவிலின் வடபாகத்தில் யாக குண்டம் வெட்டிப் பந்தலிட்டு அதற்கு வேண்டிய சமித்துக்கள், நெய், பால், தயிர், தானியம், தேங்காய், பழம் முதலிய சாமான்கள் தருவித்து அயலூர்களிலுள்ள உபாத்தியாயர்கள், கனபாடிகள், சடாவல்லவர்கள், தீக்ஷதர்கள் முதலியோரை எல்லாம் வருவித்து யாகத்தை முடித்துத் தேவர்களுக்கு அவிர்ப்பாகங் கொடுத்து பிராமண போஜனம் செய்து முடிப்பார்கள்.

சங்கரன் : நண்ப, இவ்வளவு அவசரமாகச் சொல்லி விட்டால் நான் தெரிந்து கொள்ள வேண்டாமா? உபாத்தியாயர்கள் என்றாயே, நம்முடைய பள்ளிக்கூட உபாத்தியாயர்களெல்லாம் வருவார்களா?

 

கிருஷ்ணன் : அட மூடமே, இது கூடத் தெரியாதா? இந்த உபாத்தியாயர்களுக்கு அங்கென்ன வேலை? வேதஅத்யயனம் செய்த உபாத்தியாயர்களாகிய வைதீகர்களாக்கும்.

சங்கரன் : அந்த உபாத்தியாயர்களைக் கொண்டு நம் பள்ளிக் கூடத்தில் அவ்வேதத்தைக் கற்றுக் கொடுக்கும்படி செய்தால் இந்த விஷயங்களெல்லாம் எங்களுக்கும் தெரிய வழியிருக்குமே?

கிருஷ்ணன் : நீ என்ன பைத்தியக்காரனாயிருக்கிறாயே! நீங்களெல்லாம் அவ்வேதத்தைக் காதாலும் கேட்கப்படாதாம். அப்படியானால் பிராமண தர்மம் கெட்டு விடுமாம். உதாரணமாக கல்லிடைக் குறிச்சி சமஸ்கிருதப் பாடசாலையைத் தாலூக்கா போர்டார் வகித்து நடத்தும் போது, உங்களவர்களைச் சேர்க்கும்படி செய்ய அவர்களுக்கு எங்கள் உபாத்தியாயர்கள் கற்றுக் கொடுக்க மறுத்து விட்டதால் அப்பாடசாலையை போர்டு நிர்வாகத்திலிருந்து நீக்கி விட்டார்கள். இப்போது அது ஆற்றங்கரையில் ஆற்றங்கரைப் பிழைப்பாகவே காலத்தை எதிர்பார்க்கிறது.

சங்கரன் : ஐயோ! அப்படிப்பட்ட வேதம் ஒன்றிருக்கின்றதா? அதில் அப்படி சொல்லியிருக்குமா? அதை யார் செய்தது?

 

கிருஷ்ணன் : அது கடவுள் பிராமணர்களுக்காகச் செய்து கொடுத்தாராம். அவர்களே கற்று அதன்படி காரியங்களை அவர்களே செய்ய வேண்டும். மற்றவர்கள் கேட்டாலும் பார்த்தாலும் கற்றாலும் தண்டனை உண்டு.

சங்கரன் : படிப்புக்குத் தண்டனையா! வெகு அழகு! உண்மையான கடவுள் இப்பாஷையைச் செய்திருக்க மாட்டார். அப்படிச் செய்திருந்தால் எல்லோருக்கும் பொதுவாகயிருக்கும். உலக பாஷைகள் கற்பவருக்கெல்லாம் பொதுவாகும். இது தன்னலம் போற்றும் பிராமணக் கடவுள்தான் செய்திருப்பார். அவருக்கு கடவுள் பட்டம் தகுதியன்று.

கிருஷ்ணன் : உனக்கென்னடா தெரியும், அப்பாஷை தேவ பாஷையாக்கும். சாதாரண மனிதர்கள் அறியப்படாதென்றும் அது அவ்வேதத்திலேயே சொல்லியிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

சங்கரன் : தண்டணை உண்டென்றாயே, இதற்குமுன் அப்படி எங்கேயாவது நடந்திருக்கிறதா?

கிருஷ்ணன் : இக்காலத்தான் ஆங்கில அரசாட்சியாய் போய்ச்சே! அக்காலத்து ஆரிய அரசர்களாகிய மனு, மந்தாதா, தசரதன், இராமன், தருமர் முதலியவர்கள் ஆட்சியானால் நீ இதைப் பற்றி இவ்வளவு பேசினதற்கே நீ படும்பாடு வேறாகும்.

சங்கரன் : அம்மம்மா! அவ்வநியாய அரசர்கள் வேண்டாமப்பா! யாகத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் விவரிக்க வேண்டும்.

கிருஷ்ணன் : சீக்கிரம் போக வேண்டும். கேட்பதை சுருக்கமாகவே கேள்.

சங்கரன் : நண்ப இந்த யாகம் எதற்காக யாரை உத்தேசித்தது?

கிருஷ்ணன் : உலக ஷேமத்துக்கும் பிராம்மண அபிவிருத்திக்கும் இந்திரனை உத்தேசித்து செய்வது.

சங்கரன் : இந்திரன் வருவானா? மந்திரம் செய்பவராவது காணுவார்களா?

கிருஷ்ணன் : அது முடியாது. அவனுக்கு உரிய மந்திரத்தால் அழைத்து மந்திர பூர்வமாய் ஆகுதி செய்து அவிர்ப்பாகம் கொடுப்பதை அவன் ஏற்றுத் திருப்தியடைவான் என்பது வேதாந்தம்.

சங்கரன் : இந்திரனுக்கு எதை எப்படி ஆகுதி செய்து அவிர்ப்பாகம் கொடுப்பது.

கிருஷ்ணன் : உன்னிடம் நான் சிக்கிக் கொண்டேன். இதற்குமேல் சொன்னால் என்னை ஏளனம் செய்தாலும் செய்வாய்.

சங்கரன் : நண்ப, உன் கூட்டத்தார் செய்கைக்கு உன்னை ஏளனஞ் செய்வது நன்றாய் இருக்குமா? விஷயம் தெரிய கேட்கிறேன்.

கிருஷ்ணன் : இப்போது சொல்லப் போகிற விஷயத்தில் எனக்கும் ஒரு விதத்தில் அதிருப்திதான். வைதீகாள் காரியம் - அதை உனக்கும் தெரிவித்து விடுகிறேன். அதாவது தீ யாக குண்டத்தில் பலவித சமித்துக்களையிட்டு, ஆவின் நெய் சொரிந்து எரித்து, தானிய வகைகள், பஞ்ச கவ்வியங்கள், பழந்தேங்காய், பட்டு முதலியவைகளைப் போட்டு கடைசியாய் கொழுத்த ஆட்டை தீட்சதரென்பவர் குரல் வளையை நெருக்கி உயிரைப் போக்கி, அதை அறுத்து வவை என்னும் இரத்தாசயத்தை எடுத்து மந்திரஞ் சொல்லி ஒம குண்டத்தில் அவிர்ப்பாகம் கொடுப்பார். இதுதான் யாகம் இதன் ரகசியம் தெரிந்ததா?

சங்கரன் : சிவ சிவா, தெரிந்து கொண்டேன். ஆட்டின் மாமிசத்தை என்ன செய்வார்கள்?

கிருஷ்ணன் : அதைக் கேளாதே; சொல்லத் தயாரில்லை. நீயே யூகித்துக் கொள் அது பலவிதம்.

சங்கரன் : நண்ப, இது விஷயத்தை பலர் பலவிதமாகப் பேசினர். அதனுண்மை தெரியவே உன்னைக் கேட்டுத் தெரிந்தேன். நீயும் பலவிடங்களில் புதையல் செய்துவிட்டுச் சிறிது தெரிவித்தாய். ஆகிலும் சில வார்த்தைகள் சொல்லியபின் போகக் கடவாய்.

தமிழ் வேதமென்னும் திருக்குறளில் உங்கள் விஷயங்களைக் கண்டித்துத் தமிழ் மகனாகிய தெய்வப் புலமை திருவள்ளுவர் கூறுவதைக் கேள்.

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

 உயிர்செகுத்து உண்ணாமை நன்று”

“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

 கொன்றாகும் ஆக்கம் கடை”

“உயிர்உடம்பின் நீக்கியார் என்ப, செயிர்உடம்பின்

 செல்லாத்தீ வாழ்க்கை யவர்”

“அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

 பிறவினை எல்லாம் தரும்”

என்ற முதுமொழியின் கருணையை கண்டனையோ? இப்படிப்பட்ட ஆபாசமான யாகங்கள் சிறு தெய்வ வழிபாடுகள் கூறுங் கூற்றுகளைத் தமிழ் மக்கள் கற்றால் உமது நூல்களை கையால் தொடவும் விரும்புவாரோ! இதற்காகத்தான் வேதத்தைப் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் படிக்க கூடாதென்ற கட்டுபாடு போலும் - நண்பனே, நீ அந்த அநியாயமான கொலைக் களத்திற்குப் போகாதே.

கிருஷ்ணன் : அன்ப, உன் போதனை கேட்டதும் அவசியம் போக வேணுமென்ற ஈர்ப்பு என்னை விட்டு நீங்கி நின்றது - உனக்கு ஒன்றுந் தெரியாதென்றும் உங்களவர்களுக்கு சாஸ்திரங்கள் கிடையாதென்றும் எங்களவர்கள் சொல்வதைக் கேட்டு மயங்கினேன் - உங்களுக்குரியதெனக் கொண்டிருக்கும் தமிழ் வேதத்தின் ஆழ்ந்த நோக்கின் பெருமையை இந்நான்கு செய்யுட்களாலேயே கண்டு கொண்டேன். உன்னோடு பேசியதன் பயனாய் அவ்விடத்திற்குப் போக அருவருப்பாயிருக்கின்றது. மற்றவை நாளை பேசுவோம். வந்தனம்,

(குடி அரசு - உரையாடல் - 21.10.1928)

Read 50 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.