அறிவை அடக்க புதிய சட்டம் (குடி அரசு - கட்டுரை - 21.08.1927)

Rate this item
(0 votes)

மத ஸ்தாபகர்களைக் குற்றம் சொல்வதைப் பற்றி தண்டிக்க என்னும் பேரால் ஒரு புதிய சட்டம் வேண்டுமென்றும் இப்போது எங்கும் ஒரே கூச்சலாயிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்திக் கொண்டு தங்களுடைய அக்கிரமங்களை நிலைக்க வைத்துக் கொள்ள எண்ணி அவர்களும் கூடவே கோவிந்தா போடுகிறார்கள்.

இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்படுத்துவதானது மனித உரிமையை அடக்குவதாகுமேயல்லாமல், மனித தர்மத்திற்கு நீதி செய்ததாகாது என்பதாக நாம் வலியுறுத்துவோம். மதம் என்று சொல்வது ஒரு மனிதனுடைய கொள்கை அல்லது அபிப்பிராயமாகுமேயல்லாமல், அது உலகத்திலுள்ள மனித கோடிகள் அத்தனை பேரும் கட்டுப்பட்டு நடந்துதான் ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்தக் கூடியதல்ல. அப்படி எல்லோரையும் கட்டாயப்படுத்தப்பட்ட விஷயம் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லையென்பதே நமது அபிப்பிராயம். உலக மனிதர்களில் 100 - க்கு 99 3/4 பேர்களால் ஒப்புக்கொள்ளுவதாகச் சொல்லப்படும் கடவுளையும் அவரது தத்துவங்கள் என்பதையும் மறுப்பதற்கே எல்லா மனிதனுக்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

 

கடவுள் செய்ததாகச் சொல்லுவதையும், சொன்னதாகச் சொல்லுவதையும் பற்றிய தர்க்கங்களும் மறுப்புகளும் அறிவு உலகத்தில் தினமும் தாண்டவமாடிக் கொண்டிருக்க உலகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை எதிர்பார்த்து அடையாமல் போனவர்களில் பலர் கடவுளையுங்கூட தூஷிப்பதையும் உலகம் பார்த்துக்கொண்டும் அனுமதித்துக் கொண்டுந்தான் வருகிறது. கடவுளைப் பற்றியே இவ்வளவு அனுமதிக்கப்பட்டவர் கடவுள் பக்தர்கள் என்று சொல்லுபவர்களைப் பற்றி, கடவுளை அடைய வழிகாட்டிகள் என்று சொல்லுபவர்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?

எனவே இவ்விஷயங்கள் ஒருவனுடைய அபிப்பிராயமாகுமேயல்லாமல் அதுவே சத்தியமாய் விடாது. உலகத்தில் எதாவது சீர்திருத்தம் என்பது ஏற்பட வேண்டுமானால் ஒருவர் அபிப்பிராயத்தை ஒருவர் கண்டிப்பதும் மறுப்பதும், ஒருவர் கொள்கையை ஒருவர் கண்டிப்பதும் மறுப்பதும் அனுமதிக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும். அதற்குச் சட்டம் போட்டு தடுத்துவிட்டால் அது மனிதனின் அறிவு வளர்ச்சியை தடுத்ததாகுமேயொழிய மற்றபடி அது எந்த விதமான நன்மையையும் செய்ததாக ஆகாது. அன்றியும் இம்மாதிரியாக ஒரு சட்டமியற்றுவது அநாகரீகமும் காட்டுமிராண்டித்தனமுமேயாகும். இப்பேர்பட்ட விஷயங்களில்தான் மக்களுக்கு விசாரணை செய்ய தாராளமாக இடம் கொடுக்கப்படவேண்டும். அதற்கு இடையூறாய் உள்ளவைகளையெல்லாம் களைந்தெறிய வேண்டும்.

 

ஒவ்வொரு காலத்திலுள்ள மக்கள் அறிவுநிலைக்கேற்றவாறு ஒவ்வொரு கொள்கைகள் பரப்பப்படுவதும், அது நிலைபெறுவதும், அதற்கு கோடிக்கணக்கான மக்கள் பின்பற்ற ஏற்படுவதும் சகஜமானதேயல்லாமல் அதில் ஒன்றும் அதிசயமில்லை. அதுபோலவே தற்காலம் உள்ள மக்கள் அறிவு நிலைக்குத் தக்கபடி மாறிக்கொண்டே வருவதும் இயற்கையே ஒழிய அதிலும் ஒன்றும் அதிசயமில்லை. எனவே மக்கள் வெறும் அரசியல் சமூக இயலில் மாத்திரம் முற்போக்கடைய வேண்டியது பாக்கியாயில்லை. அறிவிலும் ஆத்மார்த்த விஷயத்திலும் மனிதனுக்குள் இன்னமும் என்ன என்ன சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதிலும் முற்போக்கடைய வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ பாக்கியிருக்கிறது. அவைகளை கவனிக்கும் போது இந்த அரசியலும் சமூக இயலும் வெகு சிறியதேயாகும். ஆனால் அப்பேர்ப்பட்ட முயற்சிகளுக்கு சமூக இயல் முதலியவைகள் அடிகோலிகள் என்பதை மாத்திரம் ஒப்புக்கொள்ளலாம். ஆதலால் இம்மாதிரி அறிவு வளர்ச்சிக்கு ஏதுவாகிய பிறப்புரிமையான சுதந்திர உணர்ச்சிகள் சட்டத்தின் மூலமாய் அழிக்கப்பட்டால் உலகம் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவாளிகளுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 21.08.1927)

 
Read 25 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.