சமூகத் தொண்டும் அரசியல் தொண்டும் (குடி அரசு - தலையங்கம் - 31.07.1927)

Rate this item
(0 votes)

சமூகத் தொண்டிற்கும் “அரசியல்” தொண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக் கொள்வதானது சமூகத் தொண்டிற்கு பெருத்த கேடு சூழ்வதேயாகும்.

அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும், அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும் அது கண்டிப்பாய் இது சமயம் நமது நாட்டிற்குத் தேவையில்லாதது என்றே சொல்லுவோம்.

 

நம்மைப் பொருத்தவரை அரசியலின் பேரால் கூடுமானவரை உழைத்தாகி விட்டது. கண்டது ஒன்றும் இல்லை. அயோக்கியர்களை உற்பத்தி செய்து அவர்கள் மூலம் பாமர மக்களை வஞ்சிக்கச் செய்ததே அல்லாமல் வேறில்லை. அதைவிட்டுத் தொலைத்து சமூகத் தொண்டையே பிரமாதமாய்க் கருதி அதற்கென உழைத்தாலும் அடிக்கடி சறுக்கி, அரசியல் சேற்றில் விழ வேண்டியதாக நேரிட்டு விடுகிறது. இது சகவாச தோஷமே அல்லாமல் வேறல்ல.

இனி அடியோடு அரசியலை உதறித்தள்ளி வைத்துவிட்டு, மக்களுக்கும் அதிலிருக்கும் மூட நம்பிக்கையை ஒழிப்பதை ஒரு திட்டமாக சமூகத் தொண்டில் சேர்த்து, எல்லா மக்களையும் சமூகத் தொண்டையே பிரதானமாய்க் கருதும்படி செய்வதை முக்கிய தொண்டாக வைத்துக் கொள்வதே நலமெனத் தோன்றுகிறது.

 

அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும் தேசத்தையும் சமூகத்தையும் காட்டிக் கொடுக்காமலும் வாழும்படி செய்யவே முடியாது. இது நமது அனுபோகத்திற்கு சந்தேகமறத் தோன்றிவிட்டது.

சமூகத் தொண்டில் ஈடுபட விருப்பமுள்ளவர்களிடம், அரசியலில் அதைக் கண்டிப்பதைத் தவிர, மற்றபடி தான் நேரில் கலப்பதில்லை என்பதாக உறுதி பெற்றே அவர்களை சேர்த்துக் கொள்ளும் நிபந்தனைகளை ஏற்படுத்தினால்தான் சமூகத்தொண்டு இயக்கம் நடைபெறவும், வெற்றி பெறவும் முடியுமென்றே இப்போதே நினைக்க வேண்டியிருக்கிறது.

 

பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய தென் இந்திய நலவுரிமைச் சங்க இயக்கம் கூட இரண்டு பாகமாய் பிரிக்கப்பட்டால் நன்மை என்றே கருதுகிறோம். தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பதாக உள்ளதில், அரசியல் கலந்த சமூக இயல், தனி சமூக இயல் ஆகிய இரண்டு பேருக்கும் இடமுள்ளதாக்கி தனி சமூக இயல்காரரும் அதனுள் ஒரு உள்பிரிவாக ஒன்றை ஏற்படுத்திவிடுவது நலமென்றே தோன்றுகிறது. ஏனெனில் அரசியல் கலந்தால் எப்பேர்ப்பட்டவர்களும் நாணயக் குறைவுள்ளவர்களாகப் போய் விடுகிறார்கள்.

மகாத்மா இயக்கம் கூட எவ்வளவு புனிதமானதாகக் கருதப்பட்டும், அரசியலில் பஹிஷ்காரத்தை மாற்றி சட்டசபையில் உள்நுழைவை அது என்று ஏற்றதோ அன்றே விதிவிலக்கு இல்லாமல் எல்லோரிடமும் நாணயக் குறைவு தோன்ற வழி ஏற்பட்டுவிட்டது. ஆதலால் அதைப்பற்றி இனி சந்தேகப்பட வேண்டியதில்லை. தனி சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு இஷ்டமான ஒரு அரசியல்காரரை ஆதரிக்கலாம். ஆதரிக்க சிபார்சு செய்யலாம் என்பதாக ஒரு கொள்கை மாத்திரம் வைத்துக் கொள்வதானால் ( அதுவும் அவசியமானால் அதாவது நமது சமூகத் தொண்டுக்கு அரசியலால் தடை ஏற்படாமலிருக்கும் அளவுக்கு அனுகூலம் கிடைக்கும் போல் இருந்தால் மாத்திரம் ) வைத்துக்கொள்ளலாம். நமது அபிப்பிராயத்தில் அந்த அளவு கூட மனிதனை அயோக்கியனாக்கி விடும் என்றே பயப்பட வேண்டியிருக்கிறது.

 

இந்த அடுத்து வரும் ஆகஸ்ட் மாதத்திய சட்டசபைக் கூட்டம் முடிந்தவுடன், வட ஆற்காடு ஜில்லாவில் கூடப்போகும் பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாட்டில் இதைப்பற்றி தொண்டர்கள் ஒன்றுகூடி யோசிக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். அதாவது, எந்த விதத்திலாவது சர்க்கார் சம்மந்தமான உத்தியோகம், கவுரவ உத்தியோகம், பட்டம், பதவி முதலியவைகள் எதுவும் இல்லாதவர்களும், இனி பெற்றுக்கொள்ளுவதில்லை என்கிற உறுதி உள்ளவர்கள் மட்டுமடங்கியதாகவே ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே தான். அந்தப்படி இல்லாமல் என்னதான் வேலை செய்தாலும் பயன் பெற முடியாது. தாடி நெருப்பு பற்றி எரிகிறபோது அதில் சுருட்டு பற்றவைக்க நெருப்பு கேள்பதுபோல், நமது மக்களின் நிலை தாழ்ந்து கிடப்பதையும், சிறுமைப்படுவதையும், அயோக்கியர்களால் கொடுமைப்படுத்துவதையும் பற்றி கொஞ்சமும் கவலை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதோடு, மற்றவர்கள் யாராவது கவலை எடுத்துக்கொண்டாலும் அதையும் கெடுத்து அதன் பலனையும் தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிற மக்களை வைத்துக்கொண்டு என்னதான் செய்யமுடியும் என்பது நமக்குத் தோன்றவில்லை.

ஆகையால் உண்மைத் தொண்டர்கள் இது விஷயத்தில் போதிய கவலை எடுத்து, யோசித்து இது சமயம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது மிகவும் அவசியம் என்பதை இப்போதே தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம். இதில் சேர வருகிறவர்கள் கூடுமான வரை கஷ்டம் அனுபவிக்க நேர்ந்தால் அனுபவிக்கவும், தியாகம் செய்யவும், தன்னலத்தை அடியோடு மறுக்கவும் தயாராயிருக்க வேண்டும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு யோசிக்க வேண்டும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 31.07.1927)

Read 24 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.