பஹிஷ்காரமும் ஜஸ்டிஸ் கக்ஷியும் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.12.1927)

Rate this item
(0 votes)

பஹிஷ்காரக் கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சியாரும் சேர்ந்து கொண்டால் தேவலாம் போல அக்கட்சி பிரமுகர்களுக்கு தோன்றுவதாய்த் தெரிகின்றது. ஏனெனில் பாமர ஜனங்களிடம் தங்களுக்குச் செல்வாக்கில்லை என்று நினைப்பதுடன் அரசாங்கத்தாரும் தங்களைக் கண்டால் பயப்படுவதில்லை என்றும் நினைப்பதாய்க் காணப்படுகிறது. அவர்கள் அப்படி நினைத்திருப்பது தப்பு என்பது நமது கெட்டியான அபிப்பிராயம். பாமர மக்கள் எப்போதும் பாமர மக்களாகவே இருக்க முடியாது. இப்பொழுது சற்று கண்விழித்துக் கொண்டு வருகின்றார்கள். பாமர மக்களிடம் செல்வாக்குப் பெற்று ஏதாவது நன்மை செய்ய வேண்டுமானால் பாமர மக்கள் மனம் மகிழும்படியான மாதிரியிலேயே போய்க் கொண்டிருப்பதினால் ஒரு பலனும் ஏற்படாது. அவர்கள் உண்மையை உணர்ந்து நன்மையைக் கடைபிடிக்கும்படி செய்ய வேண்டும். அதற்காக காத்திருந்தாலும் குற்றமில்லை. இரண்டொரு தடவை தோல்வி ஏற்பட்டாலும் குற்றமில்லை. இல்லாவிட்டால் முக்கியமான சமயத்தில் ஆபத்து வந்துவிடும். பிறகு சுலபமாய் திருத்த முடியாமலும் போய் விடும். ஆதலால் தக்க அஸ்திவாரத்துடனும் நிலையான கொள்கைகளுடனும் வேலை செய்ய வேண்டியதுதான் பொறுப்பாகுமே தவிர கூட்டத்தில் கோவிந்தா போடுவது பொறுப்பாகாது என்று நினைக்கிறோம்.

தவிர, சர்க்கார் பயப்பட மாட்டார்கள் என்று எண்ணுவதும் தப்பு என்று நினைக்கின்றோம். சர்க்காரை பயப்படுத்துவதாய் நினைப்பதைப் போல முட்டாள்தனமான காரியம் வேறில்லை. வெறும் உத்தியோகம் மாத்திரம் நமது கவலையானால் சர்க்காரை மிரட்டுவது பயன்படும். அது நமது முக்கிய நோக்கமல்ல. ஒருக்கால் அப்படியே வைத்துக் கொண்டாலும் நாமாக ஒரு காரியம் செய்து அதன் மூலம் சர்க்காரை மிரட்டலாம். அந்த யோக்கியதை வரும் வரை காத்திருக்கலாம். அப்படிக்கில்லாமல் பார்ப்பனர்களோடு சேர்ந்து நாமும் கூப்பாடு போடுவதின் மூலம் சர்க்காரை மிரட்டினால் ஒரு சமயம் சர்க்காரும் பயப்படுவதானால் அதன் பலன் முன்னின்று சத்தம் போட்ட பார்ப்பனர்களுக்குத்தான் ஏற்படுமே தவிர மற்றவர்களுக்கு ஒன்றும் ஏற்படப் போவதில்லை.

 பார்ப்பனர்கள் அவ்வளவு பயித்தியக்காரரல்ல. மிஞ்சி ஏதாவது கிடைத்தால் அவர்கள் தின்றது போக மீதி எச்சில்தான் கிடைக்கும். ஒரு சமயம் நமக்கு ஏதாவது பெரிய பலன் கிடைப்பதாயிருந்தால் அப்போது வேறு வழியை அனுஷ்டிக்க பார்ப்பனர்களுக்குத் தெரியும். தவிரவும் ஒரு பெரிய சமூகத்தின் நிரந்தரமான முன்னேற்றத்திற்கு பாடுபடும் இயக்கம் இம்மாதிரி அடிக்கடி மாறும் கொள்கைகளை பார்ப்பன அரசியல்காரருக்கும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களுக்கும் பயந்து கொண்டு மாற்றி வந்தார்களா? பார்ப்பனரல்லாதார் என்கின்ற இவ்வளவு பெரிய சமூகத்தின் பேரால் ஏற்பட்ட இயக்கம் தனக்கென ஒரு மனத்துணிவும் நிலையும் இல்லாமல் கூச்சலுக்கும் கும்பலுக்கும் பயந்து கொண்டிருக்கின்றது என்று பிறர் சொல்லும்படி நடந்தார்களா?
 சர்க்காரையாவது உதறித் தள்ளிவிட வேண்டும். யோக்கியமான நிலையான கொள்கைகளை கட்டிக்கொண்டு சாகவேண்டும். அப்பொழுது தான் நமது பின் சந்ததிக்காவது பலனுண்டு. இம்மாதிரி மனக்கிலேசங்கள் வரும்போது உண்மைத் தலைவர்களான டாக்டர் நாயர் பெருமானையும், சர். தியாகராயரையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஏதாவது அடிக்கடி மாறினார்களா? பாமர மக்களுக்காவது பயந்தார்களா என்பது ஞாபகப்படுத்தும் என்று நினைக்கின்றோம். முடிவாக நாம் சொல்லுவது என்னவென்றால் பார்ப்பனரல்லாத சமூக இயக்கத் தலைவர்கள் தங்களை காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களைப் போல் தாங்கள் தங்கள் பெண்டு பிள்ளை குடும்பங்களுக்கு மாத்திரம் தலைவர்கள் என்று எண்ணாமல், பார்ப்பனர்களாலும், அரசாங்கத்தாராலும் எவ்வளவோ கொடுமைகள் செய்யப்பட்டு வாயில்லாப் பூச்சிகளாய் கிடக்கின்ற பாமர மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் தலைவர்கள் பிரதிநிதிகள் என்பதை நினைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.12.1927)

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.