வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக் கொண்டது (குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.07.1928)

Rate this item
(0 votes)

திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அருப்புக்கோட்டை வாலிபர்கள் மகாநாட்டில் வாலிபர்களுக்கு புராணப் பிரசங்கம் செய்கையில், முன் திரு. நாயக்கருடன் “போர்” நடத்துகையில் முருகனைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும் என்ன எழுதினாரோ, அவற்றிற்கு நேர் விரோதமாய் புராணங்களை ஆதரித்து பிரசங்கம் செய்திருக்கின்றார். மற்றும் பெரிய புராணத்தைப் பற்றி அவர் எழுதிய காலத்தில் “கவியழகுக்கும் இயற்கை வருணனைக்கும் கூடவா புராணங்களைப் படிக்கக் கூடாது” என்றும், “பெரிய புராணத்தின் உள்ளுறையை இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகள், அகச்சான்றுகள், நமது நாட்டைப் பற்றி இங்கு வந்துள்ளவர்கள் எழுதி வைத்த குறிப்புகள், சில புறச்சான்றுகள், சரித்திரப் பொருள்கள், காலநிலை முதலியவற்றிற்கு அரண் செய்யும் அளவுக்குக் கொள்ளலாம்” என்றும் எழுதியிருந்தார்.

இப்படி எழுதினவர் அடுத்த வாரத்திலேயே புராணப் பிரசாரத்திற்காக ஆரம்பித்து மறுபடியும் பழைய உணர்வு கொண்டு, அதே புராணத்தை மூட நம்பிக்கைக்காக மக்களிடை பிரசாரம் செய்யத் திருநெல்வேலியைக் கண்டுபிடித்து, அங்குள்ள மக்களிடம் தமது பழைய மூட்டையை அவிழ்க்க ஆரம்பித்து விட்டார். அக் கூட்டத்தில் பேசும்போது, அதே பெரிய புராணத்திலுள்ள ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அவர்முன் எழுதினபடி கவியழகுக்கோ, இயற்கை வருணனைக்கோ மற்றும் கல்வெட்டுகள், நாட்டைப் பற்றிய குறிப்புகள் முதலியவற்றிற்கு “அரண் செய்யும் அளவு”க்கோ எடுத்துக் கொள்ளாமல், மூட நம்பிக்கைக்கும் மற்ற மதக்காரர்களை சமய வெறியர்கள் என்று பிற சமய நிந்தனை ஒன்றையே குறிக் கொண்டு போலிக் கதைகள் புனைகிற தத்துவத்துக்கும் போலிப்புராணங்களால், 'கடவுள் நெறி'க்கும் ஒழுக்கங்களுக்கும், அன்புக்கும், கேடு விளையும் படியான தத்துவத்திற்கும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 உதாரணமாக சொற்பொழிவில், “சமண மதம் சிறந்தது. ஆனால் சமண மதமும் சீர்கெட்டு நாட்டில் கொடுமைகள் அதிகரித்து கடவுள் நம்பிக்கை யொழிந்து நாடு அதிகம் சீர்கெட்டிருந்த சமயத்தில் நாட்டு மக்கள் செய்து வந்த தவப்பயனால் திருஞான சம்பந்தர் சீர்காழியில் அவதரித்தார்” என்றும் பேசிவிட்டு, “சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லுவது கட்டுக் கதை” என்றும், “சமணர்களைக் கழுவேற்றிய வரலாற்றுக்குப் போதிய அகச் சான்றாவது புறச்சான்றாவது இல்லை” என்றும் சொன்னதோடு மற்றும் ஏதேதோ கொட்டியிருக்கிறார்.

திரு. முதலியார் சமண மதம் சிறந்தது என்று ஒரு தரம் சொல்லிவிட்டு மறுபடியும் கீழே சமண மதத்தால் நாட்டில் கொடுமைகள் அதிகரித்தது என்றும் சொல்லி அதை ஒழிக்கவே திருஞான சம்பந்தர் அவதாரம் எடுத்தார் என்றும் சொல்லுகிறார்.

இது பிற சமயக்காரரை நிந்தனை செய்ததாகாதா? என்று கேட்கின்றோம். இவர்களை ஒழிக்க கடவுள் ஒரு அவதாரம் அனுப்பியிருப்பதாகச் சொல்வதானால் அது கடவுளுக்கும், கடவுள் நெறிக்கும் ஒழுக்கங்களுக்கும் கேடு சூழ்ந்ததாகாதா? என்று கேட்கின்றோம்.

 சமண மதம் என்பது எந்த விதத்தில் சிறந்தது என்றும், அது சீர்கெட்டதாகச் சொல்லப்படுவதற்கு என்ன ஆதாரம் என்றும் திரு. முதலியாரால் சொல்ல முடியுமா? சமணர்கள் செய்ததாகச் சொல்லப்படும் கொடுமைகள் என்ன என்பதை திரு. முதலியாராவது மற்றும் எந்த சமயாச்சாரியார், அவதாரம் என்பவர்களாவது எங்காவது சொல்லியிருக்கிறார்களா? திரு. முதலியாரால் “இயற்கை இறை உறையுள்” என்று போற்றப்படும் தேவாரம், திருவாசகம் என்கின்ற புராணங்களிலாவது ஏதாவது குறிக்கப்பட்டிருக்கின்றதா? அப்படிக்கொன்றுமில்லாமல் சமண மதத்தைப் பற்றி திரு முதலியார் சமணர்களுக்கு பயந்து கொண்டு பூஜித்தும் சைவர்களுக்கு பயந்து கொண்டு தூஷித்துமிருந்தாலும் திரு. முதலியாரால் “அவதாரம்”, “பெரியார்” என்று சொல்லப்படுகிற ஆசாமிகள் எல்லாம் சமண மதத்தையும், சமணர்களையும் மிகப் புன்மொழிகளால் வைதிருக்கின்றார்கள் என்பதை முதலியார் மறுக்கிறாரா? என்று கேட்கின்றோம்.

நிற்க, சமணர்கள் கழுவேற்றப்பட்டது பொய் என்றும், அதற்கு ‘அகச்சான்று, புறச்சான்று’ இல்லையென்றும் சொல்லுகிறார்.

திரு. முதலியாரால் ‘இயற்கை அன்பு’ என்று கூறப்படும் பெரிய புராணத்திலேயே சமணர்கள் கழுவேற்றப்பட்டது காணப்படுகிறது. திரு. முதலியார் அவர்கள் பெரிய புராணத்தை அதிலுள்ள அகச்சான்றுகளைக் கொண்டு கொள்ளலாமென்று ஒப்புக் கொள்வதோடு, அப்பெரிய புராணத்திலுள்ள கதைகளில் ஒன்றாகிய திருஞானசம்பந்தர் அவதாரத்தையும் அவரது அற்புதத்தையும் ஒப்புக் கொண்டிருப்பதோடு, அவரைப்போல் இன்னொருவர் வருவதாகவும் சொல்லுகிறார்.

இது நிற்க, ஒவ்வொரு வருஷமும், பல கோவில்களில் சமணர்களை கழுவேற்றுகிற உற்சவமும், கழுவை நட்டு அதில் சைவர்கள் சமணர்களை கழுவிலேற்றி அழுத்துவதும் நாடகம் போல நடித்துக் காட்டப்படுகிறது. இதை இன்று வரையிலும் தப்பு என்றாவது, அம்மாதிரி நடத்தக் கூடாதென்றாவது திரு. முதலியார் சொன்னவருமல்ல; ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டவருமல்ல. எனவே திரு. முதலியார் எவ்வித பொறுப்பையும் உணராமலும் ஒரு சிறிதும் தமது பகுத்தறிவை உபயோகப்படுத்தாமலும், நினைத்தது நினைத்தபடியெல்லாம் உளறிக் கொட்டுவதும், சமயத்துக்குத் தகுந்தபடியெல்லாம் மாற்றிப் பேசுவதும், இவற்றை யாராவது எடுத்துக் காட்டினால் அவர்கள் மீது பழி சுமத்துவதும், அவர்களைப் பற்றி விஷமப் பிரசாரங்கள் செய்வதும் தமது சமயத் தொண்டாகவும், ஆஸ்திகத் தன்மையாகவும் கொண்டிருக்கிறார் என்பது பொது மக்களுக்கு விளங்கவில்லையா? என்று கேட்கின்றோம்.

 மற்றும் அவர் அதுசமயம் பேசியதாகக் காண்பவைகளை புராணத்தைப் பற்றி எழுத ஏற்றுக் கொண்டிருக்கிற அறிஞருக்கு விட்டு விடுகிறோம்.

நிற்க, திரு. முதலியார் இவ்விதம் புராணப் பிரசாரத்திற்காகவும், அதைக் கண்டிப்பவர்களை எதிர்ப்பதற்காகவும், லஞ்சம் கொடுத்து பல நண்பர்களிடம் நட்புக் கொண்டிருக்கிறார். அதில் ஒருவராய் திரு. வரதராஜு லுவுக்கு கொடுத்திருக்கும் லஞ்சம் என்னவென்பதை இவ்வார “நவசக்தி” தலையங்கத்திலிருந்து உணர்ந்திருக்கலாம். என்னவெனில், திரு முதலியார் காங்கிரஸைப் பற்றி இதற்கு முன்னால் வெளிப்படுத்தியுள்ள அபிப்பிராயம் யாவரும் அறிந்ததொன்றே. அதாவது, வகுப்புப் பிணக்குகளும் உயர்வு தாழ்வுத் தன்மைகளும் உள்ள நாட்டில் அரசியல் இயக்கம் என்று ஒன்று ஏற்படுவது அந்நாட்டிற்குக் கேட்டை விளைவிப்பதாகும் என்பதாக எழுதியிருப்பதோடு, தாமும் அக்காங்கிரஸ் என்ற அரசியல் குழுவிலிருப்பது குற்றமென்றும் சொன்னதுடன் காங்கிரஸ் நிர்வாக சபையிலிருந்து ராஜீனாமா கொடுத்து விலகினதல்லாமல் காங்கிரஸ் குழுவில் ஒரு சாதாரண அங்கத்தினராக யிருப்பதிலிருந்தும், விலகிக் கொண்டதாகவும் சொன்னவர் இப்போது காங்கிரசை நிலைநாட்ட மிகக் கவலை கொண்டிருப்பதாக எழுதி யிருக்கிறார். இதற்காக திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் புராணக் குப்பைகளையும், காங்கிரஸ் புரட்டையும் ஆதரிக்க முன்வந்திருப்பதாக எழுதிக் கொண்டு அவரைப் பாராட்டி இருக்கிறார். இது எம்மட்டு நிஜமாயிருந்தாலும் அதையும் பார்ப்போம்.

நிற்க, சைமன் கமிஷனைப் பற்றி திரு. முதலியார் அதை பகிஷ்கரிக்கக் கூடாதென்பதாக எழுதி வந்ததும், பகிஷ்கரிப்போர்களின் புரட்டுகளை வெளியாக்கினதும், அதை ஆதரித்தே துண்டு விளம்பரங்களும் சுவர் விளம்பரங்களும் வெளியாக நேர்ந்ததும், அவைகளை கண்டித்து திரு. வரதராஜுலு எழுதி வந்ததும் அதற்கு மறுபடியும் திரு. முதலியார் எழுதினதும் யாவருக்கும் நினைவிருக்கலாம். இப்போது திரு. வரதராஜுலு தமது (திரு. முதலியாரது) புராணப் புரட்டுக்கும் சமயப் புரட்டுக்கும் உதவி செய்வதற்காகக் காணிக்கையாய் தாம் (திரு. முதலியார்) அவரது (திரு. வரதராஜுலுவின்) பகிஷ்காரப் புரட்டுக்கும் தேசீயப் புரட்டுக்கும் உதவி செய்ய ஒருப்பட்டு துணிவோடு காங்கிரசையும் பகிஷ்காரத்தையும் ஆதரித்து எழுதியிருக்கிறார். சைமன் கமிஷனை குறை கூறியும் எழுதியிருக்கிறார். இதன் மூலம் பார்ப்பனரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியை தூற்றவும், காங்கிரசைப் புகழவும் சூழ்ச்சி தேடிக் கொண்டு அத்தொண்டிலும் மறைமுகமாக இறங்கி யிருக்கிறார். இவைகளெல்லாம் பூனை கண்ணைக் மூடிக் கொண்டு பாலைக் குடிப்பது போலக் கருதி திரு. முதலியார் மொட்டையாக எழுதி வந்தாலும் பொதுமக்கள் கண்ணில் இவர்கள் இனி மண்ணைப் போட முடியாதென்பதே நமது துணிவு.

 பொதுமக்கள் உண்மையான nக்ஷமத்தையும், சுயமரியாதையையும், விடுதலையையும் அடைய வேண்டுமானால், நல்ல அரசாட்சி என்னும் பேரால் வெள்ளைக்காரர்கள் அடிக்கும் கொள்ளையையும், அதிலிருந்து சுயராஜ்யம் என்னும் பேரால் தேசத்தைக் காட்டிக் கொடுத்து பார்ப்பனர்கள் அடையும் பங்கையும், அதிலிருந்து தேசீயம், ஆஸ்திகம், மதம் என்பவை களின் பேரால் மக்களைக் காட்டிக் கொடுத்து நம்மிற் சிலர் அடையும் கூலியையும் எப்பாடுபட்டாவது வெளியாக்கி, நிறுத்தினாலொழிய ஒரு கடுகளவும் நமது நாடும் மக்களும் முன்னேற முடியாது என்கிற உறுதி கொண்டதினால் தான் இவை எழுதி வர நேரிடுகின்றது.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.07.1928)

Read 33 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.