மகாத்மாவும் காங்கிரசும் (குடி அரசு - கட்டுரை - 11.09.1927)

Rate this item
(0 votes)

காங்கிரஸ் ஏற்பட்டது முதல் நாளது வரை பொது மக்களுக்கு எந்த விதமான நன்மையும் ஏற்படவில்லை என்பதையும் பல கெடுதிகள் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் மகாத்மா மனதார அறிந்திருந்தும், அக்கெடுதிகளை ஒழிக்க தன்னால் கூடியவரை பாடுபட்டுப் பார்த்தும் முடியவில்லை என்று ஒப்புக்கொண்டும், காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டத்தார் பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொண்ட பிறகும், மகாத்மா எல்லோரையும் காங்கிரசில் சேருங்கள் என்பதும், பம்பாய் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கு மகாநாட்டார் மகாத்மாவை அழைத்தால் அதற்கு பதிலாக “நல்ல எண்ணத்தோடு எல்லோரும் காங்கிரசில் சேருங்கள்” என்று தந்தி அடிப்பதும் நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது. மகாத்மா காந்தி போன்றவர்களே காங்கிரஸ் முத்திரை (லேபிள்) இல்லாமல் மகாத்மாவாக இருக்க முடியவில்லை என்றால் மற்றவர்கள் காங்கிரஸ் முத்திரையைப் போட்டுக் கொண்டு வாழ்வதில் நமக்கு அதிசயம் எப்படி தோன்றும்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 11.09.1927)

சென்னையில் காலராவைத் தடுக்க கார்போரேஷன் கமிஷனர் அவர்கள் திட்டம்

சென்னையில் பரவி வரும் காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகளைத் தடுப்பதற்காக சென்னை நகர சபைக் கமிஷனர் ஸ்ரீமான் ச. வெங்கிட்டநாராயணா அவர்கள் செய்த ஏற்பாடுகளைப் பற்றிய குறிப்பு ஒன்று வரப்பெற்றோம். அதில் வைத்திய இலாகா தலைமை அதிகாரிகள் அபிப்பிராயப்படியே தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காகவும் வைசூரி, காலரா பரவிய பாகங்களை சுத்தம் செய்வதற்காகவும், வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வதற்காகவும், வியாதி வராமல் தடுக்கவும் நகர சபைக் கமிஷனர் எடுத்துக் கொண்ட முயற்சியும், அநுசரிக்கும் முறைகளும் மிகவும் பாராட்டத்தக்கவைகளாகவே இருக்கின்றன. நகர சபை அங்கத்தினர்கள் நகரத்தின் nக்ஷமத்தில் உண்மையில் அக்கரையுள்ளவர்களா யிருந்தால் நகர nக்ஷமத்தைக் கருதி கமிஷனர் செய்திருக்கும் ஏற்பாடுகளை ஆதரித்து அவ்வேற்பாடுகள் அமுலில் கிரமமாய் நடைபெறுவதற்கும் உதவியாயிருக்க வேண்டியவர்கள் என்பதே நமது அபிப்பிராயம்.

 

ஆனால் நகர சபையில் உள்ள ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களில் சிலர் நகரத்தின் nக்ஷமங்களில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் கார்ப்பரேஷன் ஸ்தாபனம் பார்ப்பன அக்கிராரமாகவும், பார்ப்பனர்களுக்கு உணவளிக்கும் அன்ன சத்திரமாகவும் இருக்க வேண்டுமென்கிற ஒரே கவலையைக் கொண்டு இதற்கு விரோதமாயிருக்கும் கமிஷனர் ஸ்ரீமான் நாயுடு அவர்களை சதா சர்வகாலமும் அற்பத்தனமான முறைகளில் தாக்கிக் கொண்டும், சில்லரை விஷமங்கள் செய்து கொண்டும், எப்படியாவது அவரை அந்த ஸ்தானத்திலிருந்து மாற்றி ஒரு பார்ப்பனரை அந்த ஸ்தானத்தில் வைத்து தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும் என்கிற கவலையிலேயே கார்பரேஷன் நேரத்தையும் நிர்வாகத்தையும் பாழாக்கி வருகிறார்கள். இவ்வளவும் ஏற்படுவதற்கு காரணம் ஜனப்பிரதிநிதிகள் என்று சொல்லப்பட்ட கவுன்சிலர்களைத் தெரிந்தெடுக்கும்படியான ஓட்டர்களுக்கு ஓட்டைப் பற்றி போதுமான ஞானமும் கவலையும் ஏற்படாததுதானே ஒழிய வேறில்லை என்றே சொல்வோம். ஆதலால் இனிமேலாவது ஓட்டர்களாகிறவர்கள் தங்களுடைய ஓட்டுகளை உபயோகிப்பதில் பார்ப்பனர்களின் வஞ்சத்திற்கும், ஏமாற்றலுக்கும் காது கொடுக்காமல் யோக்கியமான முறையில் தங்கள் ஓட்டுகளை உபயோகித்து, யோக்கியர்களைத் தெரிந்தெடுத்து முனிசிபல் நிர்வாகம் நாணயமாகவும், யோக்கியமாகவும் நடைபெறுவதற்கு உதவி செய்யும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமாய் விரும்புகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 11.09.1927)

Read 23 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.