“திராவிடன்” (குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.03.1927)

Rate this item
(0 votes)

“திராவிடன்” பத்திரிகையை நாம் ஏற்று அதற்கு பத்திராதிபராயிருந்து “குடி அரசு” கொள்கையின்படி நடத்தலாமா என்கிற விஷயத்தில் பொது ஜனங்களின் அபிப்பிராயத்தை அறிய “வேண்டுகோள்” என்று தலையங்கமிட்டு ஒரு விண்ணப்பம் 6.3.27 தேதி “குடி அரசின்” தலையங்கமாக எழுதி இருந்தோம்.   பொறுப்புள்ள நண்பர்களை நேரிலும் கலந்து பேசினோம்.   அதற்கு இதுவரை ஐந்நூற்றுச் சில்லரை கனவான்கள் தனி முறையிலும் 7, 8 சங்கங்களும் 3, 4 பொதுக் கூட்டங்களும் தீர்மான மூலமாகவும், தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை தெரிவித்திருக்கிறார்கள். அவற்றுள் 500 பேர் வரையிலும் மற்றும் சங்கங்களும் பொதுக்கூட்டங்களும் “திராவிடனை” ஏற்றுக் “குடி அரசு” கொள்கைப்படி நடத்தும்படியும் 20 பேர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக அதாவது நிபந்தனை பேரில்தான் நடத்த வேண்டும் என்றும், உடல் நலம் கெட்டு போகும் என்றும், “குடி அரசு” குன்றி விடும் என்றும், வேறு பெயர் மாற்ற வேண்டும் என்றும், பிரசாரத்திற்கு போதுமான காலம் இல்லாமல் போய் விடுமென்றும், “தமிழ்நாடு”, “திராவிடன்” ஆகிய இரண்டு தமிழ் தினசரிக்கு நமது நாடு இடங்கொடுக்குமா என்றும், “ஜஸ்டிஸ்” கட்சியாரை நம்பி இறங்கினால் அவர்கள் “குடி அரசு” கொள்கைக்கு மனப் பூர்வமாய் கட்டுப்பட்டு நடப்பார்களா என்றும், ஜஸ்டிஸ் கொள்கை ஏற்றுக் கொள்ள வேண்டி வந்துவிட்டால் நமது முயற்சிகள் பலனில்லாமல் போகுமென்றும் “குடி அரசு”, “திராவிடன்” ஆகிய இரண்டு பத்திரிகை நடத்தினால் பணக் கஷ்டத்திற்காக ஊர் ஊராய் பிச்சை கேட்டுக் கொண்டு திரிய வேண்டிவரும், அப்படி ஆனால் நமது பிரசாரத்திற்கு மதிப்பு குறைந்து போகுமென்றும் ஆகிய பல விஷயங்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

இவற்றில் நடத்தும்படி சம்மதம் கொடுத்தவர்கள் எழுதியிருப்பதைப் பற்றி அதிகம் எழுதவேண்டியதில்லை.   ஏனெனில் அது அவ்வளவும் இந்திரனே சந்திரனே, கடவுளே, ராமனே, கிருஷ்ணனே.......... என்று பலவாறாக புகழ்ந்தும், உதவி புரிவதாகவும், சுமார் 400 சந்தாதாரர்கள் போல் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தும், 4, 5 கனவான்கள் பிரதிபிரயோஜனமில்லாமல் பத்திரிகைக்கு உழைப்பதாகவும், தங்கள் தங்களால் கூடுமானவரை சந்தா சேர்த்து அனுப்புவதாகவும், திரவிய சகாயம் செய்வதாகவும், திராவிடனை ஒப்புக் கொண்டால் ஒழிய வேறு மார்க்கமில்லை என்றும், இம்மாதிரியாக அளவுக்கு மீறி புகழ்ந்தும் உற்சாகம் காட்டியும் எழுதி இருக்கிறார்கள். இவற்றில் எடுத்துக் கொள்ளும்படி எழுதிய 500 நண்பர்களின் அபிப்பிராயத்தைவிட நிபந்தனையாகவும் விரோதமாகவும் எழுதின 20 கனவான்கள் அபிப்பிராயத்திற்கு அதிகம் மதிப்புக் கொடுத்து ஒரு வார காலம் இதே சிந்தனையாய் இருந்து யோசித்து பார்த்ததில் அவர்கள் எழுதியிருப்பதில் பெரும்பாகம் யோசிக்க வேண்டிய விஷயமே இருந்தாலும், வேறு பல கஷ்டங்கள் இருந்தாலும் இந்த சமயத்தில் நமது கொள்கைக்கு ஒரு தினசரி இல்லாதிருப்பது சரியல்ல   என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகி விட்டது.

 

  பணக் கஷ்டத்தைக் கூட நாம் அவ்வளவு பெரிதாய் நினைக்கவில்லை; எப்படியாவது நடத்தலாம் என்றாலும் மற்றபடி உள்ள கஷ்டங்கள் உண்மையானதுதான் என்றாலும் வேறு என்ன செய்வது என்று யோசித்தே சில நிபந்தனையின் மேல்   ஒப்புக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கே வந்து அந்நிபந்தனைகளையும் ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களுக்கு எழுதப் போகிறோம். அந்தப்படி அவர்கள் ஒப்புக் கொண்டார்களானால் ஏற்று கொஞ்ச காலத்திற்கு நடத்தலாம் என்றே இருக்கிறோம். மற்றபடி ஊக்கங்காட்டி எழுதிய நண்பர்கள் தயாராக சந்தாதாரர்களைச் சேர்த்து வைக்கும்படியாக வேண்டுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.03.1927)

 
Read 35 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.