அய்யங்காரின் பார்ப்பனப் பிரசாரம் (குடி அரசு - கட்டுரை - 26.06.1927)

Rate this item
(0 votes)

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார், ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார் ஆகிய இருவரையும் பார்ப்பனரல்லாதார் என்கிற பெயருக்காக கூட இழுத்துக் கொண்டு தென்னாட்டில் பார்ப்பனப் பிரசாரம் செய்து வருவதும், அவ்விரு கனவான்களை ஏவிவிட்டு பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகப் பேசும்படி செய்து வருவதும் பத்திரிகையில் பார்த்திருக்கலாம்.

ஆனாலும் அவர்கள் போகிற இடங்களில் ஜனங்கள் கேள்விகள் கேட்க ஆசைப்படுவது இந்தக் காலத்தில் மிகவும் சகஜமானது என்பதும் யாவருக்கும் தெரியும். பிரசாரத்திற்குப் போகிறவர்கள் கூடுமானவரையிலாவது நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது நியாயமான பிரசாரர்களின் கடமை. அப்படிக்கில்லாமல் கேள்வி கேட்கிறவர்களை அடக்கி விடவும், அவர்களைத் தொந்தரவு செய்ய ஆள்களைத் தயார் செய்து ஏவி விடுவதும், அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொள்ள முடியுமேயல்லாமல் பிரசாரம் கோரிய பலனைத் தருவது கஷ்டமான காரியம் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதுவரையில் பார்ப்பன பத்திரிகைகளில் வந்த சேதிகளைக் கொண்டே பார்ப்போமானால் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் கோஷ்டிகளான ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, எம். கே. ஆச்சாரியார், குப்புசாமி முதலியார், அமீத்கான் சாயுபு, கந்தசாமி செட்டியார் முதலிய எல்லா கனவான்கள் சென்று பிரசங்கம் செய்த கூட்டங்கள் எல்லாவற்றிலும் ஏறக்குறைய ஏதாவது ஒரு கலவரம் நடந்ததாகவே காணப் படுகின்றது.

 

அய்யங்காரின் பிரசாரத் தன்மை எப்படியிருந்தாலும் சமூகத்திற்கோ, தேசத்திற்கோ அது எவ்வளவு கெடுதியைத் தரத்தக்கதாய் இருந்தாலும் நியாயத்தையும், மரியாதையையும், யோக்கியத்தையும் உத்தேசித்து நாம் சொல்லுவது என்னவென்றால், கூட்டங்களில் கலவரம் நடந்ததாக ஏற்படுவதானது அதற்கு காரணமாய் இருக்கிறவர்களின் இழிதகைமை என்றே சொல்லுவோம். ஸ்ரீமான் அய்யங்கார் மாத்திரம் அல்ல, இன்னமும் வேறு யாரானாலும் அவரவர் இஷ்டத்தின் பிரகாரம் பிரசாரம் செய்ய உரிமை உடையவர்களே ஆவார்கள். அவ்விதப் பிரசாரத்தை எதிர்க்கிறவர்கள் ஆண் பிள்ளைகளானால் தாராளமாய் பேச இடம் கொடுத்து விட்டு அவர்கள் சொல்ல வேண்டியவைகளை எல்லாம் சொன்ன பிறகு ஏதாவது கேள்வி இருக்குமானால் அதுவும் அவர்கள் அந்தச் சமயம் பேசிய பேச்சுக்களில் கேள்வி பிறக்குமானால் மாத்திரம் கேள்வி கேட்க வேண்டும். அவற்றிற்கும் அவர்கள் பதில் சொல்லவில்லையானால் மறுநாள் கூட்டம் கூட்டி தாராளமாக மறுத்துப் பேச வேண்டும். அப்படிக்கில்லாமல் இடையில் கேள்வி கேட்பதும் பதில் சொல்ல இஷ்டம் இல்லாவிட்டால் கட்டாயப் படுத்துவதும் மனிதத் தன்மைக்கு ஏற்ற காரியம் அல்ல என்றே சொல்லுவோம்.

 

கண்ணியமான முறையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கலாம். அதுவும் அக்கூட்டத்திற்கு இடைஞ்சல் உண்டாக்க கூடியதாக இருக்கக்கூடாது என்றே சொல்லுவோம். தனியாகவும் ஜனங்களைக் கூட்டி வைத்து விஷயங்களை எடுத்துச் சொல்ல யோக்கியதை இல்லாதவர்கள்தான் வேறு ஒருவர் கூட்டிய கூட்டத்தில் போய் கலவரம் செய்வார்களேயொழிய ஆண்மையுள்ளவர்கள் ஒருக்காலும் கலவரம் செய்ய போக மாட்டார்கள் என்பது நமது அபிப்பிராயம்.

சமீபத்தில் நாகப்பட்டணத்தில் நடந்த விஷயத்தைப் பற்றி நாம் சென்ற வாரம் கண்டித்து எழுதியிருந்தது நேயர்கள் கவனித்திருக்கலாம். அதற்குப் பிறகும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களிலும் குழப்பத்திற்கு முயற்சித்ததாகவும், குழப்பம் நடந்ததாகவும் பார்க்க மிகுதியும் வருத்தம் அடைகிறோம். மதுரையின் கூட்டத்தில் ஒரு கல் விழுந்ததாகக் காணப்படுகிறது. இது ஒரு கோழையின் செய்கையே அல்லாமல் ஆண்மகன் செய்கை அல்ல. அந்தக் கல்லை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரே, ஸ்ரீமான் கந்தசாமி செட்டியாரை விட்டு ரூ. 5 க்கு ஏலத்தில் எடுத்துக் கொண்டதாக பாவனை உண்டாக்கி விட்டாராம். இதுவும் ஒரு தந்திரமான காரியம் என்றே சொல்லலாம். ஆனாலும் பார்ப்பனக் கட்சிக்குப் பணம் சேர வேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களை இம்மாதிரியே கூட்டத்தில் கல் எறியத் தூண்டும். ஏனெனில் ஒரு கல் விழுந்தால் 5 ரூபாய் வருமானமானால் 100 கல் விழுந்தால் நூத்தைந்து 500 ரூபாய் இலாபமாச்சு என்று எண்ணிக் கொண்டு பார்ப்பன பிள்ளைகளே தம் கட்சிக்கு பணம் சேர்க்க கல்லு போட முன்வர வேண்டி வரும். ஆதலால் இந்த தந்திரமும் அவ்வளவு புத்திசாலித்தனமல்ல என்றே சொல்லுகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 26.06.1927)

 
Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.