திருவார்ப்பு சத்தியாக்கிரகம். (குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.10.1927)

Rate this item
(0 votes)

திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் திருவார்ப்பு என்கிற இடத்தில் தாழ்ந்த ஜாதியார் என்பவர்கள் தெருவில் நடக்க சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததாக கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தோம், அம்மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளுமுன் அச்சத்தியாக்கிரகத்தை மகாத்மா நிறுத்துமாறு உத்திரவிட்டிருப்பதாய் தெரிகிறது. நீல் சத்தியாக்கிரகத்தை விட திருவார்ப்பு சத்தியாக்கிரகம் அவ்வளவு மோசமானதா என்பது நமக்கு விளங்கவில்லை. மகாராணியும், போலீஸ் கமிஷனரும் நன்மை செய்வார்கள் என்று தாம் அறிந்ததாக மகாத்மா தெரிவித்திருக்கிறார். இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தில் சர்க்கார் நாணயம் இன்னது என்று தெரிந்து போய் விட்டது. வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போதும் மகாத்மா ராணியிடமும், திவானிடமும், போலீஸ் கமிஷனரிடமும் பேசி விட்டுத்தான் போனார். கடைசியாக அது வைக்கத்திற்கு மாத்திரம் முடிவதே பெரிய கஷ்டமாய் போய்விட்டது. மற்ற இடங்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. இதனால் லாபம் என்ன. ஜனங்களுடைய முயற்சியையும் உணர்ச்சியையும் கட்டுப்பாடாய் எழுந்த ஆசையையும் இம்மாதிரி தடங்கல்கள் அழித்து விடுகின்றன. மறுபடியும் ஆரம்பிப்பதென்றால் இலேசான காரியமல்ல. ஆகவே ஏதாவது ஒரு இடத்தில் யோக்கியமான உரிமைக்கு சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருக்க வேண்டுமே ஒழிய ஆரம்பித்த காரியங்களை நிறுத்துவது நன்மை பயக்காது என்பதே நமதபிப்பிராயம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.10.1927)

 

சமாதானம்

சென்ற வாரம் ‘எது வீணான அவதூறு’ என்னும் தலையங்க முடிவில், ‘மற்ற விஷயங்களைப்பற்றி அடுத்த வாரம் எழுதுகிறோம்’ என்று எழுதியிருந்தோம்.

ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் கடிதம் கிடைத்து. அவர்களை நேரிலும் பார்த்து பேச நேர்ந்தது. அவைகளில் சம்பாஷணைகளின் தோற்றம் எப்படி இருந்தாலும் அதைப் பார்த்தவுடன் மற்றவர்களுக்கு எப்படி படக்கூடுமோ அந்த உணர்ச்சியோடு கூடி அந்த சம்பாஷணை நடைபெறவில்லை என்று சொன்னார். உதாரணமாக ‘ஊழியன்’ பத்திரிகையில் கண்ட சம்பாஷணையில் ‘பிராமணர்களைக் காட்டிலும் தகுதி பெற்று கதர்வேலை செய்ய முன்வரும் பிராமணரல்லாத தொண்டர்களைத்தான் ஏற்றுக் கொள்ளுவதை முறையாக வைத்திருக்கிறேன்’ என்று காணும் வாசகம் அம்மாதிரி கருத்தோடு நான் சொல்லவில்லையென்றும், பிராமணர்களைவிட பிராமணரல்லாத தொண்டர்களைத்தான் ஏற்றுக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதாகவும், இனியும் அம்மாதிரி வழக்கத்தையே கையாளப் போவதாகவும் சொன்னார் என இம் மாதிரி இன்னும் சில விஷயங்களையும் குறிப்பிட்டார்.

அன்றியும் முக்கியமான விஷயங்களில் நமது கொள்கைக்கு அவரது உள்ளத்தில் எவ்வித மாறுபாடும் இருப்பதாய்க் காணப்படவில்லையாதலாலும் அதை அவ்வளவோடு நிறுத்திவிட்டோம்.

(குடி அரசு - குறிப்புரை - 16.10.1927)

 
Read 42 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.