சமயம் (குடி அரசு - தலையங்கம் - 30.09.1928)

Rate this item
(0 votes)

சமயம் என்பதைப் பற்றி இவ்வாரம் ஒரு நீண்ட வியாசம் எழுத வேண்டிய அவா ஏற்பட்டதின் காரணம் என்னவென்பதை முதலில் குறிப்பிட்டுவிட்டு பின்னால் சமயத்தைப் பற்றி எழுதுவோம். இதுசமயம் சமயத்தைக் காப்பாற்றப் புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்து பாமர மக்களின் அறியாமையை தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டு பத்திரிகைகள் மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும் விஷமப் பிரசாரம் செய்து வருவதோடு, சமயத்திற்குத் தகுந்த விதமாய் பேசிக் கொண்டும் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் நமது முயற்சிக்கு இடையூறு விளைவிப்பதெனவே முடிவு கட்டிக் கொண்டுமிருக்கின்றார்கள்.

இக்கூட்டத்தார் யாவர் என சிலராவது அறிய விரும்பலாம். இக்கூட்டத்தவருள் பெரும்பாலானவர் சமயத்திற்கென ஒரு வினாடி நேரமோ, ஒரு அம்மன் காசோ செலவழிக்காத “தியாகிகளும்” அதுமாத்திரமல்லாமல் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கும் பணம் சம்பாதிக்கும் தொழிலுக்கும் இந்த விஷமப் பிரசாரத் தொழிலைத் தவிர வேறு ஒரு மார்க்கமும் அடியோடு இல்லாதவர்களும் என்றே சொல்லலாம். இக்கூட்டத்தார், கோர்ட்டு விவகாரங்களில் நீதியை எடுத்துச் சொல்லுவதற்கு என்று ஏற்பட்டிருக்கும் நியாயவாதிகள் எனப்படும் வக்கீல்களின் நாணயம் எவ்வளவோ, அதை விட மோசமான யோக்கியதை உடையவர்கள் என்றே சொல்ல வேண்டும். அதாவது வக்கீல்களுக்கு அவர்கள் எடுத்துச் சொல்லும் வாதத்தில் எவ்வளவு மனச்சாக்ஷி உண்டோ, அதைவிட மோசமான மனசாக்ஷியும் வக்கீல்களுக்கு அந்த வாதங்களில் எவ்வளவு கவலை (தங்களது வரும்படியைப் பொருத்தவரையில் மாத்திரம்) உண்டோ அதைவிட பிரசங்கம் நடக்க வேண்டிய அளவையும் பத்திரிகை செலவாகும் அளவையும் புஸ்தகம் விற்கும் அளவையும் பொருத்தவரையில் மாத்திரம் கவலை உடையவர்கள் என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் நாம் காட்டித் தெரிந்து கொள்ள வேண்டிய அளவில் இல்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆனாலும் சில பத்திரிக்கைக்காரர்களையும், சில பண்டிதர்களையும் சில புஸ்தகக் கடைக் காரர்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டால் இந்த யோக்கியதை தானாகவே விளங்கி விடும்.

 

அதாவது, எப்படி தேசீயத்தைப் பற்றி தேசத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கிறவர்களும் தங்களைத் தவிர மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை பலனற்றது என்றும், தேசத் துரோகமானதென்றும் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கின்றார்களோ அதுபோலவே இந்த சமயத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கின்றவர்களும் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர மற்ற அபிப்பிராயங்கள் சரியானதல்லவென்றும், மத விரோதமானதென்றும் நாஸ்திகமென்றும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

அப்படி இருப்பதிலும் பொதுவாக மக்கள் ஏமாறும் படி பேசுவதும் எழுதுவதுமாய் இருக்கின்றார்களே ஒழிய விவகாரத்தை எதிர்ப்பதில் தக்க சமாதானம் சொல்லி தங்களது கக்ஷியை நிலைநிறுத்த வலியுறுத்துகிறவர்களாகவும் இல்லை. உதாரணமாக இக்கூட்டத்தவர்களின் மனப்பான்மையையும் வாழ்க்கையையும் அறிந்தவர்களுக்கு, இவர்களது வார்த்தைக்கும் எழுத்துக்கும், மனப்பான்மைக்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை ஒருவாறு அறியலாம். அது எப்படியோ இருந்து போகட்டும் என்றாலும் இந்தச் சைவமும் வைணவமும் சமயாச்சாரிகளும் மக்களுக்கு எதற்காக வேண்டும் என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பார்க்கும்படி பொதுமக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

 

தேசமோ மக்களோ முன்னேற்றமடைய வேண்டுமானால் அறிவும், சயன்ஸ் என்று சொல்லும்படியான விஞ்ஞான தத்துவமும் ஒழுக்கமும் முன்னேற்றம் அடைந்தாக வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் முதலில் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவைகளில் முன்னேற்றமடைந்த தேசமும் மக்களுந்தான் இதுவரையில் உண்மையில் முன்னேறி வந்திருக்கின்றார்கள்; வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை வாசகர்கள் நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தெரிய வேண்டிய அவசியம் இருக்குமானால் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளை சற்று ஞாபகப்படுத்திப் பார்த்தால் தானாக விளங்கும். எனவே மேல்கண்ட அறிவு, ஆற்றல், ஒழுக்கம் ஆகியவைகளுக்கு ஏற்றதாக நமது மதமோ, மதாச்சாரியார்களோ அல்லது சாமிகளோ இருக்கின்றனவா என்பதைத் தனியே இருந்து பாரபக்ஷம் விருப்பு வெறுப்பு இல்லாமல் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

 

நமது மதமென்பதோ வேதமென்பதோ சாமிகள் என்பதோ சமீப காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்வதற்கில்லை. யுகம், சதுர்யுகம், மகாயுகம், கற்பம் என்பவைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு சரித்திர ஆராய்ச்சிப்படி பார்த்தாலும் 5000, 6000 வருஷ காலத்திற்கு குறையாதது என்று சொல்ல இடமிருக்கின்றத் என்பதில் ஆராய்ச்சிக்காரர்களுக்குள் அபிப்பிராய பேதமில்லை. உலகத்தில் தோன்றி இப்போது ஜீவனுடனிருக்கும் மற்ற சமயங்கள் எல்லாம் அதைவிடக் குறைந்த காலத்தைக் கொண்டதாகவே இருக்கின்றது.

அப்படி இருக்க நம் தேசம் மாத்திரம் இன்னிலையில் இருக்கக் காரணமென்ன என்பதற்கு மேல் கண்ட சமயவாதிகள் என்ன பதில் சொல்கின்றார்கள்?

இதற்காக அரசாங்கத்தைப் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்லி அரசாங்கத்தை வைது விட்டால் அதுவே போதுமான சமாதானமாகுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் சமயத்தையே ஆதாரமாகக் கொண்ட ராமன், கிருஷ்ணன் போன்ற விஷ்ணு அவதார அரசர்களும், மீனாக்ஷி, சொக்கலிங்கர் போன்ற சிவ அவதார அரசர்களும், மற்றும் சேரன், சோழன், பாண்டியன் போன்ற தெய்வத் தன்மை தாண்டவமாடிய அரசர்களும் ஆண்ட காலத்தைவிட இப்போதைய அரசாங்கமோ அல்லது ஜனப்பிரதிநிதி அரசாங்கமோ எந்த விதத்தில் மோசமானது என்பதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சிறு உதாரணம் சொல்லக் கூடுமோ என்று கேட்கின்றோம்.

 

எனவே ஆயிரக்கணக்கான வருஷங்களாக மக்களின் நிலை குலைந்து வருவதையும் தேசம் அடிமைப்பட்டு வருவதையும் தொடர்ச்சியாக கேட்டும் பார்த்தும் வந்தும் கொஞ்சமாவது அறிவு என்பதை உபயோகப்படுத்தி இதன் காரணங்கள் என்ன என்பதை கவனிக்காமலும், அக்கம் பக்கம் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு சிறிதும் திரும்பிப் பாராமலும் மக்களை பாழும் சமயம், சமயாச்சாரி, சாமி என்பதையே குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டே நாசமாய்ப் போகும்படி செய்வதால் யாருக்கு என்ன நன்மை விளையக்கூடும் என்று கேட்கின்றோம்.

சாமியின் மூலமும் சமயத்தின் மூலமும் சமயாச்சாரிகளின் நடத்தையின் மூலமும் மக்களுக்கு ஒழுக்கத்தையும் வாழ்க்கையையும் கற்பிக்கலாம் என்று யாராவது சொல்ல வருவார்களேயானால் அவற்றையெல்லாம் விட்டு விட்டு நேரே ஒழுக்கத்தையும் வாழ்க்கை நலன்களையும் கற்பிப்பதால் என்ன நஷ்டம் விளைந்து விடக்கூடும் என்று கேட்கின்றோம்.

இதுகால பரியந்தம் அதாவது குறைந்தது 5000 ´ காலம் இந்த வேலையைச் செய்து பார்த்தாய் விட்டதல்லவா? இனி ஏன் புதுமுறை கண்டுபிடிக்கக் கூடாது? சாதாரணமாக வைத்திய சிகிச்சையில், வியாதிக்கு தக்க மருந்தை இரைப்பைக்கு அனுப்பி அங்கு அது ஜீரணக்கருவி மூலம் ஜீரணிக்கச் செய்து சக்கையை மலத்தின்மூலம் கழித்து, சத்தை இரத்தத்தோடு கலரும்படி செய்து வியாதியைக் குணமாக்க முயற்சிப்பதைவிட மருந்தின் உண்மையான சத்தை எடுத்து நேரே ரத்தத்தில் சேர்த்து வேலை செய்யும்படி (இன்ஜெக்ஷன்) செய்வது போல ஒழுக்கங்களையே கற்பிப்பதில் என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். ஒரு சமயம் அந்த தொழில் பழகாத சில வைத்தியர்களுக்கு வேறு தொழில் கற்றுக் கொள்ளும் வரையில் வயிற்றுப் பிழைப்புக்கு கஷ்டமாயிருக்கலாம். இதற்காக மக்கள் வியாதியோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதா என்பதை யோசித்துப் பார்த்தால் சிலரது வயிற்றுப் பிழைப்புக் கஷ்டம் அவ்வளவு பெரிதாகத் தோன்றாது.

 

நிற்க, பொது ஜனங்களில் சிலர் இக் கூட்டத்தினர்களின் யோக்கியதையையும் உண்மையையும் அறியாமல், நாம் ஏதோ சற்று அளவுக்கு மீறி சற்று வேகமாய்ப் போவதாக கருதுகிறார்கள் போல் தெரிய வருகின்றது. ஆனால் அவர்கள் அப்படி கருதுவதற்கு ஆதாரமோ நியாயமோ ஒன்றும் எடுத்துக் காட்டாமல் “இருந்தாலும் இவ்வளவு கடினமாக போகலாமா” என்கின்ற ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் நாமும் அவற்றை ஒரு சிறிதும் லக்ஷியம் செய்வதில்லை. ஏனெனில் நேற்றுவரை அமிதவாதிகளாக இருந்தவர்கள் அந்தக் கொள்கையுடனேயே நம்மால் மிதவாதிகள் என்று சொல்லப்படுபவர்களாகி விட்டார்கள். காரணம் என்னவென்றால் நாம் அவர்களைவிட சற்று வேகமாய்ப் போவதாக ஜனங்கள் நினைப்பதுதான்.

இதே முறையில் வெகு சீக்கிரத்தில் நாமும் மிதவாதிகள் என்று கருதப்படக் கூடியவர்களாக ஆனாலும் ஆகலாம் என்பதே நமது முடிவு.

நம்மைவிட வேகமாகப் போகக்கூடிய வாலிபர்கள் முளைப்பதை வளருவதை நாம் நேரிலேயே பார்க்கின்றோம்.

அதாவது, எவ்வளவு கொடுமையை அனுபவிப்பதானாலும் பலாத்காரம் என்றால் இன்னமும் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கின்றது. நியாயத்தையும், வாதத்தையும் எடுத்துச் சொல்லி மெய்ப்பித்து பார்க்கலாம். முடியாவிட்டால் இன்னமும் பொறுக்கலாம் என்கின்ற எண்ணமே தோன்றுகிறது.

ஆனால் நமது இளவல்களுக்கோ “இன்னமும் எத்தனை நாளைக்கு இந்தப் புரட்டுகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும், சுயநலத்திற்கும் கொடுமைகளுக்கும் இடம் கொடுத்துக் கொண்டிருப்பது, இரண்டில் ஒன்று பார்க்க வேண்டியதுதான்” என்கின்ற துடிதுடிப்பு கொழுந்து விட்டெழுவதைப் பார்க்கின்றோம். அவர்கள் காலத்தில் நாம் அவர்களால் மாத்திரமல்லாமல் பொதுமக்களாலும் ‘மிதவாதிகள்’ என்றும் ‘பழம்பிடுங்கல்கள்’ என்றும் குற்றம் சொல்லப்படுவோம் என்கின்ற உறுதி நமக்குண்டு. எனவே இவ் விஷயத்தில் அதிகமாகப் போவதும் நிதானமாகப் போவதும் அவரவர்கள் மன உணர்ச்சியைப் பொறுத்ததே தவிர வேறல்ல.

உதாரணமாக பண்டிதர் திரு. வேதாசலம் அவர்கள் ராயப்பேட்டையில் காந்தி நிலைய ஆண்டு விழா தலைமைச் சொற்பொழிவில் அவர் நிகழ்த்தியதாக காணப்பட்டவைகளில் ஒன்று “சைவத்தை குற்றம் சொல்பவனை இன்னமும் விட்டு வைத்திருக்கின்றீர்களா? உங்கள் சரீரத்தில் சைவ ரத்தம் ஓடவில்லையா?” என்பதாகச் சொன்னதாக காணப்பட்டது. (அது ஒருவாறு மறுக்கப்பட்டது) அவர் அப்படியே சொன்னதாக வைத்துக் கொண்டாலும் அது சட்டப்படி குற்றம் என்று சொன்னால் சொல்லாமே ஒழிய அவரது உணர்ச்சிப்படி அது எப்படிக் குற்றமாகும்?

ஒரு சமயம் அதிலிருந்து பண்டிதர் சரீரத்தில் சைவ ரத்தம் ஓடிற்றா இல்லையா என்கின்ற கேள்வி வேண்டுமானால் கேட்கலாமே ஒழிய அவ்வுணர்ச்சி மக்களுக்கு தோன்றுவது இயல்பு என்பதே நமது அபிப்பிராயம். தற்கால நிலையில் இப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்கள் அமிதமாக அதாவது மிக்க வேகமாக சிலருக்கு பட்டால் படலாம். அதற்காக மக்களின் உணர்ச்சி காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவ்வளவும் பயனளிக்காதென்றே சொல்லுவோம்.

மக்களின் சுதந்திரத்திற்கும் அறிவிற்கும் சுயமரியாதைக்கும் உலகம் போகின்ற போக்கில் நாம் இருக்கும் நிலை எவ்வளவு பிற்பட்டது என்பதையும், நமது போக்கு எவ்வளவு அசைவற்றதும் நிதானமுமானது என்பதையும் யாராவது கவலையுடன் சிந்தித்துப் பார்த்தால், கடுகளவு கவலை இருந்தாலும் மதமும் சாமியும் மத ஆச்சாரிகளும் அவர்கள் கதைகளும் நம்மை ஒரு சிறிதும் தடைப்படுத்தவே மாட்டாது என்றே துணிந்து சொல்லுவோம். ஆனால் அவற்றில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் தங்கள் வாழ்வும் அறிவுமே பிரதானம் என்பவர்களுக்கு உலகம் தெரியாதென்றே சொல்ல வேண்டும்.

ஆதலால் பொதுமக்கள் இனித்தான் சற்று ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 30.09.1928)

Read 32 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.