நீல் சத்தியாக்கிரகமும் “தலைவர்களும்” (குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.09.1927)

Rate this item
(0 votes)

நீல் சத்தியாக்கிரகத்தை நடத்துவதற்கு ஆதாரமாயிருந்த சென்னைத் ‘தலைவர்’களில் ஒருவரான திரு. குழந்தை திரு. சாமிநாத முதலியாரைப் பிடித்தவுடன் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் தான் சத்தியாக்கிரகத்திற்கு தலைவனல்லவென்றும், சத்தியாக்கிரகி அல்லவென்றும், ஸ்ரீமான் சாமிநாத முதலியாரே அதன் தலைவரென்றும் எழுதி இருக்கிறார்.

சத்தியாக்கிரகக் கூட்டங்களுக்கெல்லாம் தலைமை வகித்து, சத்தியாக்கிரகங்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்து பேசி விட்டு, தன்னுடையப் பெயரையும் பரப்பிக் கொண்டு, இப்போது தலைவர் என்பவரை சர்க்கார் பிடித்தவுடன் ‘நான் தலைவனல்ல,’ ‘சத்தியாக்கிரகியல்ல’ என்று எழுதி வேறு ஆசாமியை காட்டிக் கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது எவ்வளவு பயங்காளித்தனம் என்பதை நேயர்களே கவனிக்க வேண்டும். சென்னைத் தலைவர்களின் யோக்கியதை வெளியாவதற்கு திரு குழந்தை உதவி செய்தது நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் முதலிலேயே சத்தியாக்கிரக கூட்டமொன்றில் திரு. தண்டபாணி பிள்ளை அவர்கள் பேசும்போது இந்த மாதிரி கனவான்களின் யோக்கியதைகளை எடுத்துச் சொல்லி “தக்க சமயத்தில் இவர்கள் ஏமாற்றி விட்டுப் போய் விடுவார்கள். ஆதலால் இவர்களை நம்பி இறங்காதீர்கள்” என்று சொன்னார்.

 

அங்கிருந்த பார்ப்பனர்கள் கலகம் செய்து அவரை பேச விடாது தடுக்க முயற்சித்தார்கள் . எப்படி இப்போது இவர்கள் யோக்கியதை வெளியாய் விட்டது! ஸ்ரீமான் சாமிநாத முதலியாரை சர்க்கார் பிடித்ததும் ஸ்ரீமான் குழந்தையின் சினேகிதரான மற்றொரு தலைவர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரை இப்போது பூதக் கண்ணாடி போட்டுத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பேச்சு மூச்சு ஒன்றையும் காணோம். என்ன சத்தியாக்கிரகம்? என்ன தலைவர்? எவ்வளவு அபிமானம்? எதற்காக நடைபெறுகிறது? யார் நடத்துகிறார்கள்? என்கிற விஷயங்களை வாசகர்களே உணர்ந்து கொள்ளக் கோருவதுடன் இனியாவது நமது பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கு புத்தி வருமா என்று ஆசைப்படுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.09.1927)

 
Read 29 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.