வடநாட்டுக் கடவுள்கள் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.09.1928)

Rate this item
(0 votes)

கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான 'புண்ணிய பூமிகளான' காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய nக்ஷத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டு பூசை செய்யவும், கட்டி அழுது தனது குறைகளைச் சொல்லிக் கொள்ளவும் உரிமை பெற்ற சாமிகளாகவே இருக்கின்றன. ஆனால் தென்னாட்டிலோ அதே சாமிகளைத் தொடாத போதிலும் கிட்டப் போய் கும்பிட்டாலும் அல்லது சிலர் கோயிலுக்குள்ளே புகுந்து விட்டாலும் உடனே அச்சாமிகள் செத்துப் போய் விடுகின்றன. ஆனால் பார்ப்பானுக்குப் பணமும், சோறும் கொடுத்தால் மறுபடியும் அவைகள் உயிர் பெற்று விடுகின்றன. எனவே நமது தென்னாட்டுச் சாமிகளின் சக்திகள் கூட நமது பார்ப்பனர்களிடம் எவ்வளவு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பது கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

இப்போது மத்திய மாகாணத்தில் வார்தா என்னுமிடத்தில் உள்ள சாமிகள் காசி முதலியவைகளிலுள்ள சாமிகளைப் போலவே தங்கள் சக்தியை பிராமணனிடமிருந்து விடுதலை செய்து கொண்டதாகத் தெரிய வருகின்றது. அதாவது, வார்தாவில் உள்ள லக்ஷிமி நாராயணசாமி கோவிலுக்குள் தீண்டாதவர்கள் எனப்படுபவர்கள் போய் கும்பிடலாம் என்று அங்குள்ள மக்கள் தீர்மானித்து அந்தப் படியே இந்த ஒரு வாரமாக எல்லோரும் உள்ளே போய் கும்பிட்டு வருகிறார்களாம்.

 

இதுவரை அந்தக் கோவிலில் உள்ள ஒரு சாமி கூட சாகவில்லையாம். இன்னும் சில இடங்களிலும் இது போலவே நடைபெற்றும் வருகின்றதாம்.

ஆனால் நம் தென்னாட்டு சாமிகளுக்கு மாத்திரம் பார்ப்பனர்கள் கையிலிருந்து தப்பிக்க இன்னும் சக்தி ஏற்படவில்லை என்கின்றதானது நமக்கு மிகவும் வெட்கக் கேடான காரியமாய் தோன்றுகின்றது.

“கடவுள் நெறியையும், கடவுள் தன்மையையும் ராமசாமி நாயக்கனும் சுயமரியாதைக் கூட்டத்தாரும் பாழாக்குகின்றார்கள்” என்று சொல்லுவதற்கு மாத்திரம் நமது நாட்டில் ஆட்கள் ஏராளமாய் இருக்கின்றார்களே யொழிய, மற்றபடி இக் கூட்டத்தாருக்குள் பார்ப்பானைத் தவிர கடவுள்களின் கோவிலுக்குள்ளே மற்றவர் போனாலும், அதைத் தொட்டாலும் கடவுள் செத்துப் போவார் என்கின்ற கொள்கை, கடவுள் தன்மைக்கும், கடவுள் நெறிக்கும் ஏற்றதா என்பதை ஒருவராவது கவனிக்கின்றாரா என்று பார்த்தால் அடியோடு இல்லை என்றேதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. இனியாவது நமது தென்னாட்டுக் கோவில்களின் நிர்வாகிகள் கவனித்து தங்கள் தங்கள் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் இருக்கும் கடவுள்களை பார்ப்பன அடிமைத்தனத்திலிருந்து வடநாட்டு சாமிகளைப் போல விலக்கி, சுதந்திரமுள்ள சாமிகளாகவும், எல்லோருக்கும் சமமான சாமிகளாகவும் இருக்கத் தக்கதான நிலையில் இருக்கும்படி செய்வார்களா? என்று கேட்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.09.1928)

 
Read 34 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.