வருணாச்சிரம தர்மம் (குடி அரசு - கட்டுரை - 13.02.1927)

Rate this item
(0 votes)

நமது பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்காக வேண்டிச் செய்த சூழ்ச்சியில்   “வருணாச்சிரம தருமம்” என்பதாக ஒரு பிரிவை உண்டு பண்ணி மக்களுக்கும் பிறவியிலேயே உயர்வு தாழ்வைக் கற்பித்துத் தாங்கள் கடவுள் முகத்திற் பிறந்தவர்கள் என்றும், உயர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கடுத்தவர்கள் சிலர் கடவுளின் தோளிற் பிறந்தவர்கள் க்ஷத்திரியர்களென்றும் மற்றும் சிலர் கடவுளின் தொடையிற் பிறந்தவர் வைசியர்களென்றும், ஆனால் கலியுகத்தில் க்ஷத்திரியரும் வைசியரும் இல்லை என்றும் தங்களைத் தவிர மீதியுள்ளவர்களெல்லாம் கடவுளின் பாதத்தில் பிறந்தவர்கள் `சூத்திரர்கள்’ என்றும், அச்சூத்திரர்கள் தங்களது வைப்பாட்டி மக்கள், தங்களது   அடிமைகள், தங்களுக்குத் தொண்டு செய்வதற்கென்றே கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுவதோடு இந்த சூத்திரர்களுக்கு எந்தவித சுதந்திரமுமில்லை என்றும், அவர்கள் சொத்து, சுகம் வைத்துக் கொள்ளுவதற்குக் கூட பாத்தியதையில்லாதவர்களென்றும், அப்படி மீறி வைத்திருந்தால் அவர்களிடமிருந்து பிராமணர்கள் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாமென்றும் இன்னும் நினைப்பதற்கே சகிக்க முடியாததான அநேக இழிவுகளையெல்லாம் கற்பித்து இவைகளுக் காதாரம் வேதத்திலேயே இருக்கிறதென்றும், வேதம் கடவுளால் சொல்லப் பட்டதென்றும், அவ் வேதத்தை தாங்கள்தான் படிக்கவேண்டுமென்றும், மற்றவர்கள் படிக்கக்கூடாது கேட்கக் கூடாதென்றும், அப்படிப் படித்தால் படித்தவர்கள் நாக்கையறுப்பதோடு கேட்டவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி அவர்கள் மனதைப் பிளந்து கொன்றுவிட வேண்டுமென்பது வேதத்தின் கட்டளையென்றும் சொல்லுவதோடு அதற்கு வேண்டிய ஆதாரங்களையும் செய்து வைத்து நம்மைத் தாழ்த்தி, இழிவுபடுத்தி வருவதைப் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம்.  

ஆனால், சில பார்ப்பனர்கள் இப்படியெல்லாம் இல்லையென்றும் இது வேண்டுமென்றே பார்ப்பனர்கள் பேரில் துவேஷத்தைக் கற்பிக்க எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறதென்றும் உயர்வு தாழ்வு வித்தியாசங்கள் இல்லையென்றும் சொல்லுவதும், பார்ப்பனரல்லாதாரில் சிலர் தாங்கள் வருணாசிரம முறைப்படி சூத்திரரல்லவென்றும், க்ஷத்திரியரென்றும் மற்றும் சிலர் வைசியர் என்றும் சொல்லிக் கொண்டு வருணாசிரம தர்மத்தை ஆதரிப்பதும், சிலர் தங்களுக்கு வர்மா, குப்தா என்று பெயர் வைத்துக் கொள்ளுவதும் பூணூல் போட்டுக் கொள்ள முக்கியமாய் வேளாளர்கள், தாங்கள் பூவைசியரென்றும் தாங்கள் சூத்திரரில் அப்படிப்பட்டவர்கள் அல்லரென்றும் சொல்லிக் கொள்ளுவதையும் பார்த்து வருகிறோம்.   இதுகள் நமது பார்ப்பனர்கள் அவரவர்களுக்குத் தக்கபடி சொல்லி ஏமாற்றுவதை நம்பி மோசம் போவதே அல்லாமல் வேறல்ல.   இதோடு நம்மைப் பற்றி குற்றம் சொல்லுவதையும் கண்டு வருகிறோம்.

 

  நமது கூற்றுக்கு ஆதாரமாக சமீபத்தில் சென்னையில் இரண்டு முக்கியப் பார்ப்பன பிரசங்கங்கள் நடந்திருக்கின்றன.   அவற்றில் ஒன்று சென்ற மாதம் 22ந்தேதி சனிக்கிழமை சங்கராச்சாரியார் மடத்தில் பிராமண சபையின் ஆதரவில் வேதம் என்பது பற்றிப் பிரசங்கிக்க ஒரு கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது.   இதற்கு ஸ்ரீமான் டி. ஆர். ராமச்சந்திரய்யரே அக்கிராசனம் வகித்திருக்கிறார். அதில் வருணாச்சிரம தருமம் வேதத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறதென்றும், அதோடு சநாதன தர்மமும் அதில் சொல்லி இருக்கின்றதெனவும் இவைகளை நன்கறிந்து காப்பாற்ற வேண்டும் எனவும் பேசி இருக்கிறார்.   இது ஜனவரி 27-ந் தேதி மித்திரனில் பார்க்கலாம்.

 

  மறுபடியும் பிப்ரவரி 7-ந்தேதி திங்கட்கிழமை கும்பகோணம் சங்கராச்சாரியார் மடத்து ஆஸ்தானம் ஸ்ரீமான் வெங்கிட்டராம சாஸ்திரியார் சநாதன தர்மப் பிரசாரமாக வருணாசிரம தர்மம் என்று ஒரு பிரசங்கம் செய்திருக்கிறார். அதில் இக்கலியுகத்தில் இரண்டே வருணங்கள்தான் இருக்கின்றன என்றும் அது பிராமணர், சூத்திரர் என்கிற இரண்டுதான் என்றும் ஷத்திரியர்களும், வைசியர்களும் கலியுகத்தில் இல்லையென்றும் வருணம் என்பது ஜாதி என்றும் தற்காலத்திற்கு பராசரஸ் மிருதிதான் ஆதாரமென்றும் பேசி இருக்கிறார்.   இது பிப்ரவரி மாதம் 8 ந் தேதி மித்திரனிலிருக்கிறது.   ஆகவே பார்ப்பனர்கள் நம்மை இழிவுபடுத்துவதற்காக வைத்திருக்கும் சங்கங்கள் மோட்ச சாதனங்களாகப் போய் விடுகின்றன.   நம்மைத் தாழ்த்திப் பேசும் பேச்சுக்கள் சநாதன தர்மமாகி விடுகின்றன. நாம் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஏற்படுத்தப்படும் சங்கங்கள் தேசத் துரோக சங்கங்களாகவும், அதில் பேசும் பேச்சுக்கள் பிராமணத் துவேஷமாகவும் போய்விடுகின்றன.   இதிலிருந்தாவது வருணாசிரம தர்மப் பயித்தியம் பிடித்தவர்களுக்கும் பார்ப்பனர்களின் வால்பிடித்துத் திரிந்து ஷத்திரியர், வைசியர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறவர்களுக்கும் புத்தி வருவதோடு நம்மைப் பற்றி முட்டாள் தனமாய் நினைத்துக் கொண்டிருக்கும் தப்பெண்ணங்களும் மாறக்கூடுமென்றும், மற்றவர்களை தங்களிலும் தாழ்ந்தவர்களென்றும் நினைத்துக் கொண்டிருக்கும் மடமையும் மாறி மக்கள் எல்லோரும் சமமானவர்களென்று நினைக்கக் கூடும் என்றும் நாம் எதிர்பார்ப்பதோடு ஒரு வகுப்பாரைத் தங்களைவிட   தாழ்ந்தவர்கள் என்று எண்ணும் கொள்கையை ஒப்புக் கொள்வதால் மற்றொரு வகுப்பாருக்கு தாங்கள் வைப்பாட்டி மக்களாக வேண்டியிருப்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

(குடி அரசு   - கட்டுரை - 13.02.1927)

 
Read 69 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.