சமய நெறி உணர்த்துவது சன்மார்க்கமா? துன்மார்க்கமா? குடி அரசு - சொற்பொழிவு - 22.04.1928)

Rate this item
(0 votes)

அக்கிராசனாதிபதியே! சமரச சன்மார்க்க சங்கத்தினர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் அன்பர்களே!

இன்று சமரச சன்மார்க்க சங்க சார்பாக வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் கண்ட புகழுரைகளுக்கு நான் உண்மையிலேயே ஒரு சிறிதும் பொருத்தமில்லாதவனாயிருந்த போதிலும் அதன் போக்கானது எனது தொண்டின் தாத்பர்யத்தையும் போக்கையும் தாங்கள் மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு என்னை புகழ்வதாயிருப்பதால் மிக்க நன்றியறிதலோடும் மகிழ்ச்சியோடும் இவ்வுபசாரப் பத்திரத்தை ஏற்றுக் கொள்ளுகின்றேன்.

 எனது தொண்டைப் பற்றி பலர் ஆதரவளித்தாலும் ஒரு சிலர் அபிப்பிராய பேதப்படுவதையும் ஏதோ முழுகிப் போனது போல் கவலைப்படுவதையும் பார்க்கும் போது எனக்கே சிற்சில சமயங்களில் நாம் ஏதாவது தப்பான வழியில் போகின்றோமோ என்று தோன்றி கலக்கமுறுவதுமுண்டு. இந்த நிலையில் தங்கள் உபசாரப் பத்திரமானது “இனி உனக்கு அப்பேர்ப்பட்ட கலக்கங்கள் கண்டிப்பாய் வேண்டியதில்லை. உனது கருத்துப்படி தொண்டை தீவிரமாக செய்து கொண்டுபோ நாங்கள் உனக்கு பின் உதவியாய் இருக்கின்றோம்” என்று எனக்கு ஊக்கத்தை மூட்டி எனது தொண்டை முன்னிலும் அதிக முயற்சியுடன் செய்ய பிடரியைப் பிடித்து தள்ளுவது போல் இருக்கின்றபடியால் நான் அதை மகிழ்ச்சியும் நன்றியறிதலுடனும் ஏற்றுக் கொள்ளுகிறேன்.
 
நிற்க, அன்பர்களே! இந்த சமயத்தில் சமரச சன்மார்க்க சங்கம் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகின்றேன். அது ஒரு சமயம் உங்கள் மனத்திற்கு கசப்பாயிருந்தாலும் இருக்கலாம். அன்றியும் “என்னடா இவன் நம்மிடத்தில் உபசாரப் பத்திரம் பெற்றுக் கொண்டு நம்மையே உடைச்சல் விடுகிறான்”, “ஏன் இவனுக்கு உபசாரப்பத்திரம் கொடுத்தோம்” என்பதாக தோன்றினாலும் தோன்றலாம். ஆன போதிலும் சிலர் சமரச சன்மார்க்க சங்கம் என்பதாக பெயர் வைத்துக் கொண்டே சமரசத்திற்கு பதிலாக ஏற்றத் தாழ்வும், சன்மார்க்கத்திற்கு பதிலாக துன்மார்க்கமுமே விளையத்தக்க முறையில் நடந்து வருகின்றார்கள். சுருங்கக் கூறில் சமரச சன்மார்க்கமென்பது அனுபவத்தில் பிறரை ஏமாற்றி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வதற்கும் தங்கள் சமயத்தை உயர்த்திக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகின்ற ஆயுதமே ஒழிய வேறில்லை என்றே சொல்லலாம்.

பொதுவாக ஒவ்வொரு மதக்காரரும் உட்சமயக்காரரும் தங்கள் தங்கள் மதம் சமயம் ஆகியவைகளை சமரச சன்மார்க்கக் கொள்கை கொண்டதென்று தான் சொல்லுகின்றார்கள். ஆனால் அவரவர்கள் நடை உடை பாவனை உணர்ச்சி முதலியவைகள் வேறாகவே இருந்து வருகின்றன. ஒவ்வொரு மார்க்கக்காரரும் தமது கொள்கையை ஒப்புக் கொள்ளாத ஒருவனை துன்மார்க்கியாகவே கருதுகிறார். மகமதிய மதம் சமரச சன்மார்க்கத் தன்மை பொருந்தியதானாலும், மற்ற சமயக் கடவுள்களும் கொள்கைகளும் அவர்களுக்கு சிறிதும் சகிக்க முடியாததாகவே இருக்கின்றது. கிறிஸ்த்தவ மதம் சமரச சன்மார்க்கக் கொள்கையுடையதுதான் என்று சொல்லப்பட்டாலும், அது வேறெந்த மதத்திலும் மோக்ஷமடைய வழி கிடையாது என்றும், மற்ற மதஸ்தர்கள் எல்லாம் அஞ்ஞானிகள் என்றும் சொல்லக் கூடியதாக இருக்கின்றது.

இந்து மதமும் அதன் ஒவ்வொரு உட்பிரிவும் சமரச சன்மார்க்கம் கொண்டதென்றே பறையடிக்கப்படுகின்றது. இதைப் போல ஏற்றத்தாழ்வுகளும் துன்மார்க்கங்களும் கொண்ட மதம் இது சமயம் உலகில் வேறு ஒன்றும் இருப்பதாக சொல்ல முடியாது. வைணவத்திற்கும் சைவத்திற்கும் அதனதன் கடவுள்களுக்கும் உள்ள பேதங்களும் விரோதங்களும் சொல்லி முடியாது. ஒவ்வொரு நாளும் இதில் உள்ள உயிர்கொலைகள் கணக்கிலடங்காது. குடியும் விவசாரமும் ஏட்டிலடங்காது.

நிற்க சகலருக்கும் பொதுவாகவே சன்மார்க்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையை உடையது அல்லவென்றே சொல்லுவேன். ஒருவருக்கு சன்மார்க்கமாயிருப்பது மற்றொருவருக்கு துன்மார்க்கமாகவே காணப்படுகின்றது. சிலருக்கு, குழந்தைகளுக்குக் கலியாணம் செய்வது சன்மார்க்கம், சிலருக்கு பக்குவமான ஆண் பெண்கள் இருவருக்கும் அவரவர்கள் சம்மதப்படி கலியாணம் செய்விப்பது சன்மார்க்கம். சிலருக்கு மனிதனை மனிதன் தொடுவது துன்மார்க்கம். சிலருக்கு மனிதனுக்கு மனிதன் தொடுவதினால் குற்றமில்லை என்று சொல்வது சன்மார்க்கம். சிற்றப்பன் மகளை மணந்து கொள்வது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். அத்தை மகளை மணந்து கொள்வது சிலருக்கு சன்மார்க்கம். சிலருக்கு துன்மார்க்கம். மாடு தின்பது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். கடவுளுக்கு கண்ணு, மூக்கு, கை கால், பெயர் பெண்டு பிள்ளை முதலியவைகள் வைத்து வணங்குவது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். காலும் கையும் கெட்டியாயிருந்து நன்றாய் உழைத்து சாப்பிடக்கூடிய வரத் தடியர்களுக்குச் சாப்பாடு போடுவது சிலருக்கு சன்மார்க்கம்; சிலருக்கு துன்மார்க்கம். ஏழை எளியவர்கள், சரீர ஊனமுள்ளவர்கள், உழைத்துச் சாப்பிட சக்தியற்றவர்கள் ஆகியோருக்கு சாப்பாடு போடுவது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம்.

 எனவே இம்மாதிரி ஒருவருக்கு சன்மார்க்கமாயிருப்பது மற்றவருக்கு துன்மார்க்கமாயிருப்பதை நித்திய வாழ்வில் தினம் தினம் எத்தனையோ காண்கின்றோம். ஒரு மார்க்கத்தின் முட்டாள்தனத்தையும், புரட்டுகளையும் வெளியிலெடுத்துச் சொன்னால் எப்பேர்ப்பட்ட சமரச சன்மார்க்கம் என்கிறவனும் பதில் சொல்ல முடியாவிட்டாலும் காய்ந்து விழுந்து மக்களை ஏய்க்கப் பார்க்கின்றானேயொழிய தனது மார்க்கம் உண்மையில் யோக்கியமானதா என்பதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. எனவே உலகத்தில் உள்ள எத்தனையோ புரட்டு மதங்களில் சமரச சன்மார்க்கம் என்பதும் ஒன்றேவொழிய உண்மையில் எல்லோருக்கும் ஏற்ற சமரசத்தையும் சன்மார்க்கத்தையும் கொண்டது எதுவும் இல்லை என்றே சொல்வேன். உங்கள் சமரச சன்மார்க்க சங்கம் இம்மாதிரியான குற்றங்களில் சிக்காமலும், மூட நம்பிக்கை குருட்டு பழக்க வழக்கங்களாகியவைகளுக்கு அடிமையாகாமலும் புராணக் குப்பைகளுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் ஆளாகாமலும் மக்களிடத்தில் காட்டும் அன்பும் கருணையுமே பிரதானமாகக் கொண்டு மனிதத் தன்மையுடன் நடைபெறுமென்று நினைப்பதுடன் அம்மாதிரியே நீடூழி காலம் நடை பெற்று வர வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன்.

(குறிப்பு: 08.04.1928 ஆம் நாள் அம்பலூர் கரிய கவுண்டர் அவர்கள் பங்களாவில் அம்பலூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரால் வழங்கப்பட்ட வரவேற்பு உபசாரப் பத்திரத்திற்கு பதில் அளித்து உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 22.04.1928)

 
Read 29 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.