பாரதத் தாயின் துயரம் குடி அரசு - கட்டுரை - 05.06.1927

Rate this item
(0 votes)

ஏ காங்கிரசே! நீ என்று ஒழிகிறாயோ அன்றுதான் நான் விடுதலை அடைவேன். நீ இப்போது பாரதத் தாயாகிய என்னை மீளா நரகத்திலாழ்த்தி விட்டாய். என் மக்களில் பெரும்பாலோரை அயோக்கியர்களாக்கி விட்டாய். யோக்கியமான மக்களை குறைத்து விட்டாய். நீ இல்லாமலிருந்தால் இப்போது தலைவர்கள் தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனேக அயோக்கியர்கள் என் சார்பாய் பேசி வயிறு வளர்க்க முடியுமா? நீ இல்லாவிட்டால் எனது அருமைப் புத்திரனான காந்தி மகான் எனக்காகச் செய்த தவமும் தியாகமும் ஆத்ம சக்திப் பிரயோகமும் பலனற்றுப் போகுமா? நீ இல்லாவிட்டால் உன்னுடைய உபத்திரவம் இல்லாவிட்டால் எனது அருமை மகன் மகாத்மா மூலையில் உட்காரமுடியுமா? நீ இல்லாவிட்டால் பம்பாயில் கூடிப் பேசிய அயோக்கியர்களும் சுயநலக்காரரும் துரோகிகளும் “ஜனப் பிரதிநிதிகள்” ஆவார்களா? என் பெயரைச் சொல்லி என்னைக் காட்டி கொடுத்து மாதம் 1 - க்கு 1000, 2000, 3000, 4000, 5000, 6000 வீதம் எனது ஏழைகளின் பணத்தை பணமாகக் கொள்ளை கொள்ளுவார்களா? என்னை மானபங்கப்படுத்த இத்தனை வக்கீல்கள் வருவார்களா? எனது கற்பை அழிக்க இத்தனை கோர்ட்டுகள் ஏற்படுமா? இவற்றிற்கு எல்லாம் யார் பொறுப்பாளி? காங்கிரஸ் பாவியாகிய அரக்கி நீ அல்லவா எனக்கு எமனாய் தோன்றி இருக்கிறாய்? என்று நீ ஒழிவாய்? அன்று நான் நரகத்தில் இருந்து எழுவேன், விடுதலை பெறுவேன், சுயமரியாதை அடைவேன். இது சத்தியம்.

பாரதத் தாய் தனது மக்களுக்குச் சொல்வது

ஏ மக்களே! உங்கள் மூடபுத்தி என்று ஒழியும்? உங்கள் மூட புத்தியாலல்லவா நாட்டில் பிளேக்கு, காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகள் இருப்பது போல் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம் முதலிய தொத்து வியாதிகள் பரவி என்னை பாழாக்குகிறது. காலரா, பிளேக்கு, வைசூரி ஒவ்வொன்றும் மனிதனின் சரீரத்தையும் உயிரையும் மாத்திரம் பற்றி கொள்ளை கொள்ளக் கூடியது. ஆனால் “காங்கிரஸ்” “சுயராஜ்யம்” “தேசியம்” என்னும் வியாதிகளோ எனது முப்பத்து முக்கோடி மக்களையும் அவர்கள் வாழும் தேசமாகிய என்னையும் அவர்களது அறிவையும், செல்வங்களையும், ஒழுக்கங்களையும், என் உயிர் போன்ற சுயமரியாதையையும் கொள்ளை கொண்டு பாழ் பண்ணிக் கொண்டு வருகிறதே இதை கவனிப்பதில்லையா? மக்களே! நீங்கள் மாக்கள் அல்ல என்பதற்கு இதுதானா அடையாளம். இவ் வியாதிகளின் பேரால் “வைத்த பாரமெல்லாம் சுமக்கிறேன். இன்னும் வை, இன்னும் வை” என்று உங்கள் முதுகைக் குனிந்து கொடுக்கிறீர்களே, இதுதான் உங்கள் மக்கள் தன்மையா?

எவனாவது ஒரு காங்கிரஸ்காரன் இந்த ஊருக்கு ஒரு கோர்ட்டு வேணுமென்று விண்ணப்பம் எழுதிக் கொண்டு வந்தால் உடனே நீங்கள் அப்பன் மக்கள் எல்லோரும் கையெழுத்துப் போட்டு விடுகிறீர்கள். கோர்ட்டு வைத்த மறுநாளே நீங்களே அப்பன், மக்கள், அண்ணன், தம்பி, எஜமான், குமாஸ்தா, குடியானவன், மிராஸ்தார் முதலிய என்கிற முறையில் கோர்ட்டுக்குப் போக வேண்டியவர்களாகிறீர்கள்.

 

பிராமணீயம், பிரிட்டானீயம் இந்த இரண்டை விட தேசியமே பெரிய ஆபத்தானது. பிரிட்டானீயத்தைக் கடுகளவாவது அசைக்க வேண்டுமானால் முதலில் இந்த தேசீயமும் இரண்டாவதாக பிராமணீயத்தையும் துலைக்க வேண்டும். பிராமணீயத்தை நிதானமாகக் கூட ஒழிக்கலாம். அவசரமாக தேசீயத்தை ஒழிக்க வேண்டும். ஏனெனில் தேசீயமே பிரிட்டானீயத்திற்கு அஸ்திவாரமாயிருக்கிறது. தேசீயத்தை இடித்துவிட்டால் பிரிட்டானீயம் ஆடிப்போகும். தேசீயமில்லாதிருக்குமானால் வெகு நாளைக்கு முன்பே பிரிட்டானீயம் உண்மையான சுதேசீயமாய் விட்டிருக்கும்.

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது - குடி அரசு - கட்டுரை - 05.06.1927)

 
Read 50 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.