மகாத்மாவைப் பற்றி “தமிழ்நாடு”வின் கவலை (குடி அரசு - கட்டுரை - 25.12.1927)

Rate this item
(0 votes)

“தமிழ்நாடு” பத்திரிகையானது 16-12-27 தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது. அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல் வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர் என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழிகுணம் படைத்தவராக இருக்க வேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்க வேண்டுமென்றும் எழுதியிருக்கிறது.

மகாத்மா காந்தி என்பவரை ஸ்ரீமான் காந்தி என்று சொல்வதால் இழிகுணப் பட்டமும், மதியற்ற பட்டமும் வந்தாலும் வரட்டும் நமக்கு அதைப் பற்றி கவலையில்லை.

 ஸ்ரீமான் காந்தி என்றைய தினம் மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவைகள் பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வருணத்தானுக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு. அதைத்தான் அவனவன் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார் என்பதாக நாம் உணர்ந்தோமோ அன்றே அவரிடம் மகாத்மா தன்மை அங்கு இல்லை என்று தீர்மானித்து விட்டோம். அதிலும் சூத்திரன் என்பவன் அடுத்த ஜென்மத்தில்தான் பிராமணனாய் பிறக்கலாம் என்கின்ற அவருடைய தீர்ப்பு சுத்த சுத்தமாய் நம்மை மாற்றியது. மகாத்மா பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும் நடவடிக்கையையும் பொறுத்துத்தான் வழங்கப்படுவதே தவிர வெறும் உருவத்திற்காக வழங்கப்படுவதல்ல என்பதை உணர்ந்தவர்களுக்கு இவ்விஷயத்தில் கவலை ஏற்பட நியாயமில்லை. மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்கி நாம் எழுத ஆரம்பித்து இன்றைக்கு சுமார் இரண்டு மாதம் ஆகின்றது. இது வரையும் சகித்துக் கொண்டிருந்த “தமிழ்நாட்டிற்கு” இந்த வாரம் திடீரென்று கவலை தோன்றி நமது “இழிகுணத்தையும்”, “மதியின்மையையும்” கண்டுபிடித்து எழுதி இருப்பதற்கு இரகசியமான காரணமில்லாமல் போகவில்லை. அதை தக்க சமயம் வெளியிடுவோம்.
 
ஒவ்வொரு பட்டமும் அவரவர்கள் அபிப்பிராயத்தாலோ, நடவடிக்கைகளாலோ ஏற்படுவதும் அவைகள் மாறும்போது மறைபடுவதும் வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் சிலருக்கு பட்டம் மக்களின் அறியாமையினால் ஏற்படுவதும், விஷயம் தெரிந்தவுடன் மறைந்துபோவதும் வழக்கமாக இருக்கின்றது. இது வரையில் எத்தனை பேர்கள் தலைவர்களாகி மறுபடியும் நினைப்பதற்கே அருகர்களல்லாதார்களாய்ப் போயிருக்கின்றார்கள் என்பதை யோசித்துப் பார்த்திருந்தால் ‘தமிழ்நாடு’ வுக்கு இவ்விஷயத்தில் இவ்வளவு கவலை ஏற்பட்டிருக்க நியாயமே இருந்திருக்காது.

தவிர கடவுளின் அவதாரமாகவும் மகாத்மாவாகவும் தோன்றினதாகச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் என்பவன் கடைசி காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடனால் கொல்லப்பட்டு அழுவாரற்று செத்து நாறிக் கிடந்ததாகவுள்ள விஷயங்களை அறிந்திருந்தால் இம்மாதிரி காரியத்திற்காக ஒருவரை இழிகுணம் என்றும், மதியீனம் என்றும் எழுத நியாயம் கிடைத்திருக்காது என்போம். ஆனாலும் நம்முடைய இந்த சமாதானமெல்லாம் ‘தமிழ்நாடு’ பத்திரிகைக்கல்ல. ஏனெனில் அது பழய குப்பையை தேடிப் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கின்ற வேலையில் முனைந்து இருக்கின்றது. ஆதலால் அதற்கு இச்சமாதானங்கள் ஒரு உணர்ச்சியையும் கொடுக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதை கண்ணுற்றவர்கள் ஏமாறாதிருக்கவே இதை எழுதுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 25.12.1927)

Read 19 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.