டாக்டர் அம்பேத்கார் மறைவு - விடுதலை - 08.12.1956

Rate this item
(0 votes)

இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும், ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கார் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்று செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்லவேண்டுமானால், டாக்டர் அம்பேத் காருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்த விதத்திலும் சரி செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்ட வரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும் படியான வீரராகவும் விளங்கினார்.

உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்து மதம் என்பதான ஆரிய, ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும் படியாகப் பேசியும், எழுதியும் வந்தார். உதாரணம் சொல்லவேண்டு மென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம் பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையை, முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாசின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும், இராமாயணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் இராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார்.

இந்துமதம் உள்ளவரையிலும் தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அரைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்த கங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுணரும், சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கார் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும். அம்பேத்காரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாமென்று கருதுகிறேன். அதாவது, காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கார் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும்.

- விடுதலை - 08.12.1956

 
Read 48 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.