பத்திரிகைகள் (குடி அரசு - தலையங்கம் - 30.01.1927)

Rate this item
(0 votes)

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கென்று வெகு காலமாகவே அதாவது ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே மதம், வேதம், கடவுள், மோக்ஷம் என்னும் பெயர்களால் பலவித ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் தாங்களே உயர்ந்தோர்களாயிருந்து கொண்டு நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வயிறு வளர்ப்பதல்லாமல், அரசியல், சுயராஜ்யம், தேசீயம், தேசீயப் பத்திரிகை, தேச சேவை என்கிற பெயர்களாலும் பலவித இயக்கங்களையும் பத்திரிகைகளையும் உண்டாக்கிக் கொண்டு அதன் மூலமும் நாங்களே தேசபக்தி உள்ளவர்கள் என்றும், தங்களுடைய பத்திரிகைகளே தேசீயப் பத்திரிகைகள் என்றும் நமது பணத்திலேயே விளம்பரப்படுத்திக் கொண்டு நம்மை தாழ்த்தி மிதித்து மேலேறி பல வழிகளிலும் வயிறு வளர்க்க ஆதிக்கம் தேடி வைத்துக் கொண்டு விட்டார்கள். இவைகளில் எல்லாவற்றையும் விட நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகைகளின் செல்வாக்கு நம் நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக் கொண்டிருக்கிறது.

பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தங்களைப் போதிய அறிவுள்ள மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் அப்பத்திரிகைகளின் மூலம் ஏமாறுவதும் அப்பத்திரிகைகளின் மூலம் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாவதும் வளர்ந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் இப்பார்ப்பனக் கொடுமை முற்றுகையிலிருந்தும் அன்னிய ஆட்சிக்கொடுமை முறைகளிலிருந்தும் தப்ப வேண்டுமானால் இப்பார்ப்பனப் பத்திரிகைகளைப் பார்த்து ஏமாறுவதையும் அதுகளுக்கு அடிமைகளாவதையும் ஒழித்தாலல்லது கண்டிப்பாய் முடியவே முடியாத நிலைமையில் இருக்கிறோம். அவைகள் செய்யும் அக்கிரமங்களை நினைக்கும்போது நமது மக்கள் மனிதர்கள்தானா - மனிதப் பிறவிதானா - இப்பிறப்புக்கு மானம், வெட்கம் என்கிற தன்மைகள் இருக்கின்றனவா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.

 

நமது கெடுதிக்காகவே இப்பார்ப்பனப் பத்திரிகைகள் நடந்து வருவதையும் பார்ப்பன ஆதிக்கப் பிரசாரமே அதன் கொள்கைகளாக இருப்பதையும் நாம் சந்தேகமற மனப்பூர்ணமாய்த் தெரிந்திருந்தும் இப்பிரசாரங்களுக்கு பணம் கொடுத்து நாம் நாசமாய்ப் போவதற்காக அப்பத்திரிகைகளையே வாங்கிப் படிப்பதென்றால் யாராவது நம்மை அறிவு, புத்தி, ஒழுக்கம், மானம், வெட்கம், சுயமரியாதை உள்ள சமூகம் என்று சொல்லக்கூடுமா? என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. பிறரைக் குற்றம் சொல்லும் போது மாத்திரம் “கள்ளு, சாராயம் குடிப்பது கெடுதி என்று தெரிந்திருந்தும் மறுபடியும் அதைக் குடிக்கிறார்களே என்ன புத்தி கெட்ட ஜனங்கள், மானங்கெட்ட ஜனங்கள்” என்கிறோம். ஆனால் அந்தப் புத்தியும் மானமும் நமக்கு இருக்கிறதா என்பதைப் பார்ப்பவர்கள் நம்மில் 1000க்கு ஒருவரைக் கூடக் காணோம்.

 

பார்ப்பனப் பத்திரிகைகள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு மாத்திரமில்லாமல் நம்முடைய இழிவுக்கும், தாழ்மைக்கும், அழிவுக்கும் நடத்தப்படுகிறது என்பதை அறிந்திருந்தும் அதைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பவர்களுக்கு புத்தியும், மானமும் இருக்கிறதா என்பதை கவனிப்பதில்லை. உதாரணத்திற்காக ஒரு பத்திரிகையை எடுத்துக் கொள்வோம்; சாதாரணமாக ‘சுதேசமித்திரன்’ என்னும் பத்திரிகை பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாருடைய பணத்தையே மூலதனமாகக் கொண்டது. அதன் பத்திராதிபர்கள், உப பத்திராதிபர்கள், மானேஜர்கள் முதலியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். அவர்கள் சம்பளமோ மாதம் 1500, 1000, 800, 600 இப்படி அனுபவிக்கிறார்கள். இப்பத்திராதிபர் பார்ப்பனரல்லாதாரை ஒழித்து பார்ப்பன ஆதிக்கம் தேடுகிற பிரசாரம் தவிர வேறு வேலை ஏதாவது செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? நம்மை நாமே கெடுத்துக்கொள்ள நமது பணமே உதவ வேண்டுமா? அதற்கு விளம்பரம் கொடுப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்களே! அதை வாங்கிப் படித்துக் கெடுகிறவர்கள் பார்ப்பனரல்லாதார்களே! இதில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா அல்லது இப்பார்ப்பனர்கள் எதையாவது ரகசியமாய்ச் செய்கிறார்களா? நேருக்கு நேராக நம்மைப் பார்த்து “நீங்கள் முட்டாள்கள் உங்களுக்கு மானம், வெட்கம், சுயமரியாதை, புத்தி, அறிவு இதுகள் கிடையாது. ஆதலால் நாங்கள் உங்களை ஏமாற்றுகிறோம். உங்களால் என்ன செய்ய முடியும்! உங்களில் யாரோ சிலர் கத்தினால் கத்தட்டும் எங்களுக்கு கவலை இல்லை. இதற்காக நாங்கள் கொஞ்சமும் பயப்பட்டு எங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. உங்களிலேயே சில அயோக்கியர்களையும் முட்டாள்களையும் நாங்கள் சுவாதீனம் செய்து கொண்டு உங்கள் கத்தல்களை ஒழிக்க எங்களுக்குத் தெரியும். ஒரு கை பார்க்கலாம் வாருங்கள்” என்று தைரியமாகச் சொல்லுகிறார்கள்; இதற்கொன்றும் மார்க்கமில்லையா என்றுதான் கேட்கிறோம்.

 

‘குடி அரசு’ தோன்றிய பிறகு ‘மித்திரன்’ சுமார் 2000 சந்தாதாரர்களுக்கு மேலாகவே இழக்க நேரிட்டும் இன்னமும் பார்ப்பனரல்லாதாரிலேயே பல பங்குக்காரர்களை ரகசியமாக சேர்த்து பணம் சம்பாதிக்கப்பட்டு வருகிறது. நம்மவர்கள் முன்னேற்றத்திற்கென்றே நடத்தப்பட்டு வருகிற பத்திரிகைகளை கையில் தொடுவதற்கும் நமது மக்கள் அஞ்சுகிறார்கள் என்றால் நமது யோக்கியதையை என்னவென்று சொல்லுவது. சாதாரணமாக “திராவிடன்’’ பத்திரிகை எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வருகிறது என்பதை யாராவது உணருகிறார்களா? அது யாருடைய நன்மைக்கு நடத்தப்படுகிறது என்பதை யாராவது அறிகிறார்களா?

யாரையாவது போய் “ஐயா திராவிடன் பத்திரிகை தங்களுக்கு வருகிறதா? இல்லையானால் ஒன்று வரவழையுங்கள். அதைப் படித்து பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும் அதனால் நம்மவர்களுக்கு ஏற்படும் கஷ்டத்தையும் உணர்ந்து அதிலிருந்து தப்புவதற்கு வேண்டியது செய்யுங்கள்” என்றால் “திராவிடனா அதிலென்ன இருக்கிறது? அதைப் பார்த்தாலே என்னமோ போல இருக்கிறதே, அந்தப் பெயரே நமக்குப் பிடிக்கவில்லையே” என்று சொல்லிவிடுகிறார்கள். இதை தங்களுக்கு தோன்றுகிறபடி வாஸ்தவமாகத்தான் சொல்லுகிறார்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம். கட்டின பெண் ஜாதியை விட்டு தாசி வீட்டுக்குப்போய் சொத்தைப் பாழாக்கி வியாதி கொள்ளுகிறவர்களைப் பார்த்து, “ஏனப்பா கட்டின பெண் ஜாதியை வீட்டில் வைத்து விட்டு தாசி வீட்டிற்குப் போய் சொத்தையும் பாழாக்கி வியாதியும் கொள்ளுகிறாய்” என்றால் மேல்கண்ட மாதிரிதான் பதில் சொல்லுகிறான். அதாவது, “வீட்டில் என்ன இருக்கிறது? அவளைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை. அவள் நடந்து கொள்ளுகிற மாதிரியே மனத்திற்கு அசிங்கமாகப்படுகிறது. கட்டிலுண்டா? மெத்தையுண்டா? வாசனையுண்டா? கடிப்பதுண்டா? கிள்ளுவதுண்டா? சட்டி பானை கழுவுகிறவள் தானே” என்று ஆரம்பித்து விடுகிறானேயல்லாமல் இதெல்லாம் எதற்காகச் செய்யப்படுகிறது. பின்னால் நம்முடைய கதி என்னாகும் என்கிற கவலையே இல்லாமல் அறிவீனமாய் நடந்து கொள்ளுகிறான்.

 

அப்படிபோல் நம்மை மயக்கி, ஏய்த்து, நம்மைப் பாழாக்கி கொள்ளை கொள்ள நடக்கும் பத்திரிகைகள் ஏமாறத் தகுந்த மாதிரியாகத்தான் நடத்தப்படும். ஒருநாள் பூரா படிப்பதற்கும் விஷயமிருக்கலாம். ஆனால் அது பெரும்பாலும் என்ன விஷயம்? நம்மைக் கழுத்தறுக்கும் விஷயமும் பொழுது போக்கு விஷயமுமாகத் தானே இருக்கும். ஆதலால் மானமுள்ள மக்கள் தமது சொந்தப் பெண்டை அன்னியன் குற்றம் சொல்லும்படியாகவும், கஞ்சிக்குத் திண்டாடும்படியாகவும் விடாமல் காப்பதை எப்படி தமது கடமையாய் நினைப்பார்களோ அதுபோல் ‘திராவிடன்’ பத்திரிகையை ஆதரிப்பதோடு கட்டின பெண்டை தெருவில் அலையவிட்டு தாசி வீடு காத்து திரிவதுபோல் ‘திராவிடனை’ விட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளைக் கட்டி அலைவதை மறந்து நமது மானத்தைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்பதாக தாழ்மையோடு கேட்டுக் கொள்ளுகிறோம். இந்த மார்க்கம் தான் பாமர மக்களைக் காப்பாற்றவும், நமது மக்கள் எல்லோருக்கும் சுயமரியாதை ஏற்படவும் சரியான மார்க்கமாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 30.01.1927)

Read 41 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.