தஞ்சை ஜில்லா பிரசாரம் - 1 குடி அரசு - சொற்பொழிவு - 30.01.1927

Rate this item
(0 votes)

அக்கிராசனாதிபதியே! சகோதரி சகோதரர்களே!

நான் இதற்கு முன் இந்தப் பக்கங்களுக்கு எத்தனையோ தடவை வந்திருக்கிறேன்.  ஒரு காலத்திலும் இதுபோன்ற மக்கள் உணர்ச்சியும் எழுச்சியும் கூட்டமும் வரவேற்பு உபசாரம் முதலியதுகளும் நான் கண்டதே இல்லை.  நம்முடைய எதிரிகள் “வகுப்பு இயக்கங்கள் மாண்டு விட்டன”, “வகுப்புப் போராட்டங்கள் குழிதோண்டி புதைக்கப் பட்டன”, “பார்ப்பனரல்லாதார் கட்சி ஒழிந்து விட்டது”, “இனி நம் இஷ்டம்போல் கொள்ளை அடிக்கலாம்” என்று சொல்லுகிற காலத்தில் எப்போதும் இருந்ததை விட எண் மடங்கு அதிகமாய் நமது கட்சியினுடையவும், இயக்கத்தினுடையவும் உணர்ச்சி வலுத்து வருகிறதுடன் நமது கொள்கையை ஒப்புக்கொள்ளுவதாக புதிது புதிதான இடங்களில் இருந்து ஆதரவுகள் கிடைத்து வருகின்றன.

இன்றைய தினம் எனக்குச் செய்யப்பட்ட வரவேற்புகளும், ஊர்வலங்களும், வரவேற்பு உபசாரப் பத்திரங்களும் அதன் மூலம் காட்டிய உணர்ச்சிகளும், ஊக்கங்களும் கண்டிப்பாக எனக்காக அல்ல என்பதையும் அது  களுக்கு நான் கொஞ்சமும் தகுதியுள்ளவன் அல்ல என்பதையும் எல்லோரையும் விட நான் நன்றாய் அறிவேன். அதோடு நான் அதுகளுக்கு ஒரு சிறிதும் அருகனல்ல என்பதையும் உறுதியாயும், திரிகரண சுத்தியாயும் சொல்லுவேன்.  ஆனால்,  பின்னை எதற்கு நான் ஏற்றுக்கொண்டேன் என்று கேட்பீர்களானால், நமது சுயமரியாதைக்காக நான் கைக்கொண்டுள்ள கொள்கைகளுக்கும், அதுகளை உங்களிடையே நிறைவேற்றி வைக்க ஏற்றுக்கொண்டிருக்கும் பொறுப்புக்கும் தொண்டிற்குமென்றே சொல்லுவேன்.  இதுகளிலிருந்தே எனது கொள்கையையும், தொண்டையும் நீங்கள் அடியோடு ஒப்புக்கொள்ளுகிறீர்கள் என்றும் அதற்கு ஆதரவளிக்கத் தயாராயிருக்கிறீர்கள் என்றும் நான் நினைப்பதோடு எனது கொள்கைகளில் எனக்கு முன்னிலும் அதிகமான திடமும், எனது தொண்டைச் செய்ய முன்னிலும் அதிகமான ஊக்கத்தையும் அடைகிறேன்.  இந்த நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டும் என்னும் விஷயத்தில் நான் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியானது என்னால் ஏற்பட்டதல்லவென்பதும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதும் உங்களுக்கு நன்றாய்த் தெரியும்.

  எந்தக் காலத்தில் நம்முடைய நாட்டில் அன்னியர்கள் பிரவேசித்து நம்மை ஏமாற்றித் தாழ்ந்தவர்களாக்கி நம்மீது ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டார்களோ அந்தக் காலமாகிய ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து வருகிறது.  ஆனாலும், நம்முடைய ஒற்றுமையும் கட்டுப்பாடும் இல்லாத தன்மையாலும் நம்மைப் பிரித்து வைத்து நமக்குள் கட்சிகளையும் துவேஷங்களையும் உண்டு பண்ணி வாழ்க்கை நடத்த நமது எதிரிகள் கைக்கொண்ட தந்திரங்களாலும், அவ்வப்போது அந்தந்த பிரயத்தனங்கள் அருகியே வந்துவிட்டன.  இராமாயண பாரத கால முதற் கொண்டும் அதற்கு முன் வேதகாலம் என்று சொல்லப்படும் கால முதற் கொண்டும் இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே எத்தனையோ போர்கள் நடந்து வந்திருக்கின்றன.  வேதம் என்பதின் முக்கிய பாகமும் அதன் தத்துவமும் என்ன என்பதை நீங்கள் அறிய முற்படுவீர்களானால் நம்முடைய சுயமரியாதையையும், சுதந்திரத்தையும், வாழ்வையும், பெருமையையும் ஒழித்து எதிரிகள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் சூழ்ச்சிகளையே அடிப்படையாகக் கொண்டது என்பதை ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு பதத்திலும் ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு ஒலியிலும் காண்பீர்கள்.  இதை ஒழிக்க கங்கணம் கட்டிய மகாத்மாக்கள் எத்தனையோ பேர்களில் நமது மகாத்மா காந்தியும் ஒருவர்.  இதற்கு முன் ஏற்பட்ட மகான்கள் என்ன கதியை அடைந்தார்களோ அதே கதியை நமது மகாத்மாவும் அடையும்படியாகவே நமது சுயமரியாதை எதிரிகள் செய்துவிட்டார்கள் என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கிறீர்கள் அல்லவா?  ஆதலால் நமது காரியத்தில் நாம் வெற்றிபெறுவது என்பது சுலபமான காரியமல்லவாயினும் அதற்குத் தகுந்த மன உறுதியுடனும், தளரா முயற்சியுடனும் வேலை செய்ய வேண்டியது நமது கடமையாயிருக்கிறது.

  பல காலமாய் அடங்கிக் கிடந்த முயற்சியானது சமீப காலத்தில் அதாவது டாக்டர் நாயர், சர். தியாகராயர் காலத்தில் வெளிக்கிளப்பப்பட்டாலும் முளையளவிலேயே வெம்பிக் காயும்படி நமது எதிரிகள் செய்துவிட்டாலும், மகாத்மா காந்தி காலத்தில் காட்டுத் தீ போல் பரவி சுலபத்தில் அழிந்து விட  முடியாதபடி மக்கள் மனதில் பதியும்படி செய்துவிட்டது.  நான் இத் தொண்டில் ஈடுபடக் காரணமே மகாத்மா காந்தியால்தான்.  மக்கள் சுயமரியாதை அடையாமல் விடுதலையோ  சுயராஜ்ஜியமோ அடைய முடியாது என்பதை அரசியல் முறையில் மகாத்மா காந்தி தான் முதல் முதலாகச் சொன்னதோடு சுயமரியாதை அடைந்து விட்டு, சுயராஜ்ஜியத்தை நினையென்றும் சொன்னார்.  அதாவது நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் சுயராஜ்யம் என்றும், தீண்டாமை ஒழிந்து மக்கள் சமத்துவமடைவதுதான் விடுதலை என்றும் சொன்னதே இந்தக் கருத்தைக் கொண்டுதான். அதனால்தான் சுயமரியாதையின் எதிரிகளான பார்ப்பனர்களும் மகாத்மாவையும் காங்கிரசை விட்டு வெளியில் போகும்படி செய்ய வேண்டியதாயிற்று. அதனால்தான் மற்றும் பல பார்ப்பனரல்லாத அரசியல் தலைவர்கள் என்போரும் இக்கருத்தை தைரியமாய் வெளியில் எடுத்துச்சொல்ல பயப்படுகிறார்கள்.  அதனால்தான் பார்ப்பனர்களும் இக் கொள்கைகளைத் தேசத் துரோகக் கொள்கைகள் என்றும், நாஸ்திகக் கொள்கைகள் என்றும், வகுப்புத் துவேஷக் கொள்கைகள் என்றும் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள்.

  ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் மனப்பூர்வமாய் சரியென்று நினைப்பதை என்ன வரினும் அஞ்சாமல் காரியத்தில் நடத்தி வைக்க முயற்சிக்க வேண்டும். இந்தத் தடவையாவது நமது எதிரிகளின் சூழ்ச்சிகளுக்குப் பயந்து அரை குறையாய் விட்டு விட்டு ஓடிப்போகாமல் கடைசிவரை போராடி அதற்காகவே உயிரைக் கொடுத்து நமது சுயமரியாதையை அடைய வேண்டும்.  சுயமரியாதை அடைந்து விட்டால் சுயராஜ்யம் என்பது கண்மூடி கண் திறப்பதற்குள் தோன்றிவிடும்.  சுயமரியாதை அடைந்த நிலையே சுயராஜ்யம்.  சூரியன் உதயமான பிறகு ஒரு ஆள் வைத்து இருட்டைக் கழுத்தைப் பிடித்துத் தள்ள வேண்டுமா?  அது போலவே சுயமரியாதையான சூரியன் உதயமாகி விட்டால் அடிமைத்தனம், அன்னிய ஆதிக்கம் ஆகிய இருட்டுகள் யாரும் கழுத்தைப் பிடித்துத் தள்ளாமலே தானே இருந்தவிடம் தெரியாமல் ஓடி விடும்.  ஆதலால், உண்மையான சுயராஜ்யம்  அடைவதற்கு சுயமரியாதைதான் ஒரே ஒப்பற்ற மார்க்கம் என்றும், அதுவே மனிதரின் பிறப்புரிமை என்றும் உறுதி கொண்டே அதற்காக உழைக்கும்படி உங்களைப் பிரார்த்திக்கிறேன்.       

(தொடர்ச்சி குடி அரசு 06.02.1927 )

குறிப்பு :  24, 25, 26.01.1927 தேதிகளில்  மாயவரம், திருபுவனம், தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் ஆற்றிய சுயமரியாதைச் சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 30.01.1927

 
Read 47 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.