வேண்டுகோள் (குடி அரசு - வேண்டுகோள் - 10.04.1927)

Rate this item
(0 votes)

தஞ்சை ஜில்லாவில் சுற்றுப் பிரயாணம் செய்யும் நண்பர் சிற்சில இடங்களில் சிலர் படங்களை நெருப்பிற்கிரையாக்கியதாக ‘திராவிடன்’ பத்திரிகையில் காணப்படுகிறது. இதை நாம் பலமாய் ஆnக்ஷபிப்பதற்காக மன்னிக்க வேண்டுகிறோம். இம்மாதிரியான காரியம் நமக்கு ஒரு பலனையும் தராததோடு மனித சமூகத்திற்கு திருப்தி அளிக்காது என்றும் வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அக்குறிப்பிட்ட கனவான்களிடம் நமக்கு எவ்வித குரோதமும் இருக்க நியாயமில்லை. அவர்கள் மோசங்களையும் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும்தான் நாம் வெளிப்படுத்தி அதுகளுக்கு யோக்கியதை இல்லாமல் செய்ய வேண்டுமேயொழிய அந்த நபர்களிடம் விரோதம் கொள்வது நியாயமல்ல. ஆதலால் இனி அம் மாதிரியான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். தவிர கூட்டங்களில் கலவரம் செய்விப்பதும் ஒழுங்கல்லவென்றே நினைக்கிறோம். யார் வந்து எதை வேண்டுமானாலும் பேச நாம் இடங்கொடுக்க வேண்டும். நமக்கு ஆண்மையிருந்தால் அக்கூட்டத்திற்கு இடைஞ்சல் இல்லாமலும், கூட்ட முறைக்கு விரோதமில்லாமலும் கேள்வி கேட்கவோ, அக்கூட்டத்திலேயே பேச அனுமதி கேட்டு பேசவோ செய்யலாம். கேள்வி கேட்கவும் பேசவும் அனுமதி கிடைக்காவிட்டால் கண்ணியமாயிருந்து மறுநாள் கூட்டம் கூட்டி இதைப்பற்றி பேசலாம், கண்டிக்கலாம், சமாதானம் சொல்லலாம். இதுகள்தான் யோக்கியர்களுக்கு அழகு. அப்படிக்கில்லாமல் கூட்டத்தில் கலவரம் செய்வதென்பது கலவரம் செய்பவர்களையும் அவர்களது கொள்கைகளையும் பலக்குறைவாக்கி விடுகிறதோடு பேசுபவர்களுக்கு யோக்கியதையை உண்டாக்கிவிடுகிறது.

நாம் போன இடங்களிலும் இரண்டொரு இடங்களில் இம்மாதிரி சிலர் முயற்சித்தும் நாம் சௌகரியப்பட்ட இடங்களில் எல்லாவற்றிற்கும் இடங் கொடுத்து சமாதானம் சொன்னதில் கேட்க வந்தவர்கள் நமது கொள்கையை ஏற்றுக்கொள்ள நேர்ந்ததோடு நமது கொள்கைகளுக்கு முன்னிலும் அதிகமான பொது ஜன ஆதரவு கிடைத்ததேயல்லாமல் நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. கேள்விக்கு சமாதானம் சொல்ல முடியாதவர்கள் வெளியில் போய் பேசுவது என்பது கேவலமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். நமது கொள்கைகளும் தீர்மானங்களும் நம் மனதிற்கு உறுதி உள்ளதானால் யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லலாம். நமக்கே உறுதியில்லாமல் மற்றோரை ஏமாற்றுவதனால் மாத்திரம் பதில் சொல்லுவது கஷ்டம்தான். ஆகையால் மற்றவர்களைப் பற்றி கவலையில்லாமல் நமது கட்சியைப் பொறுத்த வரையிலாவது ஒழுங்காய் நடந்து கொள்ள வேண்டும். யார் வந்தாலும் தாராளமாய் பேச இடந்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - வேண்டுகோள் - 10.04.1927)

Read 36 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.