“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லித் திரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம் (குடி அரசு - கட்டுரை - 27.03.1927)

Rate this item
(0 votes)

நமது சென்னை அரசாங்கத்தின் 1925, 26 -வது வருஷத்திய நிர்வாக அறிக்கைபடி உத்தியோக விஷயங்களில் கீழ்கண்ட கணக்குகள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

நமது சர்க்கார் உத்தியோகம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது (1) கெஜட்டட் ஆபீசர் என்று சொல்லுவது. இது குறைந்தது சுமார் 250 ரூபாய்க்கு மேல்பட்டு 5500 ரூபாய் சம்பளம் வரையில் வாங்கக் கூடியது. இரண்டாவது 100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை வாங்கக் கூடியது. மூன்றாவது 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரையில் உள்ளது. ஆகவே, இந்த மூன்று உத்தியோகத்திலும் பார்ப்பனர்கள் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும், பார்ப்பனரல்லாதார் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும் கணக்கு போட்டிருக்கிறார்கள். இவ்வுத்தியோகங்களிலும் பார்ப்பனர்களே ஏகபோகமாய் அனுபவித்து வரும் நீதி இலாகா அதாவது முனிசீப், சப்ஜட்ஜி, ஜட்ஜிகள் முதலிய உத்தியோகங்களைப் பற்றி குறிப்பிடவே இல்லை. அதில்லாமலே உள்ள உத்தியோகங்களுக்கு சர்க்கார் குறிப்புப்படி எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நம்மில் நம்மவர்களுக்கும் விகிதாச்சாரம் உத்தியோகம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்பவர்கள் வகுப்பு உரிமைக்காரரா? அல்லது வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் வயிற்று சோற்று உரிமைக்காரரா? என்பது வெளிப்பட்டுவிடும்.

கணக்கு விபரம்:-

  250க்கு மேல்பட்டு 5500 ரூபாய் வரை
சம்பளம் பெறக்கூடியவர்கள்
100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை சம்பளம் பெறக்கூடியவர்கள்  35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரை சம்பளம் பெறக்கூடியவர்கள் 
பார்ப்பனர் 402 3409 8197
பார்ப்பனரல்லாத
இந்துக்கள்
215 1901 5238
தாழ்ந்த வகுப்பார் - 2 54
முகமதியர்கள் 53 323 1139
கிறிஸ்தவர்கள் 109 456 643

 

100-க்கு மூன்று வீதம் உள்ள பார்ப்பனர் மொத்தம் = 12008

100-க்கு 97 வீதம் உள்ள பார்ப்பனரல்லாதார் எல்லோரும் சேர்த்து = 10133

 

இவற்றுள் 100-க்கு 25 வீதம் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பார் = 56

 

இதோடு முனிசீப்பு ஜட்ஜிகளின் கணக்கு சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதையும், இந்தக் கணக்கை வெளியிட்டவர்கள் அந்தக் கணக்கையும் வெளியிட ஏன் பயப்படுகிறார்கள் என்பதையும், சுயராஜ்யம் வந்தாலும் இந்த கணக்குதான் ஏற்படுமா அல்லது வேறு கணக்கு ஏற்பட வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்பதையும் யோசித்துப் பார்த்து, வகுப்புரிமை வகுப்புவாதம் வேண்டாம் என்று சொல்லும் “தேசீயவாதிகள்” வகுப்புவாதம் அல்லது வகுப்பு உரிமை தவிர வேறு வழிகளால் முக்கியமாய் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் சமத்துவமடைய முடியுமா? என்பதையும், உத்தியோகம் பார்ப்பதும் “சுயராஜ்ஜியத்தில்” ஒன்று அல்லவா என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 27.03.1927)

தஞ்சை ஜில்லா போர்டு

தஞ்சை ஜில்லா போர்டின் ஆதரவில் நடைபெறும் பள்ளிக் கூடங்களில் 25 ஆதிதிராவிடர் பிள்ளைகளுக்கு உண்டி உடை கொடுத்து இலவசமாய்க் கல்வி போதிக்க ஏற்பாடு செய்திருப்பதாகக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.   பார்ப்பனரல்லாத பிரசிடெண்டு வந்ததினால்தான் இவ்வித சௌகரியம் செய்ய முடிந்தது.   இதற்காக போர்டாரைப் பெரிதும் பாராட்டுகிறோம்.

(குடி அரசு - பெட்டிச் செய்தி - 27.03.1927)

 
Read 21 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.