பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்தது! (குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 06.03.1927)

Rate this item
(0 votes)

“பார்ப்பன குருமாருக்கு” கொடுத்து வந்த வரியும் ஒழிந்தது. மதுரை பிராமணரல்லாத மகாநாட்டில் தோன்றிய தீர்மானங்களை நம் சகோதரர்கள் செய்கையில் நடத்தி வருவதை நம் “திராவிடன்” “குடியரசு” பத்திரிகைகள் வாயிலான் அறிந்து மகிழ்ச்சியடைகிறோம். நிற்க நம் மகாநாட்டிற்கு உப காரியதரிசியாய் விளங்கி நமக்கு அல்லும் பகலும் உழைத்தவரும், உழைக்கின்றவருமான திருவாளர்.டி. கொண்டல் நாயுடு அவர்கள் அன்னையார் விண்ணவர்க்கு விருந்தாயது பற்றி 19.2.27 குண்ணத்தூரில் தமதில்லத்தில் சடங்குக் கிரியைகள் நடைபெற்றன. இக்கிரியைகளுக்கு மதுரையினின்று திருவாளர்கள் ஐகோர்ட்டு வக்கீல் பி. ரங்கசாமி நாயுடு அவர்கள் பி.ஏ.பி.எல்., எஸ். கூடலிங்கம் பிள்ளை அவர்கள், பெஞ்ச் கோர்ட்டு மாஜிஸ்திரேட் சின்ன சாமி ராஜா அவர்கள், பென்ஷன் பட்டாளம் சுபேதார் சுப்பா நாயுடு அவர்கள், ஜவுளி வியாபாரம் சின்னசாமி நாயுடு அவர்கள், ஆத்தூர் சின்னசாமி நாயுடு அவர்கள், நிலச்சுவான்தார்கள் அ.சு. சீனிவாசலு நாயுடு அவர்கள், அ.சு. அக்கையசாமி நாயுடு அவர்கள் மற்றும் கிராமங்களினின்று அநேக நில வளமுடையோர்களும் சுமார் 750 பேர்கள் வரை காணப்பட்டனர்.

திரு. கொண்டல் நாயுடு அவர்கள் பிறப்பிடம் திருமங்கலம் தாலூகா குண்ணத்தூர் பரம்பரையான பெருங்குடும்பத்தில் பிறந்தவர்; நிலச்சுவான்தார். இவருக்கு இந்நாட்டில் மிக்க செல்வாக்குண்டு. இச்சீரியருடன் பிறந்தார் இவருடன் நால்வர். அவர்கள் வைணவ மதத்தில் சாலவும் பற்றுடையவர்கள். அவர்களும் இவருடைய விருப்பத்திற்கிணங்கி பிராமணனைப் புறக்கணித்தும் தம் அன்னையாரின் கிரியைகளை செவ்வனே நடத்தியதுடன் வந்திருந்த ஏனையோரும் இதனையே பின்பற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார்கள். அத்துடன் ஸ்ரீரங்கம் அண்ணங்கார் சுவாமி குருக்களுக்கு வரி கொடுப்பதை நிறுத்துதல் செய்யவேண்டுமென தீர்மானித்தபின் வந்திருந்தோரனைவரும் உணவுண்டு தாம்பூலம் பெற்றுச் சென்றார்கள் என்று ஒரு நிருபர் வரைகிறார்.

 

குறிப்பு : மதுரை மஹாநாட்டின் தீர்மானத்தையொட்டி குண்ணத்தூர் ஸ்ரீமான் கொண்டல் நாயுடுகாரவர்கள் தமது அன்னையாரின் இறுதிக் கிரியைகளை பார்ப்பனிய சம்பந்தமின்றி சிறப்பாக நடத்தியது பாராட்டத்தக்கது. இதோடு மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியென்னவென்றால் தங்கள் மரபுக்கு பரம்பரை ஆச்சாரியர் என்று பேர் வைத்துக் கொண்டு வரும் வம்சவழி வந்த ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ அண்ணங்கார் ஸ்வாமிகளுக்கு குரு காணிக்கை கொடுத்தல் கூடாது என்று அன்று தீர்மானஞ் செய்து கொண்டமையேயாம். ஸ்ரீமான் அண்ணங்கார் சுவாமிகள் பிராமணர் ஆதலால் கொடுத்தல் கூடாது என்பதற்காக நாம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஆச்சாரியர்கள் என்று பேர் வைத்துக் கொண்டு அணுவளவேனும் நலன் இல்லாவிட்டாலும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையையே வேரோடு அறுப்பதாகிய காரியங்களுக்கு அடிபணிந்து பொருள் கொடுக்கும் ஈனத்தனம் ஓட்டமெடுக்குங் காலம் ஆரம்பமாகிவிட்டதற்காகவே மகிழ்ச்சியடைகின்றோம்.

 

இந்தப் பார்ப்பனர் ஆண்டுதோறும் பிள்ளைக்குக் கலியாணம், பெண்ணுக்குச் சாந்தி முகூர்த்தம். வீடு இடிந்து விட்டது என்பதாக ஏதாவதொரு சாக்குச் சொல்லிக்கொண்டு கிராமங்களுக்கு வந்து பணங்கொடுக்காவிட்டால் சாபங் கொடுத்துவிடுவேன் என்று பாமர மக்களை மிரட்டி கொள்ளையடித்துக் கொண்டு போவதைத் தவிர இவர்கள் சாதிப்பதொன்றுமில்லை. பாங்கில் காரியம் பார்க்கும் ஒரு ஐய்யங்காரும் காபி கிளப் வைத்து எச்சில் பாத்திரம் கழுவும் ஒரு ஐய்யங்காரும் கோயமுத்தூர் ஜில்லாவில் கம்மவார் வசிக்கும் கிராமங்களில் துவாதச நாமத்தோடும் பாத குறட்டோடும் ஆசாரிய வேடம் பூண்டு வந்தமையாமறிவோம். ஆதலால் இத்தகையோர்களுக்கு நாம் ஏன் பொருள் கொடுத்து காலில் விழுந்து சுயமரியாதை கெட்ட அடிமைகளாக வேண்டும்? ஸ்ரீமான் கொண்டல் நாயுடுகாரவர்கள் செய்த இச்சுயமரியாதை தீர்மானத்தை மற்ற பார்ப்பனரல்லாதாரும் கடைபிடித்தொழுகுவாராக.

(குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 06.03.1927)

 
Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.