பார்ப்பனக் கொடுமைக்காக உயிர்விட்ட சுத்த வீரன் (குடி அரசு - தலையங்கம் - 17.04.1927)

Rate this item
(0 votes)

பார்ப்பன எஜமானன் கீழ் இருந்து வேலை பார்த்து வயிறு பிழைப்பதை விட சாவதே மேல் என்பதாகக் கருதி ஒரு சுத்த வீரன் பாஷாணத்தைச் சாப்பிட்டு உயிர்விட்டுத் தனது சுயமரியாதையைக் காத்துக் கொண்ட செய்தியை வேறு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். இவ்வீரனை நாம் உண்மையான சுத்த ரத்தோட்டமுள்ள சுத்த வீரனென்றே சொல்லுவதோடு, மனமாரப் பாராட்டுகிறோம். இவ்வீரனின் தியாகமானது பார்ப்பனரல்லாத சமூகத்திற்காக இதுவரை பாடுபட்ட எல்லாப் பெரியார்களின் தியாகத்தை விட மிகப்பெரிய தியாகமென்றும், மற்றவர்கள் செய்த வேலைகளையெல்லாம் விட மிகப் பெரிய பலனை அளிக்கக்கூடியது என்றும் சொல்லுவோம்.

நாயர் பெருமானின் பிராமணத் தியாகமும், தியாகராய பெருமானின் தன்னலமற்ற சேவையும் மற்றும் பலரின் சிறைவாசமும் இவ்வீரனின் தியாகத்திற்கு ஒரு விதத்திலும் சமானமாகாதென்றே சொல்லுவோம்.

 

இதைப்பற்றி எழுதும் போது நமது உடம்பு சிலிர்த்துக் கொண்டே இருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்கள் இவ்வீரனைக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் கூட்டங்கள் போட்டு அவனைப் பாராட்டித் தீர்மானங்கள் செய்தனுப்ப வேண்டும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றச் சம்பந்தமான ஒவ்வொரு சங்கத்திலும் இவ்வீரனின் உருவப் படத்தை வைக்க வேண்டும். உண்மையான பார்ப்பனரல்லாதார் ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படங்கள் துலங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கெல்லாம் இவ்வீரனின் சுத்த வீரத்தன்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். ஒன்றா பார்ப்பனீயக் கொடுமையில் இருந்து விலக வேண்டும், விலக முடியாவிட்டால் உயிர் துறக்க வேண்டும் என்கிற மந்திரம் பார்ப்பனரல்லாத சமூகத்திற்குள் எங்கு பார்த்தாலும் முழங்க வேண்டும். உயிரை விட சுயமரியாதையே பெரிது என்பதை யாவரும் உணரும்படி செய்ய வேண்டும்.

 

இதுசமயம் எத்தனை பேர்கள் நமது சுத்த வீரனைப் போல் உயிர் விட சம்மதமில்லாமலும் வெளியேறிப் பிழைக்க முடியாமலும் பார்ப்பனர்களின் கீழ் கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்பதை கணக்கிலடக்கக் கூடுமா? நாம் ஏறக்குறைய வாரத்தில் 3 அல்லது நான்கு நாள் வெளி ஊர்களில் சுற்றுப் பிரயாணம் போய்க் கொண்டு இருக்கிறோம். போகிற ஊர்களிலெல்லாம் பார்ப்பனர்களால், பார்ப்பனீயக் கொடுமைகளால் நமது மக்கள் படும் கஷ்டங்கள் சகிக்க முடியாதபடி கேள்விப்படுகிறோம். பார்ப்பனர்களும் வரவர அதிகமான தைரியம் பெற்று விட்டார்கள். ஏனென்றால் எல்லாத் துறைகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் பெற்றுவிட்டதாலும் நிர்வாக சபையில் பொறுப்புள்ள ஸ்தானத்தில் பார்ப்பனரே இருக்கிறபடியாலும் மந்திரிகளும் பார்ப்பனர்கள் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடுகிறவர்களாயிருப்பதாலும், நம்மவரிலும் சிலரைத் தங்களுக்கு அடிமையாக்கிக் கொண்டதாலும், பயமின்றியும், ஈவு இரக்கமின்றியும் தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ள நம்மவர்களை சித்திரவதை செய்து வருகிறார்கள். இதற்கு உதாரணமாக நாம் சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைப் பொது ஜனங்கள் ஞாபகத்திற்குக் கொண்டு வருகிறோம்.

 

அதாவது, சென்னையில் வித்தியா இலாக்கா சம்பந்தப்பட்ட ஸ்தாபனமொன்றில் சமஸ்கிருத இலாக்காவில் ஒரு பார்ப்பனரல்லாதார் சுமார் 9 வருஷமாக புரொபசராக இருந்து வருகிறார். அவர் சமஸ்கிருதத்தில் மிக்க பாண்டித்தயமுடையவர். அப்படிப்பட்டவர் ஒரு பரீட்சகராய் நியமிக்கப் பட்டார். தலைமை பரீட்சகரான ஒரு பார்ப்பனர் அவருடைய நியமனத்தை அடித்துவிட்டு வேறு ஒரு பார்ப்பனரை நியமித்துக் கொண்டார். சிண்டிகேட் சபையார் என்கிற மேல் அதிகாரிகள் தலைமைப் பரீட்சகரின் உத்திரவை நிராகரித்துவிட்டு மறுபடியும் அந்த பார்ப்பனரல்லாதாரையே நியமித்தார்கள். அதன் பேரில் தலைமை பரீட்சகரான பார்ப்பனருக்குக் கோபம் வந்து 9 வருஷ காலம் சமஸ்கிருத புரொபசராயிருந்த ஒரு பார்ப்பனரல்லாதாரை ஒரே அடியாய் அவர் புரொபசர் வேலைக்கே லாயக்கில்லை என்பதாகச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி விட்டார்களாம். அல்லது அனுப்பப் போகிறார்களாம். பார்ப்பனீயக் கொடுமைக்கு இதைவிட இன்னும் என்ன ருஜு வேண்டும்?

இம்மாதிரி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் தினமும் நடைபெறுகின்றன. தவிர சென்னை முனிசிபல் கார்ப்பரேஷனில் ஒரு பார்ப்பனரல்லாதார் கமிஷனராயிருப்பதினால் அங்கு உள்ள பார்ப்பன கவுன்சிலர்கள் எவ்வளவு அக்கிரமமாகவும் அயோக்கியத்தனமாகவும் நடந்து கொள்ளுகிறார்கள் என்பது பத்திரிகை பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்காது. இதுவரை யாராவது ஒரு கவுன்சிலர் அவர் பேரில் நாணயக் குறைவு என்று சொல்லவே இல்லை. கார்ப்பரேஷனுக்கும் வருஷத்தில் 2, 3 லட்ச ரூபாயிக்கு மேலாகவே லாபம் செய்தும் வைத்திருக்கிறார். கார்ப்பரேஷன் உத்தியோகஸ்தர்கள் லஞ்சம் வாங்குவதை வெகுசாய் நிறுத்திவிட்டார். கவுன்சிலர்கள் கண்டிராக்டர்களிடம் லஞ்சம் வாங்குவதையும் நிறுத்தி குறைந்த விலைக்கு நல்ல சாமான்கள் கிடைக்கும்படியாகவும் டோல் முதலிய குத்தகைகள் முதலியவைகளில் உள்ள புரட்டுகளை நீக்கி அதிகத் தொகைக்கு அடைபடும்படியாகவும் செய்திருக்கிறார். இன்னமும் அவர் முனிசிபாலிட்டிக்கு செய்துள்ள சீர்திருத்தங்கள் சொல்லி முடியாது. அவ்வளவு நன்மைகள் செய்திருந்தும், அந்த ஸ்தானம் இரண்டாயிர ரூபாய் சம்பளமுள்ளதாயிருப்பதால் அவரை முனிசிபாலிட்டியை விட்டு விலக்கி அந்த ஸ்தானத்தில் ஒரு பார்ப்பனரைக் கொண்டுவந்து வைக்கப் பார்ப்பனர்கள் செய்யும் முயற்சி இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாததாயிருக்கிறது.

 

மந்திரி பார்ப்பனர்களின் அடிமையாயிருப்பதால் அவர் மூலம் என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்து வெற்றி பெறுகிறார்கள். கமிஷனரும் மூட்டைக் கட்டித் தயாராய் வைத்துக் கொண்டே இருக்கிறார். மற்றபடி வெளி தாலூக்கா, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டிகளிலும் பார்ப்பனாதிக்கத்திற்கு அளவே இல்லை. மதுரை முனிசிபல் சேர்மெனுக்கு மதுரை கவுன்சிலர்களால் பாசான தொகை, கிரமப்படி சம்மதம் கொடுக்க விடாமல் அதை ஆnக்ஷபிக்கும்படி மந்திரியை பிடித்து உபத்திரவம் செய்து வருகிறார்கள். மந்திரியும் ஸ்திர புத்தி இல்லாமல் எழுதி எழுதி, அடித்து அடித்து உத்திரவு போட்டு வருகிறார். சேலம் ஜில்லா போர்டு தேர்தல் நடக்கும் தினத்தன்று அதை நடக்க விடாமல் செய்யக் கருதி மந்திரியைக் கொண்டு நிபந்தனைகள் காட்டி எலக்ஷனை தடை செய்தார்கள். போர்டு பிரசிடெண்டு நிபந்தனையின்படி எலெக்ஷன் நடத்திய பிறகு கூட அந்தத் தேர்தலை ஒப்புக் கொள்ளச் செய்யாமல் அதை நிராகரிக்கும்படி மந்திரி வீட்டில் போய் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு அவர் கையைப் பிடித்து எழுதச் சொல்லுகிறார்கள். மற்றும் பல விஷயங்களில் ஹைகோர்ட்டு ஜட்ஜிகளை கலெக்டர்கள் முதலான பெரியவர்களிலும் சிலரை ஏமாற்றிப் பார்ப்பனரல்லாதாருக்கு என்னென்ன கெடுதிகளும் முட்டுக் கட்டையும் போட வேண்டுமோ அவ்வளவும் செய்து வருகிறார்கள். எப்படியாவது பார்ப்பனர்களின் மாய்கையில் சிக்க முடியாத யோக்கியதை நம்மில் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பேருக்கு இல்லை என்றே சொல்லலாம். இந்த பலக் குறைவையே நமது பார்ப்பனர்கள் மிகுதியும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். இவைகளையெல்லாம் யோசிக்கும் போது சுயமரியாதை உள்ளவர்களுக்கு மேல் கண்ட சுத்தவீரனின்* உணர்ச்சிதான் தோன்றுமே அல்லாமல் வேறு ஒன்றும் தோன்றுவதற்கு இடமே இல்லை. ஆதலால் அவ்வீரனைப் பாராட்டி ஆங்காங்கு தீர்மானங்கள் செய்யவும் அவனது உருவப் படத்தை ஒவ்வொரு சங்கங்களிலும் வீட்டிலும் தொங்கவிடவும் மறுபடியும் வேண்டிக் கொள்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 17.04.1927)

Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.