உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம் (குடி அரசு - கட்டுரை - 07.10.1928)

Rate this item
(0 votes)

சுயமரியாதை இயக்கம் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் இருப்பதாக சிலர் கருதிக் கொண்டு இருக்கின்றார்கள்! இதை தப்பான எண்ணம் என்றே சொல்லுவோம். உலகத்தில் இது சமயம் எங்கு பார்த்தாலும் உண்மை உழைப்பாளிகளும் வீரர்களும் இந்தக் காரியத்தைத்தான் செய்து வருகின்றார்கள்- இந்த இயக்கத்தினால் தான் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நாட்டை விடுதலை அடையச் செய்தும் வருகின்றார்கள். ஆனால் இது கஷ்டப்படவும், நஷ்டப்படவும் துணிந்தவர்களாலும், உண்மை வீரம் உடையவர்களாலும் மாத்திரம் ஆரம்பிக்கக்கூடிய காரியமானதால் சுயநலத்திற்காக பொதுநல சேவையில் ஈடுபட்டிருப்பதாக வேஷம் போடுகின்றவர்கள் இக் காரியத்தைச் செய்ய முடியாததுடன் வேறொருவர் செய்வதையும் அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் மக்களுக்கு உண்மையான காரியத்தில் கவலை ஏற்பட்டு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டால் போலிகளுக்கு இடமில்லாமல் போவதுடன் அவர்களது வாழ்க்கைக்கே ஆபத்தாய் முடிந்து விடும். ஆதலால் அப்படிப்பட்டவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்க வேண்டியவர்களாகி விடுகின்றார்கள். எனவே எவ்வளவு தான் சுய நலமிகளால் இவ்வியக்கம் தாக்கப்பட்டாலும், ஒழிக்க எவ்வளவு தான் சூழ்ச்சி முறைகள் கையாளப்பட்டாலும் அம்முயற்சிகள் சூரியனை கைகொண்டு மறைத்து உலகத்திற்கு வெளிச்சம் இல்லாமல் செய்து விடலாம் என்கின்ற முட்டாள்தனமான முயற்சிக்கு சமானமாக முடியுமே அல்லாமல் வேறல்ல.

சுயமரியாதை இயக்கம் இப்போது ஒவ்வொரு நாட்டிலும் வீறு கொண்டு எழுந்து தாண்டவமாடுகின்றது. பம்பாய் மாகாணத்தில் கொஞ்சகாலமாக பெருத்த கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அதாவது சென்ற இரண்டு வருஷத்திற்கு முன்பே அங்கு புரோகிதக் கொடுமையை ஒழிக்க சட்ட சபைக்குப் பல தீர்மானங்கள் வந்தன. ஜாதித் திமிரை ஒழிக்க பூனாவில் பெருத்த கிளர்ச்சிகள் நடந்து பல கேசுகளும் ஏற்பட்டு பல பெரியார்களும் சிறை சென்றனர். பம்பாயில் சென்ற வருஷத்தில் பாதிரிகளையும் முல்லாக்களையும் குருமார்களையும் ஒழிக்க வேண்டும் என்று வாலிப மகாநாடுகளில் பேசினார்கள். மற்றும் ஜாதித் திமிர் கொண்டவர்களுக்கு வண்ணார், நாவிதர் என்பவர்கள் தங்கள் தொழிலைச் செய்வதில்லை என்று தீர்மானித்துக் கொண்டார்கள். பள்ளிக்கூடங்களில் பிள்ளைகள் எல்லோரும் அதாவது எல்லா வகுப்புக்காரர்களும் ஒரே பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

 

மத்திய மாகாணத்தில் கோவிலுக்குள் இந்துக்கள் என்பவர்களில் உள்ள எல்லா வகுப்பாரும் போகலாம் என்று தீர்மானித்து அந்தப்படியே சில இடங்களில் நடந்து வருகின்றார்கள்.

கல்கத்தாவில் மகமதிய மாணவர்கள் தாடி வளர்ப்பதை மத சம்மந்தத்தில், இருந்து பிரித்து விட வேண்டுமென்று பலாத்கார சண்டை போட்டுக் கொண்டார்கள்.

சமீப காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கியர்கள் தங்களுடைய மத ஆரம்பகால முதல் வெகு முக்கியமானதாகக் கருதி வந்த காரியங்களில் ஒன்றாகிய க்ஷவரம் செய்து கொள்ளக் கூடாது, தலைமயிரைக் கத்தரிக்கக் கூடாது என்கின்ற கொள்கையை அடியோடு மாற்றி தலைமயிர் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று கிளர்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

 

கடைசியாக கல்கத்தாவில் நம் நாட்டு சுயமரியாதை இயக்கத்தைப் போலவே - ஏன் இதைவிட அதிவேகமானது என்று கூட சொல்லும்படியான - ஒரு பெரிய இயக்கத்தை ஆரம்பித்து விட்டார்கள். அதன் கொள்கைகள் நமது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைவிட வேகமுள்ளதாய் காணப்படுகின்றன. அதாவது, ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பது, மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பது, குருமார்கள், ஆச்சாரியார்கள், புரோகிதர்கள் முதலியவர்களின் ஆதிக்கங்களை ஒழித்து பகுத்தறிவை விளக்குவது.

பெண்கள் அடிமையை ஒழித்தும் ஜாதிக் கட்டுப்பாட்டை ஒழித்தும் கலப்பு விவாகம் முதலியவைகளை ஆதரிப்பது, முதலாளிகளின் ஆதிக்கத்தை ஒழித்து தொழிலாளர்களுக்கு உரிமை அளிப்பது, மிராசுதாரர்களின் ஆதிக்கத்தை ஒழித்து விவசாயிகளுக்கு உரிமை அளிப்பது.

 

பொது வாழ்வில் ஏழை பணக்காரன் என்கின்ற பாகுபாட்டையும், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்கின்ற வித்தியாசத்தையும் ஒழித்து யாவருக்கும் சமத்துவத்தை அளிப்பது.

இவ்வளவும் போதாமல் நாட்டின் சொத்துக்களை எல்லோருக்கும் சரிசமமாய்ப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் கொள்கையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அதோடு மாத்திரமல்லாமல் அதன் தலைவர் திரு சுபாஷ் சந்திரபோஷ் என்பவர் இவற்றை நிறைவேற்ற அரசியல் சங்கங்களிலிருந்து பிரிந்து தனியாய் நின்று முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டதுடன் இவைகள்தான் உண்மையான விடுதலைக்கு மார்க்கம் என்று சொல்லி இவ்வியக்கத்திற்கு உண்மையான பூரண விடுதலை இயக்கம் என்று பெயரும் கொடுத்திருக்கின்றார்.

வெகு சீக்கிரத்தில் இதன் பிரசாரம் ஆரம்பிக்கப்படுமாம். இதைப் பார்த்தவர்கள் நமது சுயமரியாதை இயக்கத்தை மிதவாத இயக்கம் என்றுதான் சொல்லுவார்கள். இப்படி இருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தை மிக மோசமான இயக்கம் என்றும் மிக வேகமான இயக்கம் என்றும் சொல்லுவதுடன் நம் மீது பழி சுமத்துகின்றவர்களுக்கும் குறைவில்லை.

மத விஷயங்களில் கல்கத்தா இயக்கத்தைவிட வேகமாக ஆப்கானிஸ்தானமும் துருக்கியும் போய்க் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததேயாகும்.

அதாவது ஆப்கன் அமீர் அவர்கள் தம் சீர்திருத்தக் கட்டளைக்கு விரோதமாய் பேசுகின்றவர்களையெல்லாம் மாஜி கவர்னர் உள்பட மௌல்வீகள் உள்பட சிறையில் எல்லோரையும் அடைக்கின்றார்.

துருக்கியோ அரசாங்கத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று விளம்பரப்படுத்தி விட்டது.

ருஷியாவோ வைதீக கொள்கைகளை உடையவர்களை யெல்லாம் கைது செய்து வருகின்றது. அதாவது சமீபத்தில் அங்கு சூரியனையும் சந்திரனையும் தெய்வமாக வணங்குபவர்களை எல்லாம் போலீசார் கைது செய்து வருகின்றார்கள்.

இதே ருஷியாவில் கொஞ்ச காலத்திற்கு முன்பு பள்ளிக்கூடங்களில் மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கக் கூடாது என்று உபாத்தியாயர்களுக்கு உத்திரவு போட்டது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கலாம்.

அதுமாத்திரமல்லாமல் அங்குள்ள கோவில்களை இடித்ததும் ஞாபகமிருக்கலாம்.

நமது நாட்டைச் சுற்றியுள்ள இடங்களில் இவ்வளவு காரியங்கள் நடக்கின்ற போது நமது நாட்டில் இன்னமும் புராணக்காரரும், புரோகிதர்களும், பூசாரிகளும், பொதுநலத்தின் பேரால் வாழ்வை நடத்தும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்றால், நம் நாட்டு வாலிபர்களுக்கு கண்ணும் காதும் இருக்கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 07.10.1928)

Read 38 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.