மறுபடியும் பெசண்டம்மையார் (குடி அரசு - குறிப்புரை - 11.09.1927)

Rate this item
(0 votes)

ஒரு விதத்தில் மறைந்து போன ஸ்ரீமதி பெசண்டம்மையாரின் அரசியல் செல்வாக்கை மறுபடியும் உயிர்ப்பிக்க கொஞ்ச நாளாகவே அந்தரங்கத்தில் பல ஏற்பாடுகள் நடந்து வருகின்றதை நாம் அறிவோம். அதற்காக பல பத்திரிகைகளையும் வசப்படுத்த செய்துவரும் முயற்சியையும் நாம் அறிந்து வருகிறோம்.

பெசண்டம்மையாரின் ஆதிக்கம் அல்லது தலைமை என்பது பெரிதும் விபூதி பூசும் அய்யர்களான பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான். மகாத்மா காந்தியின் ஆதிக்கமென்பது பெரிதும் நாமம் போடும் அய்யங்கார்களான பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான். “நாட்டுக்கு எந்த துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் வேலை போகாது” என்பது போல் பார்ப்பன சூழ்ச்சியால் எந்த தலைவர் போய் எந்த தலைவர் வந்தாலும் பார்ப்பனர்களுக்கு யோகமே தவிர நமது கதி இவர்கள் காலை நக்கிக் கொண்டு திரிய வேண்டியதாய்தான் இருக்குமேயல்லாமல் ஒருக்காலும் சுயமரியாதையுடன் வாழ முடியாது. இதற்கு சாட்சி மகாத்மா ஆதிக்கத்தால் ஏற்பட்ட பலனே போதுமானது. இனி நமக்கு மகாத்மாக்களும் வேண்டாம், உலக ரக்ஷகிகளும் வேண்டாம். நம்ம காலிலேயே நாம் நிற்கும்படியான யோக்கியதை நமக்கு வரும் வரை அனாவசியமாய் இவைகளிலெல்லாம் கவனம் செலுத்தாமலிருப்பதே மேலானது.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 11.09.1927)

நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே

சுவாமி வேதாசலம் அவர்கள் அருமைக் குமாரத்திக்கும் நமது நண்பர் திருவரங்கம்பிள்ளை அவர்களுக்கும் நடந்தேறிய திருமணச் சடங்கானது தமிழ் மக்களையே குழப்பத்தில் கொண்டு வந்து விட்டு விட்டது.

சுவாமி வேதாசலம் அவர்களும் திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் தமிழ் நாட்டிலேயே தமிழ் மக்களின் பழய நாகரிக விஷயமாய் தக்க ஆராய்ச்சி உள்ளவர்கள். ஏனையவர்களை இவர்களுக்கு சமமானவர்கள் அல்லது இவர்களுக்கு அடுத்தவர்கள் என்று சொல்ல வேண்டுமேயல்லாமல் இவர்களுக்கு மீறினவர்கள் என்று சொல்ல முடியாது என்பது நமது அபிப்பிராயம். அப்படிப்பட்ட இரு ஞான பாஸ்கரர்கள் கூடிச் செய்த திருமணம் பார்ப்பனீயத் திருமணமாய் நடந்தேறிற்றென்றால் மற்றவர்கள் எவ்வளவு தூரம் பார்ப்பனீயத்திற்கு உயர்வு கொடுக்க மாட்டார்கள்! உயர்வு கொடுக்க விரும்பார்களா என்பதை யோசிக்கும்படி அவர்களுக்கே விட்டு விடுகிறேன். இதற்கு ஏதாவது தகுந்த சமாதானம் இவர்கள் சொல்லாத வரையில் திருத்த முடியாத குற்றமாவதோடு மக்களுக்கு குழப்பமும் நமது முயற்சிக்கு இடையூறும் ஏற்படும் என்பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - குறிப்புரை - 11.09.1927)

 
Read 29 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.