பிற்பட்ட வகுப்புக்குக் கல்வி. குடிஅரசு - 11.08.1940

Rate this item
(0 votes)

திராவிட நாட்டில் இன்று இந்நாட்டுப் பழம்பெருங்குடி மக்க ளான திராவிட மக்கள் மொத்த ஜனத் தொகையில் 100 க்கு 97 பேர்களும், ஆரியர்கள் 100 - க்கு 3 பேர்களுமாக இருக்கிறார்களென்பது உலகறிந்த உண்மையாகும்.

இவர்களுள் ஆரியர்கள் முழுவதும் சுகஜீவிகளாகவும், திராவி டர்கள் பெரும்பாலும் உடலுழைப்பு ஜிவிதர்களாகவும் இருந்து வருவதும் உண்மை நிலையாகும். இதற்குக் காரணம் ஆரியர்கள் 100 - க்கு 100 பேர் கல்வி, உயர்தரக் கல்வி ஆகியவை உடையவர்களாகவும், திராவிடர்கள் மொத்த ஜனத்தொகையில் 100 - க்கு 90 பேருக்கு மேலா கவே தன் பெயர் கூட எழுதத்தெரியாத தற்குறிகளாக இருப்பதும் எவராலும் மறுக்க முடியாத பிரத்தியட்ச உண்மையாகும்.

திராவிட அரசர்கள் இருந்த காலத்திலும், வெளிநாட்டு முஸ்லிம் அரசர்கள் இருந்த காலத்திலும் ஆரியர்கள் பலவகை சூழ்ச்சிகள் செய்து அவ்வரசர்களைக் கைவசப்படுத்திக் கொண்டு, இந்தியாவின் கொள்கைக்கு தாங்கள்தான் அதிகாரிகள் என்று சொல்லி மனு அதர்ம சாஸ்திரத்தையே அரசியல் விதிகளாகவும் இந்து சைவ, வைணவ சமயக் கொள்கையாகவும் ஆக்கி அதன்படியே ஆட்சியும் ஒழுக்க முறையும் நடந்து வரச் செய்து வந்ததால், அக்காலத்தில் அநேகமாய் எல்லாத் திராவிட மக்களும் தற்குறிகளாய் இருக்க வேண்டியிருந்தது என்றாலும், அதாவது இந்து மதத்தினுடையவும் அதன் ஒட்டுகளான சைவ, வைணவ மதங்களி னுடையவும் ஆதாரங்கள் புராணங்கள் எல்லாம் இந்து மத வேதத்தின் சத்தான மனுதர்மக் கொள்கைப்படி அமைக்கப்பட்டதால் மனுதர்மப்படி பிராமணர்கள் என்கின்ற ஆரியர்கள் மாத்திரமே படிக்கலாம் என்றும், மற்ற மக்கள் ஆரியர்களுக்குப் பயன்பட வேண்டியவர்கள் ஆனதால் ஆரியரல் லாதவர்கள் சிறப்பாகவும் குறிப்பாகவும், சூத்திரர்கள் (திராவிடர்கள்) கண்டிப்பாய்ப் படிக்கக்கூடாது என்றும், படித்தால் தண்டிக்க வேண்டு மென்றும் உள்ள விதியை அமலில் நடத்தி திராவிடர்களைத் தற்குறிகளாக வைத்திருந்தாலும், திராவிட மன்னர்கள் அழிந்து முஸ்லிம் அட்ட யும் ஒழிந்து அய்ரோப்பியரில் ஒரு வகுப்பாரான பிரிட்டிஷார் ஆட்சி ஏற்பட்ட பிறகு மக்களுக்கு சிறிது உலக அறிவு உண்டாக இட கிடைத்ததால் அதன் பயனாய் திராவிடர்களும் படிக்கலாம் என்கின் நியதி ஏற்பட்டது. அப்படி இருந்தும் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட 200 வருஷங்களுக்குப் பிறகுகூட இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் திராவிடர்கள் 100 - க்கு 90 பேர்கள் தற்குறிகளாக இருக்கிறார்கள் என்பது திராவிட நாட்டுக்கு யோக்கியமான ஆட்சி, பொறுப்பான ஆட்சி இன்னமும் ஏற்படவில்லை என்பதுதான் கருத்தாகும்.

என்றாலும், அந்த பிரிட்டிஷ் ஆட்சியின் பயனாகவே திராவிடர் கள்கூட ஆட்சியில் பங்கு பெறலாம் என்றும், ஆட்சியில் சிற்சில இலாகாக் களுக்கு தலைமை வகித்து நடத்தலாம் என்றும், திராவிடர்கள் தங்கள் குறைகளை எடுத்து தனியாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றும் சில உரிமைகள் திராவிடர்களுக்கு ஏற்பட்டதால் திராவிடத் தலைவர்கள் தங் கள் சமுதாயத்தின் கல்வி இன்மை நிலையை எடுத்துக்காட்டி பரிகாரம் செய்ய வலியுறுத்தி அரசாங்க முறையில் கல்வித்துறையில் சில சீர்திருத் தம் செய்ய முற்பட்டார்கள்.

அச்சீர்திருத்தங்களில் சில தான் பாட்டாளி மக்களின் சமூகத் திற்கு கல்வியில் சில சலுகைகள் காட்டப்பட்டனவாகும்.

அவை என்னவெனில், ஆரம்பக்கல்வி வரையில் எல்லா மக்க ளுக்கும் இலவசமாக சம்பளமில்லாமல் கல்வி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும், உடலுழைப்பு மக்களின் வகுப்பார் மொத்தத்தில் கல்வியில் பிற்பட்டவர்களாய் இருப்பதால் நெசவுத் தொழில், தச்சு தொழில், உலோகத் தொழில், பயிர்த் தொழில் முதலியவை செய்கின்ற தொழிலான வகுப்பாருடைய பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வியும் உயர்தரக் கல்வியும் அரைச் சம்பளத்தில் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டதோடு எல்லா வகுப்பு மக்களுக்கும் சராசரி எண்ணிக்கையான மக்கள் படிக்கத் தகுந்தபடி மேற்பார்வையாளர் களையும் ஏற்படுத்தினார்கள். இவை அரசாங் கத்தாரால் செய்யப்பட்டன என்றாலும் திராவிட மக்களின் தலைவர்கள் ஆட்சியில் பங்கு பெற்று தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லும் உரிமை பெற்ற பிறகே இவை செய்ய முடிந்தது.

ஆனால், திராவிடர்கள்மீது ஆரியர்களால் பலாத்காரமாய் சுமத் தப்பட்டு திராவிட மக்களை மூடர்களாகவும், மடையர்களாகவும், 

மானமற்றவர்களாகவும் ஆக்குவதற்கு உபாயமாய் கையாளப்பட்ட இந்து மதம் என்னும் சமய ஆதிக்கமானது திராவிடர்களில் பெரும்பான்மை யோருக்கு அறிவும் மானமும் இல்லாமல் செய்துவிட்டது மாத்திரமல்லா மல் மிக மிக இழிவான காரியமாகிய தனது வகுப்பையும், குலத்தையும், குல மகளிரையும் காட்டிக் கொடுத்தாவது வாழ்வது என்கின்ற மிக்க கேவல நிலைமைக்கும் வரும்படி செய்யப்பட்டு விட்டதால் தங்கள் சமூக முன்னேற்றத்திற்குமான உணர்ச்சிக்குமாக பாடுபட்டு வந்த, வரும்படி யான தலைவர்களை ஆரியர்களுக்குக் காட்டிக்கொடுத்து இழிவுபடுத்தி, ஆரியர்களுக்கு திராவிட நாட்டு ஆட்சியில் முழுப்பங்கும் ஆதிக்கம் இருக்கும்படியாய் செய்து விட்டதால் ஆரியர்கள் பதவிக்கு வந்தவுடன் முதல் முதல் கண்ணைக் குத்திவிட்டால் எதிரியின் பலம் பயனற்றுப் போகும் என்கின்ற பழமொழிப்படி திராவிட மக்கள் கல்வித்துறையில் கையை வைத்து அதை அடியோடு அழிக்க ஆரம்பித்தார்கள். இதை பல தடவை விவரித்துக் கூறி இருக்கிறோமாதலால் இதில் அதைப்பற்றி அதிகம் விவரிக்காமல் சுருக்கமாகச் சொல்லிவிட்டு மேலே செல்லு வோம். இந்தி என்னும் வட மொழியை திராவிட சமூக குழந்தைகளுக்கு கட்டாயத்தின்மீது புகுத்தியதும், மதுவிலக்கு என்ற சாக்கை வைத்து கிராமப் பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்கில் மூடும்படியாகவும், கல்வி மான்யம் குறையும்படியாகவும் செய்யச் செய்ததோடு பல வகுப்புகளுக்கு இருந்த கல்வி சம்பந்தமான சலுகைகளையும் மேற்பார்வைகளையும் எடுத்து விட்டார்கள்.

அப்படிச் செய்யப்பட்டவர்களில் தாழ்த்தப்பட்ட மக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், திராவிட மக்களில் பெரும்பாலோர் குறிப்பாக கைத்தொழில் விவசாயம் செய்யும் மக்கள் பிரதானப் பட்டவர்கள் ஆவார்கள்.

அதாவது முன் ஆட்சியிலிருந்த திராவிடத் தலைவர்கள் ஆட்சிக் காலத்தில் கல்வியில் பிற்பட்ட வகுப்பார் என்று சில வகுப்பார்களைச் சேர்ந்த அவர்களுக்கு அரைச்சம்பளம் என்று விதி செய்திருந்தார்கள். அவர்களில் செங்குந்தர் (நெசவுத் தொழிலாளர்) விஸ்வப் பிராமணர்கள் (உலோகத் தொழிலாளர்), அகமுடியர் (பயிர்த் தொழிலாளர்) மற்றும் சில வகுப்பாரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் மேற்கண்ட வகுப்பார் களையும் மற்றும் சில வகுப்பார்களையும் அந்தப் பட்டிகையில் இருந்து ஆரிய ஆட்சியார் எடுத்துவிட்டு முழுச் சம்பளமும் கொடுக்க வேண்டும் என்று செய்துவிட்டுப் போய்விட்டார்கள்.

அதன் பலனாய் செங்குந்த வகுப்பாரும், விஸ்வபிராமனல பாரும் பெருத்த கிளர்ச்சி செய்ததில் இப்போதைய சர்க்காரார் (கவர்னரின் ஆலோசனையாளர்கள்) அந்த புதிய உத்தரவை மாற்றி மேற்படி மூன்று வகுப்பாருக்கும் பழையபடி அரைச்சம்பளச் சலுகையை அமலுக்கும் கொண்டு வந்துவிட்டார்கள். இதில் ஒரு அதிசயமான நிபந்தனையும் சேர்த்திருக்கிறார்கள். அது நம்மால் ஒப்புக் கொள்ளக்கூடியதாகயில்லை என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

அதாவது மேற்கண்ட தொழிலாளி வகுப்புகளில் படித்த மக்கள் இப்போது அனேகர்கள் இருக்கிறார்களாம். மற்ற படித்த வகுப்பார் என்ப வர்களுக்கு சரிசமமாக இவர்கள் வந்து விட்டார்களாம். ஆதலால், இவர்க ளுடைய கல்வி வசதிக்கு என்று தனிச்சலுகை வேண்டாமாம். இதுதான் இவர்களது கல்விச்சலுகையை நிறுத்தச்செய்த ஆரிய ஆட்சியின் சமாதா னமாகும். இதையே இப்போதைய அரசாங்கத்தாரும் அடுத்த வருஷ ஜன கணிதத்தில் இந்த வகுப்புகளில் படித்திருப்பவர்களுடைய எண்ணிக்கை பார்க்கப் போகிறார்களாம். அப்போது குறைவாயிருந்தால் இந்தச் சலுகை நீடிக்குமாம். படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாயிருந்தால் சலுகை நிறுத்தப்பட்டு விடுமாம். இதற்கு நாம் என்ன பதில் சொல்லுகிறோம் என்றால், அப்படியானால் ஒவ்வொரு வகுப்பிலும் இத்தனை வீதம் படித்தவர்கள் இருக்க வேண்டுமென்று திட்டம் ஏற்படுத்தி, அந்த எண்ணிக்கைக்கு மேல் இருப்பவர்களுக்கு எண்ணிக்கைத் தரப்படி சம்பளங்கள் உயர்த்திவிட்டு மிகமிகக் குறைவாய் இருப்பவர்களுக்கு இலவச உயர்தரக்கல்வி கொடுக்கப்படுமா என்று கேட்கிறோம். அப்படிச் செய்வதினால் அதிகமாகப் படித்த எண்ணிக்கை உள்ள வகுப்புக்கு அதிகச்சம்பளம் எவ்வளவு உயர்த்தப்பட்டாலும் நாம் கவலைப்படுவ தில்லை . ஆனால், அதிகமான பேர் படியாத வகுப்பாருக்கு சம்பளமில் லாமல் செய்வதோடு மாத்திரமல்லாமல் சாப்பாடும் புத்தகமும் சர்க்காரிலேயே உதவிசெய்து படிப்பிக்க வேண்டுமாய்க் கோருகிறோம். இதற்காகவென்றொரு தனிவரி போடுவதானாலும் சம்மதிக்கிறோம். அதை விட்டுவிட்டு யார் யார் ஆரியர்களோடு உத்தியோகத்திலும் சமுதாயத்திலும் போட்டி போடுகிறார்களோ அவர்களையெல்லாம் ஒழிக்கப் பார்க்க சூழ்ச்சி செய்வதற்கு இம்முறைகள் பயன்படுத்தப்படு மானால் யார்தான் இதை ஒப்புக் கொள்ள முடியும்?

ஆகவே, இதுவிஷயத்தில் பொது ஜனக் கிளர்ச்சியையும், நன்மையையும் மதியாத சூழ்ச்சி ஆட்சியாகிய ஆரிய ஆட்சி ஒழிந்த தற்கு மகிழ்ச்சி அடைவதோடு, அதற்குப்பதிலாக பொதுஜன உணர்ச்சி 

யையும், நன்மையையும், கிளர்ச்சியையும் மதிக்கத்தக்கதான ஒரு ஆட்சி ஏற்பட்டதற்காக மகிழ்ச்சி அடைந்து அவ்வாட்சிக்கு நன்றி செலுத்த வேண்டியது நமது கடமை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

கடைசியாக, அந்த ஆரியக் கொடுமை (சி.ஆர்.கட்சி) உத்தரவு களை எதிர்த்துப் போராடி கிளர்ச்சி செய்த செங்குந்தர், விஸ்வப் பிராம ணர், தேவர்மார் ஆகிய வகுப்பார்களைப் பாராட்டுவதோடு குறிப்பாகச் செங்குந்த மகாஜன சங்க தலைவர் ஈரோடு மகாஜன ஹைஸ்கூல் எட்மாஸ்டர் தோழர் எஸ்.மீனாட்சிசுந்தர முதலியார் அவர்களையும், சென்னை விஸ்வப் பிராமண மகாஜன சங்க பொதுக்காரியதரிசி தோழர் டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரியார் அவர்களையும் மற்றும் பல வகுப்புத் தலைவர்களையும் நாம் மனப்பூர்வமாக பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - 11.08.1940

 
Read 61 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.