எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரேமாதிரி இருக்கும்! - விடுதலை - 22.02.1959

Rate this item
(0 votes)

மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், நானும் நெடு நாள்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல. பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக்கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்து மதப்புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டுபேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும், பலமாகவும் என் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின் றேனோ அவ்வாறுதான் அவரும் மிகவும் உறுதியாகவும், பலமாகவும், இலட்சியங்களைக் கடைப்பிடித்தார். உதாரணமாகப் பார்ப்பனர் போற்றிப் பிரச்சாரம் செய்யும் கீதை என்பதை “முட்டாளின் உளறல்" என்று சொன்னவர்!

இப்படிச் சில விஷயங்களில் மாத்திரமல்ல. பல விஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் (கருத்தைக்) கொண்டிருந்தாரோ அதே அபிப்பிராயம் (கருத்து) தான் எனக்கும் இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப்பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவரு டைய எண்ணங்களையும் கருத்துகளையும் பறிமாறிக் கொள்ளுவதும் உண்டு .

உதாரணமாக, பர்மாவில் (தற்போது மியான்மர் நாடு) நடந்த உலக புத்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர், அவர்கள் என்னைப் பார்த்து “என்ன இராமசாமி! இப்படிப் பேசிக் கொண்டே இருப்பதால் நாம் என்ன பலன் ஏற்பட முடியும்? வா! நாம் இரண்டுபேரும் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிடுவோம்” என்றார்.

நான் சொன்னேன். “மிகவும் சரி, இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல.ஏனென்றால் தமிழ் நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றித் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றேன். இந்த கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன், சிலைகளை உடைத்தும் எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் இப்போது மக்களிடையே எடுத்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் செய்ய முடியாது. ஓர் இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவத னால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக்கூடாது என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால், நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே, நான் வெளியில் இருந்து கொண்டே புத்த மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து வருகிறேன்” என்பதாகச் சொன்னேன். 

என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லவில்லை . அதற்கு முக்கிய அடிப்படை சாதி, மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்று தான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித் தான் சொன்னார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்த மார்க்கத்தில் சேரும்போது என் னென்ன பிராமாணம் (உறுதிமொழி) எடுத்துப் படித்தாரோ (இராம னையும், கிருஷ்ணனையும், கடவுள்களாக வணங்கமாட்டேன் என்பன போன்றவவைகள்) அவைகளைத்தான் நான் எங்கள் நாட்டில் சுமார் 20, 25 வருட காலமாகச் சொல்லி வருகிறேன். அதனால்தான் எங்கள் நாட்டில் பத்தாயிரக்கணக்கான மக்கள் இராமனையும், பிள்ளையா ரையும் கொளுத்தியும் உடைத்தார்கள். இந்தப் பிரமாணத்தில் உள்ள பல விஷயங்கள் எனக்குப் பல வருஷங்களுக்கு முன்பே தோன்றியவை தான். அவைகளை எங்கள் பிரச்சாரமாகவே செய்து வருகிறோம். இதைப் படித்துவிட்டு நான் சொல்லவில்லை. எப்படியோ எங்களுக்கு அப்படித் தான் அபிப்பிராயம் தோன்றியது.

புத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக்கொள்வது கிடையாது: ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத் துவம் கொடுத்து அதன்படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.

நேற்று நான் தங்கியிருந்த இடத்தில் ஒரு பார்ப்பனர் என்னை வந்து சந்தித்தார். அவர் கேட்டார், “நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே! புத்த மார்க்கத்தில் சேரச்சொல்லி மக்களைப் பார்த்துச் சொல்லுகிறாயே! அதுவும் ஒரு மதம்தானே” என்று. அதற்கு நான் சொன்னேன் "அப்படிப் பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் (பார்ப்ப

னர்கள்) சொல்லி அப்படி அவர்களை ஆக்கி வைத்திருக்கிறீர்கள்” என்பதாகச் சொன்னேன்! அதற்கு அவர் சொன்னார், ஏன் அதில் “புத்தர் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகிறார்களே” என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.

“புத்தம் சரணம் கச்சாமி' என்பது ஒன்றும் மூடநம்பிக்கைத் தத்து வம் அடங்கியதல்ல "நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கி றாயோ, அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று” என்பதா கும். “நீ தலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாகத் துருவித் துருவிப் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்து விட்டபிறகு அவனது கட்டுப் பாட்டுக்கு அடங்கி அவனைப் பின்பற்ற வேண்டும்” என்ற நல்லொழுக் கந்தான் அதுபோதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண் டால் அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை. மற்றும் புத்தம் என்பது உன் புத்தியை குறிப்பதேயாகும்.

அதுபோலவே, “தம்மம் சரணம் கச்சாமி” என்பதற்குப் பொருள் “நீ ஏற்றுக்கொண்டுள்ள கர்மங்களைக், கொள்கைகளை (Principles) உண் மையான முறையில் பக்தி செலுத்திக் கடைபிடித்து வரவேண்டும். அந்தக் கொள்கைகளுக்கு மாறாக நடக்கக்கூடாது. உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும்” என்பதுதான்.

மூன்றாவதாக, “சங்கம் சரணம் கச்சாமி' என்பது, “நீ நல்லபடி யோசித்து சேர்ந்திருக்கிற ஸ்தாபனத்தை மரியாதைப் பண்ணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்தவித இழுக்கும் வராதவண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும். ஸ்தாபனத்தின் பெருமையை நீ கருத வேண்டும்" என்பதுதானேயொழிய வேறில்லை.

ஆகவே, இந்த மூன்றுக்கும் அர்த்தம் (பொருள்)

 நீ உன் தலைவனை மதி!

 உன்னுடைய கொள்கைகளை உறுதியாகப் பின்பற்று!

 உன் ஸ்தாபனத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா! என்பதாகும்.

இவர்களெல்லாரும் உங்கள் புத்த நெறிக்கு மரியாதைக் கொடுத்து அது எல்லோரும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு புத்த மார்க்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்பது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றக் கொள்கைகளுக்கு நீங்கள் இடங்கொடுக்கக் கூடாது. பார்ப்பன இந்து மதக் கொள்கைளை மறந்தும் உள்ளே புகவிடக்கூடாது.

எல்லோரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். மற்றெல்லா பிற்பட்ட மக்களும் இந்தமாதிரியான நிலைக்கு வருவதற்காக மிகவும் பாடுபட வேண்டும்.

நீங்கள் இந்த மாதிரி இருப்பதற்காகப் பார்ப்பானும் இந்த அரசாங் கமும் உங்களுக்கு மிகவும் தொந்தரவு, தொல்லைகள் தரக்கூடும் அவை எல்லாவற்றையும் நீங்கள் மிகவும் பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய அரசாங்கம் இந்து மத பார்ப்பன ஆட்சியாகும்.

உங்கள் வசதி வாய்ப்புகளை ஒரளவு அரசாங்கக் கொடுமைக்குத் தியாகம் செய்தாவது இந்தக் கொள்கைகளைப் பரப்ப நாம் உறுதியோடு பாடுபட முன்வரவேண்டும்.

- விடுதலை - 22.02.1959

 
Read 34 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.