ஜென்மக்குணம் போகுமா? (குடி அரசு - கட்டுரை - 23.01.1927)

Rate this item
(0 votes)

சுயராஜ்யக் கட்சி பார்ப்பனக் கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத்தோ, ஆசை வார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறதென்றும் பல தடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம்.  அது போலவே இப்போது சட்டசபைத் தேர்தல்கள் முடிந்ததும் தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளக்கூடிய மாதிரியில் தங்களுக்குப் பக்கபலம் இருக்கிறது என்பதாகக் கருதி இப்போது சட்டசபைக்கு பல தீர்மானங்கள் கொண்டு வருகிறார்கள்.  அதாவது - முதலாவதாக தேவஸ்தான சட்டத்தை ஒழிப்பதற்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

 தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமல்ல.  இது தனித்தனி நபர்களுக்குச் சம்பந்தப்பட்டது என்று சொல்லி தேர்தலில் பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்றுவிட்டு இப்போது தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமானதோடு காங்கிரஸ் விஷயமாகச் செய்து விட்டார்கள்.  இத்தீர்மானம் கொண்டு வந்தது கோவை ஜில்லா பிரதிநிதி ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமண ஐயங்காரே ஆவார்.  கோவை ஜில்லாவில் ஸ்ரீமான் டி.ஏ. ராமலிங்கஞ் செட்டியார் அவர்களுக்கு விரோதமாய் ஓடி ஓடி ஓட்டு வாங்கிக் கொடுக்கிற சிகாமணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களோ  தெரியவில்லை.  ஸ்ரீமான் அய்யங்காரை இது யோக்கியமா?  என்று இவர்கள் கேட்பார்களானால் அவர் உடனே சரியான பதில் சொல்லாதிருப்பார் என்றே நினைக்கிறேன்.  அதாவது என் பணத்தினால் ஓட்டு சம்பாதித்தேனே ஒழிய யாருடைய தயவினாலும் எந்த வாக்குத் தத்தத்தினாலும் ஓட்டுப் பெறவில்லை;  என்னிடம் பணம் வாங்காமல் எனக்கு யார் வேலை செய்தார்கள்? ஓட்டுச் செய்தார்கள்? என்று கேட்பார்களாதலால் அய்யங்காருக்கு வேலை செய்தவர்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டியது தான்.

  மற்றொரு தீர்மானம் மற்றொரு பார்ப்பனரால் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  அதாவது பார்ப்பனரல்லாத கட்சி மந்திரி காலத்தில் அரசாங்கக் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருந்ததை இப்போது எடுத்து விடவேண்டுமென்று தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தக் கமிட்டி இருப்பதால் நாலு இரண்டு பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளை  காலேஜில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது.  இந்த நாலோ இரண்டோ பிள்ளைகள் படிப்பது கூட நமது பார்ப்பனர்களாகிய சுயராஜ்யக் கட்சியாருக்கு கண்ணில் குத்துகிறபடியால் அடியோடு காலேஜுகளை பார்ப்பன சத்திரங்களாக்க ஆரம்பித்து விட்டார்கள்.  இதெல்லாம் பார்ப்பனருடைய தப்பிதம் அல்ல. பின்னை யாருடையதென்றால் அவர்கள் பின் திரிந்த, திரியும், திரியப்போகும் பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் தப்பிதமேயாகும் என்பதே நமது அபிப்பிராயம். இன்னமும் என்ன என்ன நடக்குமோ பார்ப்போம்.

(குடி அரசு - கட்டுரை - 23.01.1927)

Read 39 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.