தேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும் குடி அரசு - சொற்பொழிவு - 03.04.1927)

Rate this item
(0 votes)

இன்றைக்கு 40, 50 வருடங்களுக்கு முன்னிருந்த நிலையை விட தற்பொழுது தேசம் மிகக் கேவல நிலையடைந்திருக்கிறது என்றும், காங்கிரஸ் மகாசபை, ராஜீயத் தலைவர்கள், முட்டுக்கட்டைத் திட்டம், சர்க்காருடன் யுத்தம் முதலியவை ஏற்பட்டதின் பலன் சர்க்காரின் வரியும் குடிகளின் வறுமையும் அதிகரித்ததேயொழிய வேறு நாட்டின் நலத்திற்கானவை ஒன்றும் ஏற்படவில்லையென்றும், தேசத்தின் பெயரையும் மகாஜனங்களின் பெயரையும் சொல்லிக் கொண்டு படித்தவர்களில் ஒரு வகுப்பார் தங்கள் சுயநலத்துக்கான சவுகரியங்களை ஏற்படுத்திக் கொள்ளவே ராஜீயக் கிளர்ச்சி செய்து வந்தார்கள் என்றும், நாடு வறுமையினின்றும் விடுபட அவர்கள் ஒன்றும் செய்யவேயில்லையென்றும், இந்நிலையில் ராஜீய சுதந்திரம் கிடைக்கினும் தேசம் விடுதலை பெற்று விட்டதாகக் கருதப்பட முடியாதென்றும், சுயராஜ்யம் ஏழைகளுக்கே மிக அவசியமானதென்றும், தனவந்தர்களுக்கும் உயர்ந்த அந்தஸ்திலிருப்பவருக்கும் சுயஆட்சியினால் இப்பொழுதுள்ளதை விட அதிகமான அநுகூலங்கள் ஏற்பட இடமில்லையாதலால் அவர்களுக்கு தேசவிடுதலையைப் பற்றிய கவலை ஏற்படாதென்றும், ஏழை மக்களின் நிலைமை மேன்மை படுத்துவதே சுயராஜ்யத்துக்கான வேலை செய்வதாகும் என்றும், காங்கிரஸ் இவ்விஷயத்தில் தலையிடாமல் படித்தவர்களின் ஸ்திதியையே உயர்த்தும் விஷயத்தில் பாடுபட்டு வந்ததாய் அறிந்த தீவிர காங்கிரஸ்வாதிகளும் சுயநலத்தியாகிகளுமான டாக்டர் நாயர் பெருமானும் தியாகராய பெருமானும் காங்கிரஸினின்றும் விலகி, நம்மவர்களின் முன்னேற்றத்தைக் கருதி, பார்ப்பனரல்லாதாரியக்கத்தை   ஆரம்பித்தனர் என்றும், மகாத்மா அவர்களும் தேசம் nக்ஷமமடைவதற்கான திட்டங்கள் காங்கிரஸில் இல்லாதது கண்டு கதர், மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு என்னும் உயரிய திட்டங்களைப் புகுத்தினார் என்றும், ஆயினும் காங்கிரஸ் தலைவர்கள் இவற்றில் கவலை கொள்ளாது சட்ட சபையே தங்கள் வேலைக்கான இடம் என்று இவற்றை அலட்சியம் செய்துவிட்டார்கள் என்றும் சொல்லியபின் இந்நிலையில் பிராமணரல்லாதார் செய்ய வேண்டிய கடமைகளைப் பேசியதாவது:-                  

100 - க்கு 97 உள்ள ஜன சமூகமாயிருந்தும் நம்மைக் குறிக்கச் சொந்தமான பெயரில்லாது, அற்ப எண்ணிக்கையுள்ள ஒரு வகுப்பினரின் பெயரால் “பார்ப்பனரல்லாதார்” என்று நம்மைப் பெயரிட்டுக் கொள்வது நம்மில் சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆம், கேவலம்தான்.   நம்மில் பல பிரிவுகளையும் வித்தியாசங்களையும் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து உண்டாக்கி நமக்கு ஒரு பொதுப் பெயரில்லாது செய்து விட்டனர்.   மேலும் இப்பெயரிட்டதற்கு வேறு காரணமுமுண்டு.   கொடிய நோய்களைப் போக்கும் மருந்துகளுக்கு அந்த நோயின் பெயராலேயே பெயரிடுவது வழக்கமும் பொருத்தமுமாயிருக்கிறது.   அது போன்றே நமக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் போக்கிக் கொள்ள ஏற்பட்ட இயக்கத்திற்கு இக்கஷ்டங்களுக்குப் பெரிதும் காரணமாயிருக்கும் வகுப்பினரின் பெயரைக் கொண்டு பெயரிட்டது மிகவும் பொருத்தமானதுதான்.

 

நிற்க, நம் கடமைகள் எவை என்பதை மதுரை மகாநாடு முடிவு செய்திருக்கிறது.   அவை காந்தி அடிகளின் நிர்மாணத் திட்டம் ஆகும். முதலாவதாக கதர் உற்பத்தியை ஆதரிப்பதோடு நாம் கதர் துணிகளையே உபயோகிக்க வேண்டும்.   இது தேசத்தின் வறுமை மிகுதியும் போக்குவது என்று எடுத்துக் காட்டியதோடு நாயக்கரவர்கள் பல திருஷ்டாந்தங்களின் மூலமாய் அதன் பொருளாதார லாபத்தை விளக்கினார்கள். இரண்டாவதாக `தீண்டாமை’ என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசுகையில், திரு நாயக்கரவர்கள், நாட்டின் தற்கால நிலைமைக்கு இதுவே முக்கிய காரணம் என்றும், மக்கள் யாவருக்கும் சம அந்தஸ்தும் சம உரிமைகளும் ஏற்பட வேண்டியது நியாயமும் அவசியமும் ஆகும் என்றும், தீண்டாமை ஏற்பட பார்ப்பனர்தான் காரணஸ்தர்கள் என்றும், ஆயினும் தற்சமயம் இது சகல வகுப்பாருக்குள்ளு முண்டென்றும் நாட்டின் நலங்கருதி யாவரும் ஏகோபித்துத் தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாரின் முக்கிய கடமையாகுமென்றும் சொன்னார்கள். மூன்றாவதாக, மதுவிலக்கு என்னும் விஷயமாய் பேசுவதால், குடியினால் விளையும் கேடுகள் பலவென்றும் அவை யாவரும் அறிந்ததே யென்றும் குடியை முற்றிலும் ஒழிப்பதற்கான முறைகளை அநுசரிக்க வேண்டியது நம்மவர்களின் கடமை என்றும் சொன்னார்கள். கடைசியாக புரோகிதர்களின் பகிஷ்கார விஷயமாய் நம்மைத் தங்களை விடத் தாழ்ந்தோர் என்று கருதும் பார்ப்பனப் புரோகிதர்கள் நம் வீடுகளில் நடக்கும் சுபா சுப காரியங்களுக்கு அழைத்தல் கூடாது என்றும் தங்கள் தங்கள் வகுப்பினருக்குள்ளேயே புரோகிதர்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

 

(குறிப்பு: 27-03-27 ஆம் நாள் விருதுப்பட்டியில் ஆற்றிய பொதுக்கூட்டச் சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 03.04.1927)

Read 18 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.