வகுப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள் ஒப்புவதில்லை (குடி அரசு - கட்டுரை - 10.04.1927)

Rate this item
(0 votes)

புதிய சீர்திருத்தத்தின்படி அரசியலில் மகமதியர்களுக்கு கொடுத்திருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதற்காக சென்னை பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வருவதும், தங்கள் பணச் செலவில் சில மகமதியர்களை தங்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு அவர்களுக்கு தேர்தல்களில் தாங்கள் உதவி செய்து, மகமதிய சமூகத்திற்கு அனுகூலமில்லாமல் தங்களது சுயநலத்திற்காக அவர்களை உபயோகித்து வருவதும் யாவரும் அறிந்ததே. சமீபத்தில் டில்லியில் இது விஷயமாய்க் கூட்டம் கூடியதில் தங்களுக்கு வகுப்புவாரித் தொகுதி வேண்டாம் என்றும், கலப்புத் தொகுதியில் தங்களுக்கு என்று சில ஸ்தானங்கள் ஒத்தி வைத்தால் போதுமென்றும், சில மகமதியர்கள் ஒப்புக்கொண்டதாக விஷயங்கள் வெளியாயிருக்கின்றன. ஆனால் பல நிபந்தனைகளின் மேல் அம்மாதிரி ஒப்புக்கொண்டதாக பின்னால் விஷயங்கள் வெளிவருகின்றன. ஆனால் பல சுவாதீன முஸ்லீம்களும் சமூக விஷயத்திலும், மார்க்க விஷயத்திலும் அபிமானமும், பொறுப்பும் உள்ள முஸ்லீம்களும், இந்த விஷயத்தை ஆnக்ஷபித்து தங்களுக்கு இப்போதுள்ள வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், அதாவது முஸ்லீம்களாலேயே தெரிந்தெடுக்கும் பாத்தியமே வேண்டுமென்று சொல்லி வருவதோடு மேல்படி ஒதுக்கி வைக்கும் கொள்கையை ஆட்nக்ஷபித்தும் கண்டித்தும் வருகிறார்கள்.

சமூகத்தையும், மார்க்கத்தையும் கவனிக்காமல் அரசியல் மூலம் உத்தியோகமும் பதவியும் சுயநலமும் பெறலாம், வயிறு வளர்க்கலாம் என்கிற ஆசாமிகளுக்கு இந்த தனித்தொகுதி உரிமை பிடிக்காது தான். ஏனெனில் தங்கள் சமூகத்தாரால் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமானால் அவன் யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும். யோக்கியமாய் நடந்து கொள்ளுபவனுக்கு சுய நலம் பலிக்காது. தங்கள் சமூகத்தார் தயவில்லாமல் வேறு சமூகத்தார் தயவில் பதவியும் பிரதிநிதித்துவமும் பெறுவதென்றால் அயோக்கியர்களுக்கு அது எப்பொழுதும் தயாராயிருக்கும். ஏனெனில் தனது சமூகத்தையும் மார்க்கத்தையும் வேறு சமூகத்தின் நன்மைக்கு விட்டுக்கொடுப்பதால் வேறு சமூகத்தாரால் ஆனந்தத்துடன் வரவேற்பார்கள். அதனாலேயேதான் பலருக்கு இதுவே ஜீவனமாகவும் நடந்து வருகிறது. ஒருவன் தங்கள் சமூகத்திற்கு தனி உரிமை வேண்டுமென்றால் அவன் மற்ற சமூகத்தாரால் அழிக்கப்பட வேண்டியவனாய் விடுவான்.

 

அதனாலேயே இந்துக்கள் என்பவர்களிலும் சிலர் தங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சொன்னவர்களாயிருந்தாலும் இப்போது பார்ப்பனர்களுக்கு பயந்து கொண்டு எங்கு அவர்கள் தங்கள் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடுவார்களோ என்கிற நடுக்கத்தின் பேரில் இப்போது பார்ப்பனருடன் சேர்ந்து கொண்டு “வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கூடாது, அது தேசத்திற்கு கெடுதி” என்று சொல்லுகிறார்கள். ஆனால் நமது சென்னை மாகாண மகமதிய கனவான்களில் பலர் அப்படி இல்லாமல் அதாவது பார்ப்பனருக்கு பயப்படாமல் அவர்கள் சூழ்ச்சியில் சிக்காமல் தைரியமாய் வெளிவந்து முஸ்லீம்களுக்குள் தனித்தொகுதியை எடுத்து விட்டுக் கலப்புத் தொகுதி ஏற்படுத்தினால் முஸ்லீம்களுக்கு மிகுந்த தீங்கை விளைவிக்கும் என்றும், இதனால் இந்து முஸ்லீம்களுக்குள் தற்காலம் இருக்கும் ஒற்றுமை கெட்டுவிடும் என்றும் தாராளமாய் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள், அவர்களில் முக்கியமானவர்கள் ஜனாப்கள் கே.பி.வி.எஸ். முகமது மீரா ராவுத்தர், டி.கே. தாஜூடீன், டி.கே.சையத் இப்ராகீம் ராவுத்தர், முகமத்ஷபனாத், எஸ்.கே. அப்துல் ரஜாக், அப்துல் வஹாப், என். காதர் மைய்தீன், டி.எம்.மொய்டு, உப்பிசாஹிப், அப்துல் ஹெய் முதலிய சட்டசபை மெம்பர்களாவார்கள்.

 

சென்னை அய்யங்கார் பார்ப்பனர்கள் தயவில் சட்டசபைக்கு வந்த ஜனாப்களின் கையெழுத்துக்கள் இதில் இல்லாதது நமது மகமதிய சகோதரர்களுக்கு ஒன்றும் ஆச்சரியமாயிருக்காது. ஆதலால் அதைப்பற்றி ஒன்றும் குறிப்பு எழுதவில்லை. 1929ல் வரப்போகும் கமிஷனுக்குள் நமது சென்னைப் பார்ப்பனர்கள் செய்யும் முக்கிய வேலைகள் எல்லாம் இந்த வகுப்புவாரி உரிமையை ஒழிக்கப் பிரயத்தனப்படுவதல்லாமல் வேறில்லை. வகுப்புவாரி உரிமை வந்துவிட்டால் பிழைக்க முடியாத சில பார்ப்பனரல்லாதாருக்கும் இதைத் தவிர இப்போது வேறு வேலைகள் இல்லை. ஆகையால் இது சமயம் இந்து முஸ்லீம்கள் மிகுந்த ஜாக்கிறதையுடன் இருக்க வேண்டும்.

(குடி அரசு - கட்டுரை - 10.04.1927)

 
Read 45 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.