பம்பாயில் பெரியாருக்கு பேருபசாரம் - விடுதலை - 09.01.1940

Rate this item
(0 votes)

பம்பாய், ஜன.9:- 06.01.40 ஆம் தேதி காலை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள், தோழர்கள் “ஜஸ்டிஸ்” ஆசிரியர் டி.ஏ.வி.நாதன், "சண்டே அப்சர்வர்' ஆசிரியர் பி.பாலசுப்பிரமணியம், கே.எம்.பாலசுப் பிரமணியம், சி.என். அண்ணாதுரை, பஞ்சாட்சரம், டி.பி.எஸ். பொன் னப்பன் ஆகியவர்களுடன் தாதர் (Dadar) ஸ்டேஷனை வந்து சேர்ந்தார். ஸ்டேஷனில் ஏராளமான தென்னிந்தியர்கள் கூடி தலைவர்களை வரவேற்று உபசரித்தார்கள். பெரியார் வாழ்க, தமிழ் வாழ்க, இந்தி ஒழிக, பார்ப்பனீயம் ஒழிக, காங்கிரஸ் ஒழிக, நீதிக்கட்சி ஓங்குக என்ற ஒலிகள் வானைப் பிளந்தன.

மாலையில் பெரியார் தோழர் கே.டி.பிள்ளை அவர்கள் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலம் 2 மைல் நீளத்துக்கு அவ்வளவு பெரிதாக இருந்தது. வழிநெடுக பொதுமக்களும், தமிழ் மக்களும் பெரியாருக்கும் மற்ற தலைவர்களுக்கும் ஏராளமான மாலைகள் சூட்டி உபசரித்து வரவேற்றார்கள். தாராவியில் மாலையில் ஒரு மாபெரும் கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பெரியார் தமிழ்க்கொடி ஏற்றுவித்தார். அது சமயம் ஓர் உருக்கமான சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இரவு 9 மணிக்கு பெரியார் டாக்டர் அம்பேத்கரை கண்டு பேசினார். 2 மணி நேரத்திற்கு மேல் தற்கால அரசியல் நிலைமையைக் குறித்து பேசினார்.

7 ஆம் தேதி, அஸோசியேட் பிரஸ் நிருபரும், பம்பாய் சென்டினல் பத்திரிகை நிருபரும் பெரியாரை பேட்டிக் கண்டு பேசினார்கள். பம்பாய் மாஜி மந்திரியும் பார்ப்பனரல்லாத தலைவருமான தோழர் பி.வி.ஜாதர் பெரியாரைக் கண்டு, எதிர்காலத்தில் பம்பாயில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் செய்யவேண்டிய வேலைத் திட்டங்களைக் குறித்துப் பேசினார்.

7 ஆம் தேதி காலை 11 மணிக்கு பெரியார் பிரிவி கவுன்சில் மெம் பரும் ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டின் தலைவருமான மகா கனம் எம்.ஆர்.ஜெயகர் அவர்களைக் கண்டு பேசினார். அவருடன் நீண்ட நேரம் சம்பாஷித்தார்.

மாலை 4 மணிக்கு, கோக்கலே எடுகேஷன் சொசைட்டி ஹைஸ்கூல் கட்டிடத்தில் பெரியார் அவர்கள் வந்ததை முன்னிட்டு டாக்டர் அம்பேத்கர் ஓர் தேநீர் விருந்தளித்தார். விருந்தில் பம்பாய் கவுன்சில், அசம்பிளி மெம்பர்களும், பத்திரிகை ஆசிரியர்களும், நகர முக்கிய பிரமுகர்களும், சில காங்கிரஸ்காரர்களும் கலந்து கொண்டனர்.

17 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தாராவியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்று ஒலிபெருக்குக் கருவிகளுடன் நடைபெற்றது. சுயேச்சைத் தொழிலாளர் கட்சித் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மேற்படி கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். பெரியாருக்கு ஏராளமான உபசாரப் பத்திரங்களும் பல பணமுடிப்புகளும் அளிக்கப்பட்டன.

பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் தாமும் பெரியார் கொள்கையை ஒத்துக் கொள்வதாகவும் அன்று முதல் இன்றுவரை பார்ப்பனீயத்தை எதிர்த்துக் போராடி வருபவரான ஒப்பற்ற தலைவர் பேசும் கூட்டத்திற்குத் தலைமை வகிக்க தமக்குக் கிடைக்கப்பட்ட பாக்கியமே தமது வாழ்க்கையில் தாம் சிறந்த பாக்கியமாகக் கருதுவதாகவும் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டார்.

தோழர் சி.என். அண்ணாதுரை அவர்கள் பிரசங்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். கூட்டத்தில் தோழர்கள் ஜாதர் கவுல்வி முதலிய பிரபல மகாராஷ்டிர தலைவர்கள் உட்பட பலர் வந்திருந்தார்கள். பெரியார் 3 மணி நேரத்திற்கு மேல் பேசினார். பம்பாயிலுள்ள தலைவர்களுடைய நன்மையை முன்னிட்டு பெரியார் சொற்பொழிவை தோழர் அண்ணா துரை அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதைக் கட்சி ஆகியவைகள் மக்கள் முன் னேற்றத்திற்கும் அரசியல் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், சமூகத் துறையிலும் செய்த சீர்திருத்தங்களையும், சென்னை காங்கிரஸ் மந்திரிகள் செய்த அட்டூழியங்களைக் குறித்தும், திராவிட நாடு தனியாகப் பிரிக்கப்பட வேண்டிய அவசியத்தைக் குறித்தும் பெரியார் தெளிவாக விளக்கிப் பேசினார்.

இரவு 11 மணிக்கு கூட்டம் இனிது முடிந்தது.

“டைம்ஸ் ஆப் இந்தியா” “ஈவினிங் நியூஸ்'” “ஜாம்-இ-ஜாம் ஷெட்" "குஜராத்தி தினசரி” முதலிய பத்திரிகைகளின் பிரதிநிதிகள் பெரியாரைக் கண்டுபேசி போட்டோ எடுத்தார்கள்.

- விடுதலை - 09.01.1940

 
Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.