திராவிடன் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.08.1927)

Rate this item
(0 votes)

திராவிடன்’ பத்திரிகை விஷயமாய் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி வந்தபடி அதாவது திராவிடன் பத்திரிகையின் ஆசிரியத் தொழிலையும் நிர்வாகத்தையும் ஏற்றுக் கொள்வது என்பதாக முடிவு ஏற்பட்டு விட்டதால் அநேகமாக இம்மாத முடிவுக்குள்ளாகவே ஏற்றுக் கொள்ளக்கூடும்.

periyar gemini ganesanதன வணிக நாட்டு சுற்றுப் பிரயாணத்திற்குப் பிறகு உடல்நிலை சற்று கெட்டுப்போய் இருக்கிறது. ஆதலால் ஒரு வாரம் குற்றாலம் போய் அங்கிருந்து கொண்டே சென்னை போக வேண்டிய விஷயங்களைப் பற்றி ஏற்பாடு செய்யலாமென்பதாக நினைத்திருக்கிறோம். அநேகமாக 17 தேதி அல்லது 18 தேதி இவ்விடமிருந்து குற்றாலத்திற்கு புறப்படுவதாயிருக்கலாம். அங்கிருந்து இம்மாத முடிவுக்குள்ளாகவே சென்னை செல்ல உத்தேசம்.

 

ஆங்காங்குள்ள நண்பர்கள் அதற்குள்ளாக ஒரு 500 சந்தாதாரர்களையாவது சேர்த்து அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். திராவிடனை ஒப்புக் கொள்ளும்படி நமக்கு கட்டளை இட்ட சுமார் 500க்கு மேற்பட்ட நண்பர்களில் அநேகர் அதாவது ஒருவர் நாம் ஒப்புக்கொண்ட அன்றே 100 சந்தா சேர்த்துக் கொடுப்பதாகவும், மற்றவர் 50 சந்தா சேர்த்துக் கொடுப்பதாகவும் பலர் 20, 30 வீதம் சேர்த்துக் கொடுப்பதாகவும், மற்றும் பலர் வேறு என்ன என்னமோ உதவி செய்வதாகவும் வாக்களித்திருக்கிறார்கள். தஞ்சை, மதுரை, ஜில்லா நண்பர்கள் மாத்திரம் 1000 சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுப்பதாய் வாக்களித்திருக்கிறார்கள். எல்லா கனவான்களுக்கும் இது சமயம் வாக்குகளை நிறைவேற்றி நமக்கும் குற்றாலத்திற்கு எழுதும்படியாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.

 

இதை நண்பர்கள் அஸ்வார்சமாய் கவனிக்கக்கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். தற்காலம் உலகத்தை புரட்டி வருவதே பத்திரிகைகள் தான் என்பதையும் அந்தவிஷயத்தில் நாம் அஸ்வார்சமாய் இருந்து வந்ததால்தான் நமது சமூகத்துக்கு இவ்வளவு சுலபமாய் ஒரு கைக்குள் அடங்கக்கூடிய கூட்டத்தார் இவ்வளவு கொடுமைகள் செய்ய இடமேற்பட்டு வந்தது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

“குடி அரசு” என்கிற குட்டிப் பத்திரிகையால் பாமர மக்கள் எவ்வளவு தூரம் விழிப்படைய முடிந்தது என்பதையும், எவ்வளவு தூரம் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதையும், அதுபோல் “திராவிடன்” என்கிற தினப் பத்திரிகையால் நமது முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் எவ்வளவு தூரம் எதிரிகளாயுள்ளவர்களின் கொடுமையை எடுத்துக்காட்டக் கூடும் என்பதையும் கவனித்துப் பாருங்கள். பார்ப்பனரல்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள் 6 வருஷம் அதிகாரத்திலிருந்தும், நியாயம், ஒழுங்கு, மனச்சாக்ஷி என்கிற பூச்சாண்டிகளுக்கு பயந்துகொண்டு கேவலம் தங்கள் கக்ஷி பத்திரிகையின் நன்மைக்கு கூட ஒரு காரியமும் செய்யாமல் காலத்தை கடத்தி வந்தார்கள்.

 

நமது விரோதிகளால் சிருஷ்டிக்கப்பட்ட மந்திரிகளைக் கொண்டு இந்த 6, 7 மாதத்தில் நமது விரோதிகள், அவர்கள் ஆதிக்கத்திற்கு எவ்வளவு காரியத்தை சாதித்துக் கொண்டார்கள் என்பதை யோசிப்பார்களானால் தங்களது இளிச்சவாய்த்தனம் விளங்காமல் போகாது. காலை ஒரு உத்திரவு, மாலை ஒரு உத்திரவு, இரண்டையும் அடித்துவிட்டு மறுநாள் ஒரு உத்தரவு வீதம் மந்திரிகளின் கையைப் பிடித்துப் போடச் செய்கிறார்களா இல்லையா? இதில் ஏதாவது இரகசியம் உண்டா?

வெளிப்படையாய் இன்ன காரியம் எனக்கு செய்தால் உனக்கு இன்ன காரியம் செய்வேன் என்று கடை வைத்து விற்பது போல் ஸ்தல ஸ்தாபன பதவிகளையும் உத்தியோகங்களையும் விற்கிறார்களா இல்லையா? இம்மாதிரி என்ன என்ன வழிகளில் நமது எதிரிகள் நமக்கு தீங்கு செய்து வருகிறார்கள். இக்கொடுமையில் இருந்து தப்ப நமக்கு இப்பத்திரிகைகள் இல்லாமல் வேறு என்ன ஆயுதம் இருக்கிறது?

ஆகவே நண்பர்களே தயவு செய்து இந்த இரண்டு வாரத்தை வீணாக்காதீர்கள். கண்டிப்பாய் சந்தாதாரர்களைச் சேர்த்துங்கள். செப்டம்பர் முதல் தேதிக்கு ‘திராவிடன்’ 3000 காப்பிகள் தமிழ் மக்களிடை உலாவ வேண்டும். இதற்குள் விளம்பரங்கள் சேர்ப்பவர்களும் விளம்பரம் சேர்த்துக் கொடுங்கள். குறைந்தது 2500 காப்பிக்கு உத்திரவாதமேற்று விளம்பரம் சம்பாதியுங்கள். வீணாய் காலத்தைக் கடத்தாதீர்கள். ‘திராவிடனை’ நாம் ஏற்றுக்கொள்வதானால் ‘குடி அரசு’ குறைந்து விடும் என்று சிலர் ஐயுறுகின்றார்கள். அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அது எப்படியும் உங்கள் தயவால் தமிழ் மக்களிடம் 3000 பிரதிகள் பிரதி வாரமும் உலாவிக் கொண்டுதான் இருக்கும். எனவே, தமிழ்நாட்டில் உள்ளவர்களும் வெளிநாட்டில் உள்ளவர்களும் சற்று கவனம் வைக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.08.1927)

 
Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.