வாலாஜாபாத் சொற்பொழிவு குடி அரசு - சொற்பொழிவு - 17.04.1927)

Rate this item
(0 votes)

ஸ்ரீமான் ரெட்டியார் அவர்கள் இதுவரை செய்த வேலைகளையும், செய்யப் போகும்  வேலைகளையும் பற்றி சொன்னது தமக்கு மிகுந்த திருப்தி அளிக்கின்றதெனவும், இவ்வளவு வேலைகள் அவர் செய்திருந்தாலும், தற்கால பார்ப்பன அகராதிப்படி  அவர் பெரிய தேசத்துரோக ஜாப்தாவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றும், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 9 பார்ப்பனரல்லாத ஜில்லா போர்டு மெம்பர்களில் இரண்டு ஜில்லா போர்டு மெம்பர்கள் தான் “தேசத்துரோகிகள்” என்று சொல்லப்படுகிறார்கள் என்றும், அவர்கள் செங்கல்பட்டு போர்டு ஸ்ரீமான் ரெட்டியாரும் தஞ்சாவூர் போர்டு ஸ்ரீமான் பன்னீர் செல்வமுமேயாவார்கள் என்றும், ஸ்ரீமான் பன்னீர் செல்வத்தைவிட ஸ்ரீமான் எம்.கே. ரெட்டியாரே அதிகமான அதாவது பிராயசித்தமே இல்லாத “தேசத்துரோகி” என்றும், ஸ்ரீமான் பன்னீர் செல்வம் தன்னுடைய ஆட்சியில் பல பார்ப்பனருக்கு உத்தியோகம் சோறு, படிப்பு முதலியவைகள் கொடுக்கிறார் என்றும், இவர் அடியோடு மறுக்கிறார், ஆதலால் தான் பெரிய “தேசத்துரோகியாகி”விட்டார் என்றும், அப்பேர்பட்ட தேசத்துரோகியை பாராட்டும் கூட்டத்திற்கு தேசத்துரோகிகளுக்கு உபாத்தியாயரான ஸ்ரீமான் எ.ராமசாமி முதலியார் பேசப்போவதும் மிகவும் பொறுத்தமானதென்றும், இப்படியான “தேசத்துரோக கூட்டத்திற்கு” சமீபகாலம் வரை “தேச பக்தனாக” பார்ப்பனர்களாலும், “தியாக மூர்த்தியாகவும்”, “தேசாபிமானச் சிங்கமாகவும்” அழைக்கப்பட்டுவிட்டு, திடீரென்று தேசத்துரோகியாகி விட்ட தான் அக்கிராசனம் வகிப்பதை மிகப் பெருமையாக நினைக்கிறேன் என்றும்,  தான் ஸ்ரீமான் ரெட்டியாரவர்கள் இடம் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த பதவியும் அவருக்குள்ள ராவ்பகதூர் பட்டமும் போவதாயிருந்தாலும், அன்றி நரகமே கிடைப்பதாயிருந்தாலும், இப்பொழுது அவர் பார்ப்பனர்களால் தேசத் துரோகப் பட்டம் வாங்கியிருப்பதை மாற்றி, பார்பனர்களால் தேசப்பக்த பட்டம் வாங்க முயற்சிக்கக்கூடாது என்றும், உண்மையாய் தேசத்துக்கும், சமூகத்துக்கும் உழைக்கும் மனிதர்களைக் கண்டுபிடிக்க ஒரே ஒரு மார்க்கத்தைத் தான் கையாடி வருவதாகவும், அது என்னவென்றால் நமது நாட்டில் யார் யார் பார்ப்பனர்களால் தேசபக்தர், தேசபக்த சிகாமணி என்று அதாவது விபீஷணனைப் போல பார்ப்பனர்களால் கொண்டாடப்படுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் ஒருவர்கூட பாக்கியில்லாமல் தெரிந்தோ, தெரியாமலோ தேசத்திற்கும் தமது சமூகத்திற்கும் கெடுதி செய்த பெரிய துரோகிகள் என்றும், யார் யார் பார்ப்பனர்களால் தேசத்துரோகி என்றும், வகுப்புவாதிகள் என்றும், வகுப்புத் துவேஷகாரர் என்றும், காங்கிரஸ் விரோதி என்றும் சொல்லப்படுகிறார்களோ, அவர்கள் கூடுமானவரை உபயோகமுள்ளவர்கள் என்றும் தான் முடிவு செய்வதற்காகவும் சொன்னதோடு ஸ்ரீமான் ரெட்டியார் அவர்களிடம் போர்டு பிரசிடெண்டு முறையில் தான் இனியும் எதிர்பார்ப்பது என்னவென்றால், ரெட்டியார் ஆக்ஷிக்கு உள்பட்ட பள்ளிக்கூடங்களில் பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்களையே வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அதனால் கொஞ்சம் அதிகப் பணம் சிலவாவதானாலும் கல்வி கற்பிப்பது தாமதப்பட்டாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்களைக் கொண்டே நமது பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கப்பட வேண்டுமென்றும், பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்களை கற்பித்து செய்ய ஒரு பள்ளிக்கூடம் ஒவ்வொரு ஜில்லா போர்டும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அதற்காகத் தகுந்தபடி பணம் ஒதுக்க வேண்டும் என்றும் பேசினார்.

(குறிப்பு :   வாலாஜாபாத் மகாஜனங்களால் அளிக்கப்பட்ட உபசாரத்தில் தலைமை ஏற்று 10.4.27ல்  ஆற்றிய சொற்பொழிவின் முன்னுரை.

குடி அரசு - சொற்பொழிவு - 17.04.1927)

 
Read 46 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.