யார் வார்த்தைகள் கடினம்? (குடி அரசு - கட்டுரை - 25.03.1928)

Rate this item
(0 votes)

பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லாத மந்திரிகளை கண்டிப்பதற்கு என்று பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் கோகலே ஹாலில் ஸ்ரீ பெசண்டம்மையின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியபோது ஒருவர் பேசுகையில் “மந்திரிகள் தங்கள் பெண் ஜாதிகளை விட்டுக் கொடுத்து மந்திரி வேலைகளை சம்பாதிப்பார்கள்” என்று சொன்னாராம். இது யோக்கியமான வார்த்தையா என்று கேட்கின்றோம். இவ்வார்த்தைகளை எந்த யோக்கியர் களாவது கண்டித்தார்களா என்று கேட்கின்றோம். ஸ்ரீவரதராஜுலுவாவது அவரது பத்திரிகையாவது தமது தலைவர்களுடைய இம்மாதிரி வார்த்தைகளை கண்டித்தாரா என்று கேட்கின்றோம்.

ஸ்ரீமான் குழந்தை கடற்கரையில் மந்திரிகளை கொடும்பாவி கொளுத்தியதற்கு கோபித்துக் கொண்டதாக வேஷம் போட்ட ஸ்ரீவரத ராஜுலுவுக்கும் “தமிழ்நாடு”க்கும் “பெண் ஜாதிகளை விட்டுக் கொடுப்பார்கள்” என்று சொன்ன வார்த்தை அவ்வளவு கடினமானதாக தோன்றவில்லைபோல் இருக்கின்றது. இதனால் அக்கோஷ்டியின் அற்பத்தனமும் காலித்தனமும் எவ்வளவு என்பது விளங்கவில்லையா?

 

சாதாரணமாக ஹைகோர்ட் ஜட்ஜிகளில் யாருக்காவது மேக வியாதி இருக்குமானால் அது மைலாப்பூர் காங்கிரஸ்வாதிகள் தேசீயவாதிகள் உபயமேயாகும். இம்மாதிரி யோக்கியர்கள் மிகுதியும் நிறைந்த சென்னை காங்கிரஸ்வாதிகள் தங்கள் யோக்கியதைகளை மறைத்துக் கொண்டு இம்மாதிரி பேச அயோக்கியர்களைத் தூண்டி விடுவதும், அதை கண்டிக்காமல் இருக்கச் செய்வதும் ஒரு ஆச்சரியமல்ல. தவிர, வேறு ஒரு காங்கிரஸ் தலைவராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும் அவரது ஆயுளில் இம்மாதிரியாக அநேக தடவைகளில் அதிகப் பிரசங்கித்தனமாய் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டதானது ஸ்ரீவரதராஜுலு மன்னிப்பு கேட்டுக் கொண்டதைவிட நூறு பங்கு அதிகமாகவே இருக்கும். ஆகவே யாருடைய வார்த்தைகள் கடினமானதென்பதும் முழுவதும் அக்கிரமமானதும் பொய்யானதும் என்பதும் இழிவானது என்பதும் இதிலிருந்தாவது பொது ஜனங்கள் உணர வேண்டுமாய் எதிர்பார்க்கின்றோம்.

 

அன்றியும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமான, உத்தியோகங்கள் என்ன வேலை செய்து யார் பெற்றாலும் பத்திரிகைகள் என்ன வேலை செய்து யார் நடத்தினாலும் அவைகள் எல்லாம் யோக்கியமான தேசீயமென்பதும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லையானால் அவைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுமே தேசீயமாகவும் காங்கிரஸ் சட்டமாகவும் இருக்கின்றது என்பதையும் உணரவேண்டுமாய் விரும்புகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 25.03.1928)

 
Read 42 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.