நாம் சுயராஜ்யமடையத் தகுதியுடையவர்கள் தானா? குடி அரசு - சொற்பொழிவு - 27.11.1927

Rate this item
(0 votes)

இவ்வுலகத்தில் வேறு எந்த மதத்திடத்திலும் மனிதர்கள் பிறவியில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வழக்கம் கிடையாது. ஆனால் நம்முடைய தேசத்திலோ ஒருவன் எவ்வளவு கேவலமான நடத்தை யுடையவனாயினும் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்துவிட்டால் அவன் உயர்ந்த ஜாதியென்றும், எவ்வளவு நல்ல நடத்தை யுடையவனாயிருந்தாலும் அவன் ‘தாழ்ந்த ஜாதி’யில் பிறந்து விட்டானானால் அவன் கேவலமாகவும் கருதப்பட்டு வருகிறான். இதற்கு காரணம் மதந்தான். இம்மாதிரி ஒரு மதத்தை அனுஷ்டித்து வரும் வரையில், நாம் அவற்றை யெல்லாம் கண்டிக்காமல் மௌனமாய் யிருக்கும் வரையில் நாம் நூற்றுக்கணக்கான மக்களை நமது சமூகத்திலிருந்து பிற மதங்களுக்கு பலி கொடுத்துக்கொண்டு தான் வரவேண்டும்.

இந்துமத பரிபாலன போர்டு தலைவர் ஸ்ரீ சதாசிவய்யர், இந்துக்கள் என்பதற்கு வேதத்தை எவன் நம்புகிறானோ அவன் தான் இந்து என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ஆதி திராவிடர்கள் பஞ்சமர்கள் இவர்களெல்லாம் இந்துக்கள், இந்தியா ஒரு காலத்தில் உன்னத நாகரீகம் படைத்திருந்த காலத்தில் மற்ற மேல் நாடுகளெல்லாம் நாகரிகமற்று அந்நாட்டு மக்கள் காட்டுமிராண்டிகளாக புழு பூச்சிகள் முதலிய வஸ்துக்களைத் தின்று கொண்டு வனாந்தரங்களிலும் கடற்கரையோரங்களிலும் திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் இப்போது நம் நாட்டை ஆண்டு வருகின்றனர். நாம் பிற நாட்டை ஆள முடியாவிட்டாலும் நமது நாட்டையாவது ஆண்டு கொள்ளக்கூடாதா? ஏன் நாம் ஆண்டு கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நாம் மதத்தின் பேராலும் மூடக் கொள்கைகளின் பேராலும் நாம் அடிமைப்பட்டிருப்பதுதான். மற்ற நாடுகளெல்லாம் இம்மாதிரி மூடக் கொள்கைகளையும், அர்த்தமற்ற உயர்வு தாழ்வு கற்பிக்கும் மதத்தையும் அடியுடன் ஒழித்துவிட்டதால்தான் அவர்கள் தங்களுடைய தேசத்தை ஆளுவதுடன் பிற நாட்டாரையும் அடக்கி ஆண்டு வருகிறார்கள்.

 இப்படி இருக்க நமது நாட்டையும் நம் மக்களையும் கெடுத்து வருவது பிராமணர்கள் பேசும் வருணாசிரமமும் அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்து மதம் என்பதும் தான். வர்ணாசிரமத்தைப் பற்றி பலர் பலவிதமாய் பேசுகிறார்கள். எவ்வித வியாக்கியானம் செய்த போதிலும் அது உயர்வு தாழ்வு கற்பிக்கிறது. ஆதி தமிழர்களிடத்தில் வருணாசிரமம் இருந்திருக்குமானால் வருணாசிரமம் என்னும் சமஸ்கிருத பதத்திற்குப் பதிலாக தமிழ் மொழியில் இருந்திருக்க வேண்டும். இன்னும் வருணாசிரம பிராமணர்கள் ஒரு தமிழனுடன் பேசிவிட்டால் அதற்காக ஒரு பிராயச்சித்தமும், அவனுடைய பாஷையை பேசினால் அதற்கொரு பிராயச்சித்தமும், அவன் நிழல் பட்டால் அதற்கொரு பிராயச்சித்தமும் செய்வதை நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக சங்கராசாரி போன்றவர்கள் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதல்லாமல் இவ்வாறு நம்மை இழிவுபடுத்தியும் வருகின்றார்கள். ஆகையால் நாம் இனி இத்தகைய இழிவுகளை ஒரு நாளும் சகித்திருக்க முடியாது.
 இனி சடங்குகள் என்று பெயர் வைத்துக் கொண்டு நம்மிடமிருந்து பணம் பறிப்பதுமல்லாமல் நம்மை ஒரு ஜாதியாருக்கு அடிமையுமாக்குவதை ஒழிக்க வேண்டுமென்பதைத் தவிர புரோகிதர்களின் வாயில் மண்ணைப் போட வேண்டுமென்னும் கெட்ட எண்ணத்துடன் நான் கூறவே இல்லை. ஒரு கூட்டத்தாருக்குக் கொடுப்பதே புண்ணியமென்று நினைப்போமானால் நாம் சுயராஜ்யமடைவதற்கே தகுதியுடையவர்களல்ல. நமது முன்னோர்கள் தர்மம், புண்ணியம் என்று வாரி வாரி இப்பிராமணர்களுக்கு கொடுத்தும் அவர்களும் அவர்களுடைய குடும்பமிருக்கிற நிலைமையையும் பாருங்கள். நமது சுயராஜ்யமும் போய், பரராஜ்யமும் அடிமைத்தனமும்தான் மீதி. இன்னும் தஞ்சாவூர் ராஜா காசி முதல் கன்னியாகுமரிவரை தான தர்மங்களும், சத்திரங்களும் கட்டி வைத்திருந்தும் அவருடைய பெயர் சொல்ல இன்று ஒரு சந்ததி கிடையாது. இன்னும் எத்தனை குடும்பங்கள் கெட்டுப்போய்விட்டது என்று கவனியுங்கள்.

ஏழைகளுக்கும், கூன், குருடு, வேலைசெய்ய இயலாதவர்களுக்கே நாம் தர்மங்கள் செய்ய வேண்டுமேயொழிய, வேலை செய்யவோ, பணம் சம்பாதிக்கவோ, திறமையுள்ள பிராமணக் கூட்டத்தாருக்கு மதங்களின் பெயராலும் வீணாக நாம் ஒரு நாளும் கொடுக்கவே கூடாது. ஒரு குழந்தை ஜனனமானது முதல் அதன் ஆயுள் பரியந்தம் நாம் சடங்குகள் பெயரால் பணம் கொடுப்பதல்லாமல் இறந்த பின்னும் நாம் செலவு செய்கிறோம். இத்தகைய மனப்பான்மையுள்ள நாம் சுயராஜ்யமடையத் தகுதியுடையவர்கள்தானா? மக்களுக்கும் உயர்வு, தாழ்வு, தீண்டாமை முதலியவைகள் நாட்டிலிருந்து வரும்வரை நம் நாடு சுயராஜ்யம் அடையப் போவதில்லை. ஆகையால் நீங்கள் இப்புரோகித மதத்தை ஒழித்து சுயமரியாதை இயக்கத்தைப் பலப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

(குறிப்பு: 20.11.27 இல் திருப்புவனத்தில் நடைபெற்ற கும்பகோணம் தாலூகா பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் மாநாட்டுத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய உரை.


குடி அரசு - சொற்பொழிவு - 27.11.1927

 
Read 38 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.