இந்திய தேசீயம் - காங்கிரசுக்கு பணம் சேர்க்கும் முறை (குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.11.1927)

Rate this item
(0 votes)

யானைக்கவுக்களிக்கடுத்த கிருஷ்ணா தியேட்டர் என்னும் நாடகக் கொட்டகையில் ஸ்ரீமதி கமலம் என்கின்ற நடனப் பெண்ணைக் கொண்டு வள்ளிபர்ணியம் அதாவது வள்ளி என்கின்ற குறப்பெண்ணை பரமசிவன் என்கிற இந்து மதக் கடவுளுடைய மகனான சுப்பிரமணியக் கடவுள் என்கிற மற்றொரு இந்து மதக் கடவுள் நரசோரம் செய்த (அதாவது திருட்டுத்தனமாய் அடித்துக்கொண்டு போன) கதையை நாடகமாக நவம்பர் மாதம் 3 -தேதி ஆடிக்காட்டி அதன் டிக்கெட் விற்பனையின் மூலம் காங்கிரசுக்கு பணம் சம்பாதிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். தேசீயப் பத்திரிகைகள் என்பவை நாடகத்தைப் பற்றி விளம்பரம் செய்வது கூட தப்பு என்று ஒரு காலத்தில் மகாத்மாவாயிருந்த ஸ்ரீமான் காந்தி எழுதியிருந்தார். இப்போது தேசீய சபையின் தலையெழுத்து நாடகமாடி பணம் சம்பாதிக்க வேண்டியதாய்ப் போய் விட்டது. அதிலும் என்ன நாடகம் என்றால் ஒருவன் பெண்ணை ஒருவன் திருடிக் கொண்டு போகின்ற நாடகம். அதுவும் எதன் பேரால் என்றால் இந்து மதத்தின் பெயராலும், இந்து மதக் கடவுள் பெயராலும். அதுவும் யாரால் என்றால் ஸ்ரீமதி கமலம் என்கின்ற நடனப் பெண்மணியால், அதுவும் டிக்கெட் யாரால் விற்கப்படுகிறது என்றால் சென்னை மகாஜன சபை கட்டிடத்தில் காங்கிரஸ் தரகர்களால். எனவே நமது மதத்திற்கும் நமது கடவுளுக்கும் நமது ஒழுக்கத்திற்கும் நமது தேசீயத்திற்கும் நமது காங்கிரஸ் தரகர்களின் யோக்கியதைக்கும் நற்சாட்சி பத்திரம் வாங்க மிஸ் மேயோவிடம் போக வேண்டுமா அல்லது மைலாப்பூர் காங்கிரஸ்காரரிடம் போக வேண்டுமா என்பதை பொதுஜனங்களே யோசியுங்கள்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.11.1927)

Read 24 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.