ஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும். (குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.04.1927)

Rate this item
(0 votes)

சமீப காலத்திற்குள், அதாவது சுமார் 6 மாதத்திற்குள், நமது மாகாணத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு கனவான்கள் இந்தியாவின் பிரதிநிதி என்கிற முறையில் போயிருக்கிறார்கள்.  அவர்களில் ஒருவர் பார்ப்பனரல்லாத  வகுப்பைச் சேர்ந்த, கோவை ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள், எம்.எல்.ஏ. ஆவார். மற்றவர் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த மைலாப்பூர் அய்யங்கார் ஸ்ரீமான் டி. ரங்காச்சாரியார் ஆவார்.  ஸ்ரீமான் செட்டியார் ஜனப் பிரதிநிதியாய் கவர்ன்மெண்ட்டாருடைய பணச் செலவில்லாமல் பொது அரசியல் விஷயமாய் சென்று வந்தவர்.  ஸ்ரீமான் ரங்காச்சாரியார் கவர்ன்மெண்ட் பிரதிநிதியாய் சர்க்கார் செலவில் ஏதோ ஒரு ஊரின் திறப்பு விழாவிற்காக “இந்தியப் பிரதிநிதியும் வந்திருந்தார்” என்று கணக்கு காட்டுவதற்காக போகிறவர்.  இந்த லட்சணத்தில் தனக்கு ஒரு உத்தியோக காரியதரிசியாம்.  அதாவது தனது மகனையே காரியதரிசியாக்கிக் கொண்டார். சௌகரியத்திற்கு ஒரு ஆளாம். அதற்கு மற்றொரு மகனை நியமித்துக் கொண்டார்.  ஆகவே அப்பன் மக்கள் மூவரும் போகிறார்கள்.  திரும்பி வருவதற்குள் இந்த பிள்ளைகளுக்கு ஏதாவது மாதம் 300, 400 ரூபாய்களில் உத்தியோகங்களும் கிடைத்து விடலாம்.  ஸ்ரீமான் ரெங்காச்சாரியாருக்கும் கூடிய சீக்கிரத்தில் மாதம் 4000, 5000 கிடைக்கும்.  ஏதாவது கமிஷனில் மெம்பர் ஸ்தானமோ அல்லது நிர்வாக சபைகளில் மெம்பர் ஸ்தானங்களோ கிடைத்துவிடலாம்.  

சர்க்கார் தயவை எதிர்பார்த்து சர்க்கார் பிரதிநிதியாய் சர்க்கார் செலவில் போன ஸ்ரீமான் ரங்காச்சாரிக்குப் பார்ப்பன பத்திரிகைகளும் பார்ப்பனர்களும் செய்த ஆரவாரமென்ன?  விருந்து என்ன? வழியனுப்பு உபச்சாரமென்ன? என்பதையும், ஜனப் பிரதிநிதியாய் தன்னுடைய எலெக்ஷனையும் கவனியாமல் சர்க்கார் செலவில்லாமல் தனியே போனவருக்கு இப்பார்ப்பனர்கள் செய்த விஷயம் என்ன?  என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமில்லையா என்பது விளங்காமல் போகாது.

 தவிர, செட்டியாருக்கு கொஞ்சம் பொதுஜனங்களிடம் செல்வாக்கு வந்துவிட்டதாய் தெரிந்தவுடன் அவரை ஒழிக்க ஆரம்பித்தும், செட்டியாரைக் கூட்டிக் கொண்டு திருச்சி, திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களில் ஊர் ஊராய்த் திரிந்து தாங்கள் யோக்கியதை சம்பாதித்துக் கொண்டு, தங்களுக்கு ஜயம் கிடைத்த பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலக்கி விட்டதும், இப்பொழுதும்  இந்தியா சட்டசபையில் நன்றாய் பேசக்கூடிய நபர் ஸ்ரீமான் செட்டியார் தான் என்று இந்தியா பத்திரிக்கைகள் பூராவும் கூச்சல் போட்டாலும், சென்னை பார்ப்பனப் பத்திரிக்கைகள் இப்பேச்சுகளைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல், ஆர். கே. ஷண்முகம் செட்டியார் என்பதற்கு பதிலாக, எஸ்.செட்டியார் என்று, அதாவது முன் ஸ்ரீமான் சம்மந்த முதலியார் இந்தியா சட்டசபையில் இருந்த காலத்தில் அவர் பெயர் யாருக்கும் தெரியக் கூடாது என்கிற எண்ணத்தின் பேரில், எஸ்.முதலியார் என்று எழுதிவந்தது போலவே, எஸ். செட்டியார் என்று ஆரம்பித்து விட்டார்கள்.  இதிலிருந்து யாரிடம் வகுப்பு துவேஷம் இருக்கிறது என்பதை இனியாவது உணரும்படி வேண்டுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.04.1927)

Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.