ஸ்ரீமான் ஜோசப்பின் குட்டிக்கரணம்

Rate this item
(0 votes)

சென்னை அரசாங்கத்தில் கிருஸ்தவர் என்கிற சலுகையின் பேரில் ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியாருக்கு மந்திரிப் பதவி கிடைத்ததிலிருந்து ஸ்ரீமான் நமது ஜோசப்புக்கு நாக்கில் தண்ணீர் சொட்ட ஆரம்பித்து விட்டது. அதோடு மாத்திரமல்லாமல் அந்த மந்திரிப் பதவி பார்ப்பனர்கள் மூலமாகத் தான் விற்கப்படுகிறதென்கிற தீர்மானமும் ஏற்பட்டு விட்டது. அதோடு கூட அம்மந்திரிப் பதவிக்கு பார்ப்பனர்களுக்குக் கொடுக்க வேண்டிய விலை “ஜஸ்டிஸ்” கட்சியைத் திட்டி பார்ப்பனரல்லாதாரைக் காட்டிக் கொடுக்க வேண்டியதுதான் என்கிற முடிவும் அவருக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சமீபத்தில் மதுரையில் பேசினதும், ஸ்ரீசத்தியமூர்த்தியைப் புகழ்ந்ததும் மற்றும் அவர் தெரிவித்த அபிப்பிராயமும், ஸ்ரீமான் ஜோசப்பின் புதிய பிறப்பைக் காட்டுகிறது. ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை ஒரு மனிதர் புகழ்வாரானால் அம்மனிதருடைய யோக்கியதை இன்னதென்று நாம் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. உதாரணமாக “மலம் நல்ல வாசனையாயிருக்கிறது என்று ஒருவர் சொல்லுவாரானால் அவர் மூக்கின் யோக்கியதையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?” என்ற பழமொழி ஒன்றுண்டு. அதுபோலவே ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் யோக்கியப் பொறுப்பும் நாணயமும் நன்றாக அறிந்த ஸ்ரீமான் ஜோசப்பு அவர்கள் அவரைப் புகழ்வதும், சுயராஜ்யக் கட்சியின் யோக்கியதையையும், தென்னாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கியதையையும் நன்றாக அறிந்த ஸ்ரீமான் ஜோசப்பு இவைகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுவதுமானால் பீசு இல்லாமல் பேசுகிறார் என்று யாராவது நினைக்க முடியுமா? இதன் பயனாகக் கிறிஸ்தவர் என்கிற முறையில் ஸ்ரீமான் ஜோசப்புக்கு ஒரு சமயம் மந்திரி உத்தியோகம் அல்லது அதற்கு சமானமான பதவி கிடைப்பதாயிருந்தாலும் ஸ்ரீமான் ஜோசப்பின் வாழ்க்கையின் பெருமை அடியோடு ஒழிந்து போகுமென்றே பயப்படுகின்றோம்.

 இந்து மதம் என்கிற புரட்டை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள், தாங்கள் பெரிய ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டும் அம்மதத்தினர் என்பவர்களுக்குள்ளாகவே தாங்களொழிந்த மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாராக்கி நிரந்தரமாய்ப் பிழைக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “அரசியல்” இயக்கம் என்பவைகளிலுள்ள சூழ்ச்சியை வெளிப்படுத்தப் பார்ப்பனரல்லாதார் பார்ப்பனருடன் சண்டை இடும்போது ஸ்ரீமான் ஜோசப் போன்றவர்கள் இரு (ஆட்டுக்குட்டி)வர் சண்டையிலிருந்து ஒழுகும் இரத்தத்தைக் குடிக்கும் (குள்ள நரியாக) வீரராகத் தோன்றியது மிகவும் பழி சொல்லத்தக்க காரியம்.

தேசாபிமானம் என்பதற்கு ஸ்ரீமான் ஜோசப் என்ன பொருள் கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லை. தென்னாட்டுப் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தைத்தான் ஸ்ரீமான் ஜோசப் அவர்கள் தேசாபிமானம் என்று கொள்வாரானால் அவரையும் பார்ப்பனக் கூட்டத்தில் சேர்த்துத்தான் கணக்குப் பார்க்கவேண்டும். ஏனெனில் ஸ்ரீமான் ஜோசப்புக்கும் பார்ப்பனருடன் சேருவதற்கு உரிமை உண்டு. என்னவென்றால் “இந்துக்”களில் பார்ப்பனரல்லாதார் அதிகமானவர்கள். பார்ப்பனர்கள் மிகுந்த குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள். குறைந்த எண்ணிக்கையுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையுள்ளவர்களை எய்தி ஆதிக்கம் பெற வேண்டுமானால் ஏதாவது ஒரு சூழ்ச்சியின் மூலம் தான் முடியும் என்பது பார்ப்பனர்களின் முடிவு. அது போலவே ஸ்ரீ மான் ஜோசப் அவர்களும் தங்கள் குறைந்த எண்ணிக்கையை உத்தேசிக்கும்போது தாங்களாகத் தனித்த ஒரு தந்திரமோ அல்லது பார்ப்பனர்களின் தந்திரத்தில் கூட்டு வியாபாரமோ செய்ய வேண்டியதுதான் கிரமமானது என்கிற முடிவுக்கு வரவேண்டியவர்தான். ஆனால் யோக்கியமான முறையில் கிடைக்காத எந்த ஆதிக்கமும் நிலைக்காது என்பதும் நிலைத்தாலும் வாசனையுள்ளதாயிருக்காது என்பதும் எமது துணிவு.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1927)

 

Read 31 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.