வகுப்பு வாதம் ஒழிந்ததா? (குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.10.1927)

Rate this item
(0 votes)

சென்னையில் பார்ப்பனர் கையாளாக இருந்து வந்த ஸ்ரீமான் பக்தவத்சலு நாயுடுவைப் பற்றி பலரும் அறிந்திருக்கக்கூடும். அவர் கார்பரேஷனில் இருக்கும் வரையும் பார்ப்பனர்கள் இஷ்டப்படி கமிஷனரை வைவதையே தொழிலாகக் கொண்டவர். அவருடைய புத்திசாலித்தனம் அறிய வேண்டுமானால் ஒரு விஷயத்தில் பார்க்கலாம். அதாவது கமிஷனர் முனிசிபல் பள்ளிக்கூடங்களுக்கு புஸ்தகங்கள் வாங்குவதில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வெள்ளைக்காரர் கம்பெனியிலும் பார்ப்பனர் கம்பெனியிலும் வாங்கி வருவதைத் தெரிந்தும், ஒரு நாயுடு கம்பெனியில் நூறு ரூபாய் சில்லரைக்கு புஸ்தகம் வாங்க நேரிட்டதற்காக ஸ்ரீ பக்தவத்சலு நாயுடு அவர்கள், புஸ்தகக் கடைக்காரரும் கம்மீஷனரும் நாயுடுவாய் இருப்பதால் தானே இந்த பள்ளிக்கூடப் புஸ்தகங்கள் நாயுடு கம்பெனியாரிடம் வாங்கப்பட்டது என்பதாய் ஒரு கேள்வி கேட்டார். இந்த கேள்வி கேட்ட ஸ்ரீ பக்தவத்சலமும் ஒரு நாயுடுதான் என்பதை வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண் டால் இந்தக் கேள்வியில் எவ்வளவு புத்திசாலித்தனமிருக்கும் என்பதை அறியலாம். அவ்வளவு தூரம் பார்ப்பன மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்த ஸ்ரீ நாயுடு அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் தொழிலாளர் பிரதிநிதியால் அதிகமான ஓட்டுக்களால் தோற்கடிக்கப்பட்டார்.

இப்போது தாலூகா போர்டிலும் ஸ்ரீ நாயுடு பார்ப்பனர்கள் ஆயுதம் என்பதற்காகவே அதிகமான ஓட்டுகளால் தோற்கடிக்கப்பட்டார். அதாவது ஸ்ரீ பக்தவத்சலத்திற்கு 26 ஓட்டுகளும் அவருக்கு எதிரியாய் நின்றவருக்கு 443 ஓட்டுகளும் கிடைத்தன. 417 அதிகமான ஓட்டுகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தால் வகுப்புவாதம் வளருகின்றதா செத்துவிட்டதா என்பதை யோசித்தால் தெரியாமல் போகாது. ஒவ்வொருவூரிலும் இதே மாதிரி நடந்து கொண்டுதான் வருகின்றது. இதை மாற்றத்தான் சென்னையில் காங்கிரசு நடத்துவதும், மகாத்மாவைக் கொண்டு பிரசாரம் செய்விப்பதும் பார்ப்பனர்களுக்கு இதுசமயம் மெத்த அவசியமாய் போய்விட்டது. இதனால் நமது மக்கள் ஏமாறவுங்கூடும். அன்றி இந்த வெற்றி அடைந்ததினாலேயே பார்ப்பனரல்லாத இயக்கத்தாரும் மெய்மறந்து அக்கிரமங்கள் செய்து, நன்மை செய்யவேண்டிய சந்தர்பங்களை சரியானபடி உபயோகப்படுத்திக் கொள்ளாமல், சுயநலத்தையே பிரதானமாகக் கருதி வந்து, அடுத்த தேர்தலில் பார்ப்பனர்கள் இப்பொழுது அடையும் பலனை அடையவும் கூடும். எப்படி முடியுமோ என்பது நமக்கு கவலையாகத்தான் இருக்கிறது. ஏனெனில் சென்னை முனிசிபல் பிரசிடென்டு தேர்தலிலேயே இந்த யோக்கியதை விளங்கிவிடும் போலவே காணப்படுகின்றது.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.10.1927)

Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.