ஸ்ரீமதி பெசன்டம்மையார் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.11.1927)

Rate this item
(0 votes)

ஸ்ரீமதி பெசன்டம்மையார் நாம் முன் நினைத்தது போலவே திக் விஜயம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சியின் வரவேற்புகளும், உபசாரங்களும் தடபுடலாக நடைபெறுவதாக விளம்பரமாகி வருகின்றது. இந்த சமயத்தில் எதற்காக பெசண்டம்மையாரை பார்ப்பனர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள் என்பதை கடுகளவு புத்தியுள்ள பார்ப்பனரல்லாதாரும் உணரக்கூடும். ஆனால் பார்ப்பனரல்லாதார்களில் முனிசிபாலிட்டி, தாலூகா போர்டு முதலிய ஸ்தானங்களில் பதவி வகிக்கும் சுயமரியாதை அற்ற பலர் இப்பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமாய் இருப்பது நமக்கு மிகவும் அவமானமாக இருக்கின்றது. அநேக பார்ப்பனரல்லாதார்கள் கொள்கையே இல்லாமல் இரண்டு பக்கமும் வாயை வைத்துக் கொண்டு தம்முடைய வாழ்வையே பிரதானமாகக் கருதி திரியும் இழிதன்மை மாறினாலொழிய பார்ப்பனரல்லாதாருக்கு சுயமரியாதை ஏற்படுவதென்பது கனவேயாகும்.

ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் பதவி கிடைக்கும்வரை தான் பார்ப்பனரல்லாதார் என்றும், பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு பாடுபடுகின்றவனென்றும், பார்ப்பன அக்கிரமங்களை அடக்கவே இப்பதவிகளுக்கு ஆசைபடுகிறேன் என்றும் சொல்லிக் கொண்டு பல்லைக் காட்டி பதவி பெற்றதும், பெற்ற தாயை துரோகம் செய்வது போல் தன்னையும் பரிசுத்த பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு பார்ப்பனக் கூட்டத்துக்கு வால் பிடிப்பதில் பந்தயம் போட்டு முந்த ஆரம்பித்து விடுகிறார்கள். இதைப்போல் சிறுமை குணம் வேறு கூட்டத்தில் இருப்பதாக நாம் சொல்ல முடியாது.

 என்ன காரியத்திற்காக முனிசிபாலிட்டிகளும், போர்டுகளும் பெசண்டம்மையாருக்கு உபசாரபத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டும்? அவ்வம்மையார் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு செய்த நன்மை என்ன? அவ்வம்மையாரின் நாணயம் என்ன? அபிப்பிராயம் என்ன? இனியும் அவ்வம்மையார் செய்யப் போகும் காரியமென்ன? ஒன்றையுமே கருதாமல் இம்மாதிரி காரியங்கள் செய்வதால் இம்மாதிரி பார்ப்பனரல்லாதார் தங்களுக்கு சுயபுத்தியும், சுயமரியாதையும், பகுத்தறிவும் இருப்பதாக எப்படி சொல்லிக் கொள்ள முடியும்? ஒரு சிறு பார்ப்பனப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு லோககுரு வந்துவிட்டார், லோக குரு வந்து விட்டார் என்று பார்ப்பனர்களைவிட மோசமாய் ஏமாற்றுவதும், தினம் பரமாத்மாக்களுடனும், மகாத்மாக்களுடனும் பேசுவதாக வேஷம் போடுவதுமாகிய வழிகளில், பார்ப்பன மதத்தை பிரசாரம் செய்வதும் இவ்வளவும் அல்லாமல் அரசியலிலும் மிகவும் மோசமாக நடந்து ஒத்துழையாமையின்போது எதிர் பிரசாரம் செய்ததும், பஞ்சாப் அக்கிரமங்களைப் பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்திற்கு விரோதமாய் வெள்ளைக்காரருடன் சேர்ந்துகொண்டு “பஞ்சாப்காரர்கள் வெள்ளைக்காரர் மேல் செங்கல்லை எறிந்ததற்கு வெள்ளைக்காரர்கள் பீரங்கி மூலமாகவும், ஆகாச கப்பல் மூலமாகவும் ஈயக்குண்டையும் வெடி குண்டையும் எறிந்தது மிகவும் சரி” என்றும் சொல்லி, வெள்ளைக்காரர்களை ஆதரித்ததுடன் இன்னமும் தன் கோஷ்டி முழுவதையும் விட்டு வெள்ளைக்காரருக்கு உதவியும் செய்ய சொல்லி இருக்க இப்போது திடீரென்று எவ்விதத்தில் அம்மையாருக்கு தேசாபிமானமும், இந்தியாபிமானமும் வந்துவிட்டதென்று கேட்கின்றோம்.
 இந்தம்மையாரை இப்போது நடத்துகின்றவர்கள் யார் என்பதும் அம்மையார் பிரசாரம் இன்னதுதான் என்பதும் யாருக்குத்தான் தெரியாது என்று சொல்ல முடியுமா?

ஸ்ரீமான்கள் எ.ரங்கசாமி அய்யங்காரும், சத்தியமூர்த்தி அய்யரும் மறைமுகமாயிருந்து கொண்டு நடத்துகின்றார்கள். அம்மையின் பிரசாரமெல்லாம் பார்ப்பன மதப் பிரசாரமும் பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றுவதுமேயாகும். அதோடுகூடவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஆnக்ஷபிப்பதுமாகும். இந்த நிலைமையில் உள்ளவர்களை பார்ப்பனர்கள் வரவேற்கவும், பூர்ண கும்பமெடுக்கவும் மற்றும் படம் வைத்து பூஜிக்கவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனரல்லாதார் எதற்காக இதில் சேருகின்றார்கள் என்பதுதான் நமது கேள்வி.

ஆதலால் இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.11.1927)

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.