சென்னையில் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு. (குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.10.1927)

Rate this item
(0 votes)

சென்ற வாரம் 22, 23 - ம் தேதிகளாகிய சனி ஞாயிற்று கிழமைகளில் சென்னை பீபிள்ஸ் பார்க் என்கிற மைதானத்தில் அமைக்கப்பட்ட நாயர் பந்தல் என்கின்ற ஒரு அழகிய பெருங் கொட்டகையில் பார்ப்பனரல்லாத வாலிபர்களின் முதலாவது மாகாண மகாநாடு பெங்களுர் சட்டசபை மெம்பரும் முனிசிபல் சேர்மனுமான ஜனாப் மகமத் அப்பாஸ்கான் சஹேப் அவர்கள் தலைமையில் நடந்தது. சுமார் ஆண், பெண் உட்பட 5000 ஜனங்கள் வரை விஜயம் செய்திருந்தார்கள். அவ்வாலிப சங்கத் தலைவரும் மகா நாட்டின் வரவேற்புத் தலைவருமான ஸ்ரீமான் ஆரியா அவர்கள் வரவேற்பு உபன்யாசமும், தலைவரின் அக்கிராசன உபந்யாசமும், வாலிப சங்கத்தின் ஆரம்பத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும், பார்ப்பனரல்லாத வாலிபர்களும் பெரியோர்களும் இனி நடந்து கொள்ள வேண்டியதைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொல்லி இருக்கின்றன. அவற்றை ஒவ்வொருவரும் கவனித்துப் படிக்க வேண்டியது அவசியம். தவிர இம்மகாநாடானது அளவுக்கு மேல் வெகு விமர்சையாகவும் அதி ஊக்கமாகவும், மிக தாராள நோக்கத்துடனும் நடைபெற்றதானது நமது நாடு விழித்துக் கொண்டதென்பதையே காட்டுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் உலகத்தையே மூடநம்பிக்கையிலிருந்தும் அடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை செய்யத் தகுந்த அவ்வளவு சக்தி அடங்கியவைகளாகவே இருந்தன.

உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தையும் அதை ஆதாரமாகக் கொண்ட புராணங்களையும் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ய வேண்டுமென்று செய்த தீர்மானமும், சூத்திரன் என்று கூப்பிட்டால் பினல் கோட் சட்டப்படி கடுங்காவல் தண்டனையும் கசையடியும் கொடுக்க வேண்டும் என்று பேசிய பேச்சும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியை எல்லோரும் அறிந்து விட்டார்கள் என்பதையே வெளியாக்குகிறது. அன்றியும் குடும்பச் சொத்துக்களில் ஆண்களுக்கு உள்ளது போலவே பெண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டுமென்று செய்த தீர்மானமும், விதவைகளான பெண்களுக்கும் குடும்ப சொத்தில் தங்கள் புருஷர்கள் இருக்கும் போது அனுபவித்து வந்த வாழ்க்கையையே அளிக்க வேண்டுமே அல்லாமல் ஜீவனாம்சம் என்பதாகச் சொல்லிக் கொண்டு வக்கீல் வீடுகளிலும் கோர்ட்களிலும் அலையாதிருக்கச் செய்ய வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவைகளாகிய பல தீர்மானங்களும், சுயமரியாதைக்காகச் செய்யப்படும் சத்தியாக்கிரகங்களிலும் அதை ஆதரிப்பதுடன் அதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று செய்த தீர்மானமும் இவைகளில் காட்டிய உற்சாகமும் தமிழ் நாட்டின் சுயமரியாதை உணர்ச்சிக்கு வீரம் எழுந்து விட்டதென்பதையே காட்டுகின் றன.

 இவ்வாலிப சங்கமானது இத்தீர்மானங்களுடன் திருப்தி அடைந்து விடாமல் இவை அமுலுக்கு வரத்தகுந்த அளவு வேலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன் பம்பாய் வாலிப மகாநாட்டிலும் ஏறக்குறைய இது போன்ற தீர்மானங்களே நிறைவேறி இருக்கின்றன. ஒரு நாடு விடுதலை அடைய வேண்டுமானால் அந்நாட்டு வாலிபர்களுக்கு விடுதலை உணர்ச்சி வர வேண்டும் என்கின்ற ஆப்த வாக்கின்படியே நமது நாட்டுக்கு இப்போது விடுதலை அறிகுறிகள் காணப்படுகின்றதும், அத்துடன் பால்யைகளும் முனைந்து முன் இருக்கின்றதானது இம்மகாநாட்டால் அறியலாம் ஸ்ரீமதிகள் கிருஷ்ணாபாய் BA,LT, CV.நாயகம்,BA, பாரிஜாதம் BA, இந்திராணி பாலசுப்ரமணியம், ஸ்கவுட் மாஸ்டர், அலமேலு மங்கைத்தாயாரம்மாள் முதலிய ஸ்திரி ரத்தினங்களின் சொற்பொழிவுகள் முன் காலத்தில் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் காணப்படும் வீரத் தாய்மார்களை எல்லாம் உறுதிபடுத்தியது. எனவே வாலிப சங்கத்தையும் இம் மகாநாட்டையும் அதன் நிர்வாகிகளையும் அதற்கு ஆதரவளித்த பெரியோர்களையும் நாம் மனப்பூர்வமாய் பாராட்டுவதுடன் நமது கொள்கைக்குப் பின்பலமாயிருப்பதற்கு நமது நன்றியறிதலையும் தெரிவித்து கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.10.1927)

Read 39 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.